மன்னார் தீவுக்கடலில் பெற்றோல் உண்டு என்ற கதையாடல் மட்டுமல்ல, பெட்ரோலிய ஆய்வுகளுக்கு வெளிநாட்டு நிறுவனங்களை இலங்கை அரசாங்கம் அழைந்திருந்தமை எல்லாம் நாம் அறிந்த செய்தி.
ஆனால் மன்னார் தீவின் கனியவளங்கள் மீது வெளிநாட்டு நிறுவனங்கள் குறிப்பாக அவுஸ்திரேலிய நிறுவனமொன்று ‘கண்’ வைத்திருப்பது மட்டுமல்லாது அவ்வளங்களை சத்திமில்லாமல் ஏற்றுமதி செய்துவருவதான தகவல்கள் தற்போது வெளிச்சத்துக்கு வரத் தொடங்கியுள்ளன.
26 கி.மீ நீளமும் 8 கி.மீ அகலமும் கொண்ட மன்னார்தீவின் மணலில் இல்மனைட் என்ற கனிய வளங்கள் உள்ளன. இக்கனிமம், வண்ணப்பூச்சுகள், மை, பிளாஸ்டிக் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் மதிப்புமிக்க வெள்ளை நிறமியான டைட்டானியம் டை ஆக்சைட்டின் முக்கிய ஆதாரமாகவுள்ளமையே மன்னார் மீது கண்வைக்க காரணமாக அமைந்துள்ளது.
இது தொடர்பில் அவுஸ்திரேலிய ஊடகமான ABC செய்தி ஆய்வொன்றினை Mannar Island is a bird paradise that survived Sri Lanka’s civil war. Now an Australian mining company wants its sand எனும் தலைப்பில் வெளியிட்டுள்ளது. (அவுஸ்திரேலியாவில் குடிபெயர்ந்துள்ள மன்னாரைச் சேர்ந்த முஸ்லீம் பெண்ணொருவரை செய்தி ஆதாரமாக கொண்டு இச்செய்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்ததோடு, அப்பெண் சுற்றுச்சூழல் தொடர்பிலான விடயத்தில் விடுதலைப் புலிகள் மீதான தனது காழ்ப்புணர்வையும் அவர் வெளியிட்டுள்ளார் என்ற விமர்சனமும் பலரால் முன்வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இறால் பண்ணை வியாபார பிண்ணியைக் கொண்ட அவர், சுற்றுச்சூழல் தொடர்பில் அக்கறை கொண்டதாக வெளிப்படுத்தியிருப்பதும் முரண்பாடனாகவும் அவதானிக்கப்பட்டுள்ளது.)
கடந்த 2017ம் ஆண்டு தொடக்கம் அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்காவைச் சேர்ந்த நிறுவனங்கள் சில இணைந்து மன்னார் மாவட்டத்தில் உள்ள ஏராளமான பகுதிகளில் துளையிட்டு மண் திட்டுக்கள் மற்றும் மணல் தொடர்பாக கனியவள ஆய்வுகளை மேற்கொண்டிருந்தது. இவைகள் சிறிலங்காவின் மத்திய அரசின் நேரடி அனுமதியுடன் இடம்பெற்றனவே அன்றி, உள்ளூர் கனியவள திணைக்களத்திடமோ பிரதேச செயலகத்திடமோ அனுமதி பெறாமலேயே இடம்பெற்றிருந்தன.
இந்த ஆய்வுகள் ஊடாக 264.93 மெற்றிக் தொன் கனியவளம் மன்னார் பகுதியில் இருப்பதோடு, அவற்றில் குறிப்பாக இல்மனைற் போன்ற விலை உயர்ந்த கனிய வளங்கள் தவிர ஆகாய விமானங்கள் தயாரிக்க பயன்படும் தைத்தானியம் உள்ளதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுவே மன்னார் மீது கண்வைக்க காரணமாக அமைந்தந நிலையில், அவுஸ்திரேலியாவின் பெர்த் நகரை தளமாக கொண்டு இயங்கும் டைட்டானியம் சாண்ட்ஸ், ஒஸ்திரேலிய செக்யூரிட்டீஸ் எக்ஸ்சேஞ்ச் (ஏஎஸ்எக்ஸ்)க்கு ஸ்ரீனல் ஹோல்டிங்ஸ் லிமிடெட் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் ஊடாக மன்னார் தீவின் கனியவளங்களை இலக்கு வைத்துள்ளமை அவுஸ்திரேலிய ஊடகத்தின் செய்தி ஆய்வின் மூலமாக வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மன்னார் தீவின் 2 கி.மீ அகலமும் சுமார் 8 கி.மீ நீளமும் கொண்ட ஒரு பகுதியை தமது நிறுவனம் சுரங்கப்படுத்த எதிர்பார்பதாக டைட்டானியம் சாண்ட்ஸின் நிர்வாக இயக்குனர் ஜேம்ஸ் சியர்ல் கூறுகின்றார். வருடாந்திர அடிப்படையில் இது 10 முதல் 16 ஹெக்டேர் வரையிலான பிராந்தியத்தில் சுரங்கழ்வாக இருக்கலாம் எனவும், இது அநேகமாக 30 ஆண்டுக்கு மேலான அகழ்வாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துளார்.
