வௌவாலுக்கு வைத்த துப்பாக்கிக் குறி தவறி தாதியைப் பதம் பார்த்தது

மட்டக்களப்பு கண்ணகி அம்மன் கோவில் 3ஆம் குறுக்கு வீதியில் எந்திரி ஒருவர் தாதியரின் மரத்தில் இருந்த வௌவால் மீது எயார்கண் துப்பாக்கியால் சுட்டதில் குறி தவறி எதிர் வீட்டின் தாதி உத்தியோகத்தர் ஒருவர் மீது குண்டு பட்டதில் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டுள்ள சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (22) இரவு இடம்பெற்றுள்ளது.


சம்பவத்தில் தொடர்புபட்ட எந்திரியைக் கைது செய்ததுடன் துப்பாகியை மீட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையகப் காவல் துறையினர்  தெரிவித்தனர்.

இதில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமை யாற்றும் 55 வயதுடைய நடராசா ராதா என்பவரே படுகாயம டைந்துள்ளார்.

குறித்த வீதியில் வசிக்கும் கொழும்பில் அரச திணைக்களத்தில் கடமையாற்றும் எந்திரி சம்பவ தினமான நேற்று (22) இரவு 9.30 மணியளவில் வீட்டின் முன்பகுதியில் இருந்த மாமர வௌவால் மீது தனது எயார்கண் துப்பாகியைப் பயன்படுத்தி வீட்டின் மேல் மாடியில் இருந்தவாறு சுட்டுள்ளார்.

இதன் போது எதிர் வீட்டின் தாதி சத்தம் கேட்டு வெளியில் வந்தபோது அவர் மீது வௌவாலுக்கு வைத்த குறி தவறி தாதி மீது குண்டு பாய்ந்ததில் அவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிசாரின் ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து துப்பாக்கிச் சூடு நடத்திய எந்திரியைக் கைது செய்ததுடன் துப்பாக்கியை மீட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு காவல் துறை  பொறுப்பதிகாரி பி.கே. ஹோட்டியாராச்சி தலைமையில் பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி காவல் துறை  உதவி பரிசோதகர் எம்.முகமட் மற்றும் தடயவியல் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.