மட்டு.,அம்பாறை மாவட்டங்களில் திட்டமிடப்பட்டுள்ள முன்மொழிவுகள் ஆராய்வு

புதிய அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைக்கமைவாக மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் அடுத்த ஆண்டில் அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள முன்மொழிவுகள் தொடர்பாக ஆராயப்பட்டு வருகின்றது.


இவ்விரு மாவட்டங்களிலும் மேற்கொள்ளப்படவுள்ள நவீன அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்மொழிவுகளை ஆராயும் மாநாடு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யகம்பத் தலைமையில் நேற்று(17) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் டீ.எம்.எல். பண்டாரநாயக்க, கிழக்கு மாகாண திணைக்களங்களின் பணிப்பாளர்கள், மாவட்ட திணைக்களங்களின் பணிப்பாளர்கள், அரச திணைக்களங்களின் உயர் அதிகாரிகள் பலரும் பிரசன்னமாகியிருந்தனர்.

நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் நிலைபேறான அபிவிருத்தித்திட்டங்களில் விவசாயம் மற்றும் சிறு கைத்தொழில், குளங்கள் அபிவிருத்தி, கால்நடை வளர்ப்பு போன்ற முக்கிய விடயங்கள் தொடர்பான முன்மொழிவுகள் இதன்போது ஆராயப்பட்டன.