ஆனால் சில இலங்கை விஞ்ஞானிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த திட்டம் குறித்து தங்களுக்கு போதிய தகவல் கொடுக்கப்படவில்லை என ஒஸ்றேலிய ஊடகம் தெரிவித்துள்ளது.
இதனை எழுதிக்கொண்டிருக்கும் வேளை ஒஸ்றேலிய நிறுவனத்தின் கனியவள மண் அகழ்விற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில் மன்னாரின் சுற்றுச் சூழலை பாதுகாக்கும் அமைப்பும் இணைந்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடத்தியுள்ள செய்தி வெளிவந்துள்ளது.
மன்னாரின் சுற்றுச் சூழலை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைவோம், கடலில் தாழும் மன்னார் தீவை பாதுகாப்போம்,வெள்ளம் வரும் முன்னர் அணைகட்டுவோம், உள்ளிட்ட வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்திருந்தனர்.
கவனயீர்ப்பு போராட்டத்தின் ஊடாக இவ்விவகாரம் பொதுமக்களின் கவனத்தினை ஓரளவு பெற்றுள்ளது என உணரக்கூடியதாக இருந்தாலும், தமிழர் தாயகத்தின் தமிழ்சமூக-அரசியல் வெளியில் இது தொடர்பிலான அவதானிப்பு, விழிப்பு போதியளவு இல்லை என்றே தெரிகின்றது. Change இணையத்தளமூலமாக இது தொடர்பிலான Stop planned sand mining that threatens Mannar Island’s fragile eco-system மின்னொப்ப வேட்டையொன்றும் இடம்பெற்று வருகின்றது. (https://www.change.org/p/his-excellency-gotabaya-rajapaksa-president-of-the-democratic-socialist-republic-of-sri-lanka-stop-planned-sand-mining-that-threatens-mannar-island-s-fragile-eco-system)
இக்கனியவள ஆய்வுக்காக 3704 வௌ;வேறு பகுதிகளில் ஆழமாக துளையிட்டு மணல் அகழ்வு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. பெரும்பான்மை துளைகள் 1 முதல் 3 மீற்றர் வரை இருந்துள்ளது. 12 மீற்றர் வரையும் துளைகள் சென்றுள்ளது. இவைகள் உரிய அனுமதி இன்றியே இடம்பெற்றதாக சிறிலங்கா அரச ஒரு சில அதிகாரிகள் ஊடகங்ளுக்கு கூறப்பட்டாலும், அது தொடர்பிலான முறையான விசாரணைகளோ, முறைப்படுத்தலோ ஏதம் நடந்துவிடவில்லை. வெளிநாட்டு நிறுவனங்களுடனான பேரங்களும், அரசுகளுக்கு இடையிலான திரைமறைவு உடன்பாடுகள்; ஒருபுறமிருக்க ஆக்கிரமிக்கப்பட்ட தேசத்தின் மீது சுரண்டல்கள் என்பது ஆக்கிரமிப்பாளர்களின் பண்பாகவே உள்ளது.
கனிய வளங்கள் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், தனது ஆய்வுகளை விரிவாக்கம் செய்தும் பணியிலேயே ஒஸ்றேலிய நிறுவனம் தொடர்ந்தும் ஈடுவதாக ஒரு தரப்பால் கூறப்பட்டாலும், அகழ்வு இடம்பெறுவதாகவே அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
‘எங்கள் ஆய்வு பணிகள் வசிப்பிடம் இல்லாத மற்றும் செயலில் விவசாயம் இல்லாத பகுதிகளில் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன.’ என ஒஸ்றேலிய நிறுவன அதிகாரி ஒஸ்றேலிய ஊடகத்துக்கு தெரிவித்துள்ளதோடு, கனிம மணல் சுரங்கமானது வேறு சில வகையான சுரங்கங்களுடன் ஒப்பிடும்போது சுற்றுச்சூழலில் மிகவும் குறைந்த தாக்கத்தையே கொண்டிருக்கும் என தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலிய நிறுவனங்களுக்கு இது புதிதல்ல. வட அவுஸ்திரேலியாவில் முன்னொரு காலத்தில் பெருத்த மனித வளத்துடன் நிலக்கரிக்களுக்காக ஒஸ்றேலிய பழங்குடி மக்களின் நிலங்களை அபகரித்து அகழ்ந்த ஓய்ந்த இந்நிறுவனங்கள், தற்போது புதிய தொழில்நுட்பத்துடன் புதிய புதிய கனிய வளங்களுக்கான அந்நிலங்களில் தோண்டி வருகின்றன. தங்கச் சுரங்கம் போன்ற தாதுக்களின் வேதியியல் பிரிப்பு அல்லது நிலக்கரி சுரங்களுக்கான தமது நிலங்கள் பறிபோவதற்கு எதிராக ஒஸ்றேலிய பழங்குடிகள் இன்றும் தொடர்சியான போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு கனியவளங்களில் ருசி கண்ட நிறுவனங்களில் ஒன்றுதான் தற்போது மன்னாரில் ருசி கண்டுள்ளது.
