விக்டோரியாவில் காணாமல்போன தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஆபத்தான நிலையில் மீட்பு!

அவுஸ்திரேலியாவில் விக்டோரியாவின் மேற்குப் பகுதியிலுள்ள Colac-Lavers Hill வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது காணாமல்போன இலங்கையைச் சேர்ந்த தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Boxing day அன்று Delahey பகுதியைச் சேர்ந்த 30 வயதான இந்நபரும் அவரது நண்பரும் வெவ்வேறு மோட்டார் சைக்கிள்களில் Colac-Lavers Hill வீதியால் சென்றுகொண்டிருந்ததாகவும் இரவு 8 மணியளவில் இருவரும் வெவ்வேறாக பிரிந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் நீண்டநேரமாகியும் தனது நண்பர் குறிப்பிட்ட இடமொன்றிற்கு வராததையடுத்து அச்சமடைந்த சக நண்பர் அவசர சேவைகள் பிரிவுக்கு அறிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து வான் மற்றும் தரை வழியாக தேடுதல் நடத்திய காவல் துறை அவசர சேவைப் பிரிவினரும் சுமார் 15 மணிநேரங்கள் கழித்து குறித்த இளைஞரைக் கண்டுபிடித்தனர்.

வீதியோரம் இருந்த தடுப்பொன்றில் மோதி விபத்துக்குள்ளாகி ஆபத்தானநிலையில் இருந்த அவர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக கால் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.