ஈழத்தில் இருந்து வந்து புகலிடம்கோரிய தமிழ் இளைஞர் ஒருவர் அவுஸ்திரேலியா பிரிஸ்பேர்னில் தற்கொலை செய்து மரணமடைந்துள்ளார்.
மட்டக்களப்பு, பட்டிருப்பு தொகுதி மண்டூரைச் சேர்ந்த கிசோபன் ரவிச்சந்திரன் என்ற 25 வயது இளைஞரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக குயின்ஸ்லாந்து புலம்பெயர் தமிழர் அமைப்பு தெரிவித்துள்ளது.
2012ம் ஆண்டு படகு மூலம் ஆஸ்திரேலியா வந்து சிட்னி மற்றும் பிரிஸ்பேர்ன் நகரங்களில் வாழ்ந்துவந்த கிசோபன், கடந்த டிசம்பர் 2ம் திகதி பிரிஸ்பேர்னில் வைத்து தனது உயிரை மாய்த்துக்கொண்டதாக கிசோபனின் நெருங்கிய நண்பரும் குயின்ஸ்லாந்து புலம்பெயர் தமிழர் அமைப்பைச் சேர்ந்தவருமான தயா தெரிவித்தார்.
ஆஸ்திரேலியா வந்த நாள் முதலே bridging விசாவில் வாழ்ந்துவந்த கிசோபன், தனது எதிர்காலம் குறித்து மிகவும் அச்சமடைந்திருந்ததாகவும், குடிவரவுத் திணைக்களத்தின் நேர்காணல்களுக்கு முகம்கொடுக்க முடியாத அளவிற்கு தொடர்ச்சியான மன அழுத்தத்தினால் அவர் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தயா தெரிவித்தார்.
நண்பர்களின் உதவியுடன் வாழ்ந்துவந்த கிசோபனுக்கு மனநல உதவிகளை வழங்கும் பொருட்டு Multicultural Australia அமைப்பு அவரைப் பொறுப்பேற்று தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்திருந்த நிலையில் அவர் தனது வாழ்வை முடித்துக்கொண்டதாக தயா குறிப்பிட்டார்.
கிசோபனின் இறுதிநிகழ்வு நாளை 18ம் திகதி Kenton Ross funerals-இல் நடைபெறவுள்ளதாகவும், குடிவரவுத் திணைக்களம், நண்பர்கள் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் அவரது இறுதிச்சடங்குகளை நடத்தவுள்ளதாகவும் குயின்ஸ்லாந்து புலம்பெயர் தமிழர் அமைப்பைச் சேர்ந்த ரமேஷ் தெரிவித்தார்.