அகதிகளை இடமாற்றிய ஆஸ்திரேலிய அரசு

பப்பு நியூ கினியா மற்றும் நவுரு ஆகிய தீவுகளில் செயல்பட்டு வரும் ஆஸ்திரேலிய கடல் கடந்த தடுப்பு முகாம்களிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 60 அகதிகள் வேறு ஹோட்டலுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளனர்.

இந்த இடமாற்றம் அகதிகள் நல ஆர்வலர்களின் கடும் எதிர்ப்புக்கும் போராட்டத்துக்கும் மத்தியில் நடந்துள்ளது.

மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு இந்த அகதிகள் சுமார் ஓராண்டாக தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் மெல்பேர்ன் நகரில் உள்ள ஹோட்டலிலேயே சிறைவைக்கப்பட்டிருந்தனர்.

முன்னதாக, இவர்களை அடையாளம் குறிப்பிடா இடத்திற்கு மாற்ற அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியதை தொடர்ந்து அகதிகள் நல செயல்பாட்டாளர்கள் தொடர் போராட்டத்தை நடத்தி வந்தனர். இந்த சூழலில் பல்வேறு எதிர்ப்புக்கு மத்தியிலேயே அகதிகளை வேறு இடத்துக்கு ஆஸ்திரேலிய அரசு இடமாற்றியுள்ளது.

தற்போதைய நிலையில், மருத்துவ வெளியேற்றச் சட்டத்தின் கீழ் மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட சுமார் 194 அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த அகதிகளை சமூகத்திற்குள் விடுவித்து ஆஸ்திரேலியாவிலேயே வாழ அனுமதி வேண்டும் என்பது அகதிகள் நல ஆர்வலர்கள் கருத்தாக இருக்கிறது.

படகு வழியாக தஞ்சமடைந்தவர்கள் ஒருபோதும் ஆஸ்திரேலியாவில் குடியமர்த்தப்பட மாட்டார்கள் என ஆஸ்திரேலிய அரசு கூறிவருகிறது. அந்த வகையில் படகு வழியாக தஞ்சமடைந்த இந்த அகதிகள் சுமார் 8 ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.