கடற்கரைகளுக்கு அருகில் சுரங்கப்பாதை கடலோர உருவ அமைப்பைத் பாதிப்பதோடு, மற்றும் தாவரங்களை அகற்றுவது மணல் திட்டுகளை அரிப்புக்குள்ளாக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக மன்னார் தீவகப் பகுதியானது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1 தொடக்கம் 10 மீற்றர் வரையான அளவு கீழே அமைந்துள்ளது. மன்னார் கடல் எல்லைப் பகுதிகளை சூழ்ந்துள்ள மணல் மேடுகளும் பவளப் பாறைகளுமே மன்னார் தீவுப் பகுதிக்குள் கடல்நீர் இதுவரை காலம் உட்புகாமலும் சுனாமி போன்ற பேரனர்த்தங்கள் தாக்காமலும் பாதுகாத்து வருகின்றன.
இத்தீவக பகுதியில் இருந்து அதிகளவான மணல் உள்ளூர் மற்றும் வெளியூர் நபர்களால் சட்டவிரோதமாக கடத்தப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதான செய்திகளும் வெளிவந்தவண்ணமே உள்ளன என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.
‘கரையோரத்தில் உள்ள பகுதிகள் எங்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை, ஏனென்றால் அவை சுற்றுச்சூழல் உணர்திறன் கொண்டவை என்று நாங்கள் கருதுகிறோம். அருகிலுள்ள கடற்கரையிலிருந்து ஒன்று முதல் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள உட்புறத்தில் நாங்கள் அதிக அக்கறை கொண்டுள்ளோம்.’ என ஒஸ்றேலிய நிறுவன அதிகாரி தெரிவிக்கின்றார்.
இலங்கைதீவின் மழை பெய்யும் அளவீட்டில் மன்னார் பகுதிய குறிப்பிட்டளவு மழையினை கொண்ட பகுதியாக காணப்படுவதோடு, நிலத்தடி நீரை மட்டுமே நம்பியிருக்கும் நிலையே காணப்படுகின்றது. இந்நிலையில் இந்த அகழ்வு நிலத்தடிநீரை பாதிக்கும் என்ற குற்றச்சாட்டுக்களும் காணப்படுகின்றன.
நிலத்தடி நீரை பாதிக்கும் என்றால், நாங்கள் அதை செய்ய மாட்டோம் எனக்கூறும ஒஸ்றேலிய நிறுவனம், 200 முதல் 600 பேருக்கான வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் என்றும், அதில் 95 சதவீதம் பேர் இலங்கையர்களாக இருப்பார்கள் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
‘மன்னார்தீவின் பூர்வீக குடிகளாகிய நாம், எமது மண்ணை அந்திய நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய ஒரு போதும் அனுமதியோம்’ என கனிமளவள அகழ்வுக்கு எதிரானா கவனயீர்ப்பு போராட்டத்தின் போது சிறுமி ஒருவரினால் பிடிக்கப்பட்டிருந்த வாசகமாகவுள்ளது.
ஒருபுறம் தமிழர் தேசத்தினை ஆக்கிரமிப்புச் செய்துள்ள சிங்கள பேரினவாதம், பொதுமக்களின் காணிகளை அபகரிப்புச் செய்வதும், தொல்பொருள் திணைக்களம் போன்ற தனது திணைக்களங்கள் ஊடாக தமிழர் நிலங்களை அபகரித்து வருவதும் தொடர்கதையாக இருக்கின்றது.
மறுபுறம் தமிழர் தேசத்தின் வளங்களை இலக்குவைத்து தென்னிலங்கைக்கு ஏற்றுமதி செய்வதும், வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கூறுபோட்டி விற்பனை செய்வதும் தொடர்கதையாக இருக்கின்ற நிலையிலேயே தமிழர் தேசத்தின் கனிய வளங்கள் மீதான இலக்குகள் வெளிச்சத்துக்கு வருகின்றன.
தாயகம் மட்டுமல்ல, புலம்பெயர் தமிழ் சமூக-அரசியல் செயற்பாட்டாளர்கள் தேசமாக சிந்தித்து தேசத்தின் வளங்களை காக்கவும், இதற்கு எதிராக உரக்க குரல்களை ஒலிக்கவும் வேண்டிய தேவை உடனடியாகவுள்ளது.