ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயற்சித்து நவுருத்தீவில் உள்ள கடல் கடந்த தடுப்பில் சிறைவைக்கப்பட்ட அகதிகளுக்கு பிறந்த சுமார் 170 குழந்தைகள் நிச்சயமற்ற நிலையை எதிர்நோக்கியுள்ளதாகக் கூறப்படுகின்றது. இதில் 125 குழந்தைகள் ஆஸ்திரேலியாவிலும் மற்ற குழந்தைகள் கடல் கடந்த தடுப்பு தீவுகளிலும் பிறந்தவை எனக் கூறப்படுகின்றது.
இவ்வாறு சமீபத்தில் எத்தனை குழந்தைகள் பிறந்துள்ளனர் அல்லது இக்குழந்தைகளில் எத்தனை பேர் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர் என்ற தகவலை வழங்க ஆஸ்திரேலிய உள்துறை மறுத்திருக்கிறது.
நவுரு தடுப்பில் வைக்கப்பட்டிருந்த அகதிகளுக்கு சுமார் 7 ஆண்டுகாலத்தில் பிறந்த இக்குழந்தைகள் ஆஸ்திரேலிய படகு கொள்கையினால் நாடற்ற நிலையை எதிர்நோக்கியுள்ளனர். சில குழந்தைகள் தங்களது (அகதி) பெற்றோரிடமிருந்து நிரந்தரமாக பிரிந்திருக்க வேண்டிய சூழலும் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் பிறந்து தற்போது இரண்டு வயதாகும் எஸ்ஹல் ஹைதர் நாடற்ற நிலையில் உள்ள குழந்தைகளில் ஒருவராவார். முன்னதாக, பாகிஸ்தான் அகதிகளான ஜிஜா ஹைதரும் மெஹ்ரீன் இப்ராஹூமும் நவுருத்தீவில் சந்தித்து திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர். இந்த சூழலில், 2017ம் ஆண்டு நவுருவிலிருந்து மெஹ்ரீனை இடமாற்றும் பொழுது அவர் கர்ப்பமாக இருந்திருக்கிறார். பின்னர் 2019ல் எஸ்ஹல் ஒரு வயதாக இருந்த பொழுது இவரது தந்தையான ஜிஜா ஹைதர் ஆஸ்திரேலியாவுக்கு இடமாற்றப்பட்டு Adelaide குடிவரவுத் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளார்.
கொரோனா பெருந்தொற்று சூழல் காரணமாக தடுப்பு முகாம்களுக்கு பார்வையாளர்களை அனுமதிக்க மறுத்ததைத் தொடர்ந்து ஜிஜா ஹைதர் அவரது குழந்தையை காணொளி அழைப்புகள் மூலம் மட்டுமே காண்கிறார்.
“நான் யாரையும் கொலை செய்யாத போதிலும் யாரையும் தாக்கவில்லை போதிலும் நான் படகில் வந்ததற்காக சிறைவைத்துள்ளார்கள். ஆனால் எனது குழந்தை என்ன செய்தது?” என்ற கேள்வியை அகதியான ஜிஜா ஹைதர் முன்வைக்கிறார்.