யாழ். மாநகர சபை புதிய மேயர் யார்?

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இரண்டாவது தடவையும் தோற்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாநகர சபையின் புதிய மேயர் தெரிவு எதிர்வரும் 30ஆம் திகதி புதன்கிழமை நடைபெறவுள்ளது. வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ம. பற்றிக் டிறஞ்சன் இதற்கான அறிவித்தலை விடுத்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியமைத்துள்ள யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் இரண்டாவது தடவையாகக் கடந்த 16ஆம் திகதி, மாநகர மேயர் இம்மானுவல் ஆனோல்ட்டால் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 21 வாக்குகளும், எதிராக 24 வாக்குகளும் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 3 வாக்குகளினால் அது தோற்கடிக்கப்பட்டது.

இதனால், சட்ட ஏற்பாடுகளுக்கமைய மேயர் ஆனோல்ட் பதவியை இழக்க நேரிட்டது. இதனைத் தொடர்ந்து யாழ். மாநகர சபைக்குப் புதிய மேயர் ஒருவரைத் தேர்ந் தெடுப்பதற்கான கூட்டம் எதிர்வரும் 30ஆம் திகதி புதன்கிழமை இடம்பெறும் என இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, யாழ். மாநகர சபை மற்றும் நல்லூர் பிரதேச சபை என்பவற்றில் ஆட்சியமைப்பது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடனும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியுடனும் (ஈ.பி.டி.பி.) நாம் நேரில் பேச்சு நடத்தவுள்ளோம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான பங்காளிக் கட்சியான இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.