தற்போது நிலவும் கொவிட்-19 கொரோனா தொ ற்று நிலைமையைக் கருத்தில் கொண்டு மாகாண சபை தேர்தலை ஒத்திவைப்பது என அரச கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்
இருப்பினும், நாட்டுக்கு மாகாண சபை அமைப்பு தேவை என்று அரச கட்சியின் பாராளுமன்ற உறுப் பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், மாகாண சபை தேர்தல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து ஜனாதிபதி தலைமையில் அரச கட்சித் தலைவர்கள் கூட்டம் நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இதேவேளை மாகாண சபை தேர்தலை நடத்துவது குறித்து இறுதி முடிவு இன்னமும் எடுக்கப்படவில்லை எனக் குறிப்பிட்டுள்ள அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் இன்னமும் பல சுற்று பேச்சுவார்த்தைகள் அவசியம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மாகாண சபை முறை பெரும் சேவையாற்றியுள்ளது எனக் குறிப்பிட்டுள்ள எஸ்எம் எஸ் சந்திரசேன இதன் காரணமாக அது தொடர்வது அவசியம் எனத் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக கொரோனா வைரஸ் நிலைமையைக் கருத்தில் கொண்டு தற்காலிகமாக தேர்தலை ஒத்திவைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டும் என்பதே அரசின் கொள்கை எனத் தெரிவித்துள்ள காமினி லொக்குகே புதிய தேர்தல் முறைமையை உருவாக்கிய பின்னர் தேர்தலை நடத்துவதா அல்லது கொரோனா சூழ்நிலையில் தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து ஆராயப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
புதிய தேர்தல்முறையின் கீழ் மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும் என்பதே தங்கள் நிலைப்பாடு என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு எனக் குறிப்பிட்டுள்ள அமைச்சர் வாசுதேவ நாணயக்கார எனினும் நாட்டின் கொரோனா வைரஸ் நிலவரமே இதனைத் தீர்மானிக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
உரிய தருணத்தில் தேர்தலை நடத்த வேண்டும் என ஜனாதிபதி தெரிவித்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.