உடல் தகுதியை எட்டினால் இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் கேமரூன் கிரீன் விளையாடுவார் – லாங்கர் தகவல்

உடல் தகுதியை எட்டினால் இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் கேமரூன் கிரீன் விளையாடுவார் என ஆஸ்திரேலிய பயிற்சியாளர் லாங்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் ஆஸ்திரேலியாவின் ஆல் ரவுண்டரான கேமரூன் கிரீன் இடம் பெற்று உள்ளார்.

இவர் இந்தியாவுக்கு எதிரான 2-வது பயிற்சி ஆட்டத்தில் (பகல்-இரவு) பந்து வீசிய போது பும்ரா அடித்த பந்து தலையில் தாக்கியது. இதனால் நிலை குலைந்த கேமரூன் கிரீன் தரையில் அமர்ந்தார். இதில் அவர் சிறிது அதிர்ச்சியான உணர்வு அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவுக்கு எதிராக நாளை மறுநாள் தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் கேமரூன் கிரீன் இடம் பெறுவாரா என்று ஆஸ்திரேலிய பயிற்சியாளர் லாங்கரிட்டிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதுகுறித்து அவர் கூறியதாவது:-

கேமரூன் கிரீன் ஒரு திறமை மிக்க இளம் வீரர். உள்ளூர் கிரிக்கெட்டில் அவர் சிறந்த திறமையை வெளிப்படுத்தி ஆஸ்திரேலிய அணியில் இடம்பிடித்துள்ளார். பயிற்சி ஆட்டத்தில் அவரது தலையில் பந்து தாக்கிய சம்பவம் அசாதாரணமானது. நாங்கள் மூளை அதிர்ச்சி நெறிமுறைகளை கடந்து செல்கிறோம். அவர் உடல் தகுதியுடன் இருந்தால் நிச்சயமாக முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுகப்படுத்தப்படுவார். இது ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கும் கேமரூன் கிரீனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் உற்சாகமாக இருக்கும்.

தொடக்க வீரர் ஜோ பர்னஸ் மிகவும் நல்ல வீரர். ஒருநாள் இரவில் உங்களது திறமையை இழந்து விடமாட்டீர்கள். நான் முழு நேரமும் தனிப்பட்ட முறையில் மட்டும் பகிரங்கமாக பர்னசுக்கு ஆதரவு அளித்து வருகிறேன். எந்த ஒரு வீரருக்கும் ரன்கள் மிகப்பெரிய மதிப்பு என்பதை அவர் நன்கு உணர்ந்திருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்தியாவுக்கு எதிரான பயிற்சிஆட்டத்தில் தொடக்க வீரராக களம் இறங்கிய ஜோ பர்னஸ் சொதப்பியதால் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில் ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் சதம் அடித்தார்.