ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களிலிருந்து மருத்துவ சிகிச்சைக்கு என அழைத்து வரப்பட்ட அகதிகள் ஆஸ்திரேலிய ஹோட்டல்களில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். இதில் சுமார் 65 அகதிகள் வேறொரு ஹோட்டலுக்கு இடமாற்றப்பட்டதற்கு கடுமையான எதிர்ப்புகள் எழுந்துள்ளன.
“முந்தைய ஹோட்டலில் ஜன்னல் இருந்தது. அதன் மூலம் வெளியில் எங்கள் பார்த்து புன்னகைப்பதையும் கையசைப்பதையும் பார்க்க முடிந்தது. இப்போதைய ஹோட்டலில் எந்த ஜன்னலும் இல்லை,” எனக் கூறியிருக்கிறார் ஹோட்டலில் சிறைவைக்கப்பட்டுள்ள அகதியான Mostafa Azimitabar.
ஆப்கானிஸ்தானின் ஏகாதிபத்திய போரிலிருந்து, இலங்கையின் இனப்படுகொலைப் போரிலிருந்து, ஈரானிலிருந்து என உலகின் பல நாடுகளில் அச்சுறுத்தலை எதிர்கொண்ட
நூற்றக்கணக்கான மக்கள் அகதிகளாக ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்திருக்கிறார்கள். இவர்கள் பல ஆண்டுகளாக மனுஸ்தீவு, நவுருத்தீவு ஆகிய கடல் கடந்த தடுப்பு முகாம்களில் சிறைவைக்கப்பட்டிருந்த நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்கு என சுமார் ஓராண்டுக்கு முன்பு அழைத்துச் செல்லப்பட்டார்கள்.
இந்த அகதிகளே தற்போது ஆஸ்திரேலிய ஹோட்டல்களில் சித்ரவதைகளுக்கு உள்ளாகி வருவதாகக் கூறப்படுகின்றது. இந்த ஹோட்டல்களை ஆஸ்திரேலிய அரசு தடுப்பிற்கான மாற்று இடமாகப் பயன்படுத்தி வருகிறது.
“மனுஸ்தீவில் இருந்ததை விட ஆஸ்திரேலியாவில் இருப்பது சிரமமாக இருக்கிறது. ஒரு மணி நேரம் உடல்பயிற்சிக்காக அறையில் இருந்து வெளியில் அனுமதிக்கப்படுகிறோம். அதன் பின்னர் நாள் முழுதும் படுக்கையிலும் நாற்கலிலுமே கழிக்கிறோம்,” என கார்டியன் ஊடகத்திடம் தெரிவித்திருக்கிறார் ஓர் அகதி.