கொவிட்-19 வைரஸ் தொற்று இல்லாத ஒருவரை கொரோனா சிகிச்சை நிலையத்தில் சேர்ரத்த உடுவில் சுகாதார வைத்திய அதிகாரிகளின் செயலால் குடும்பஸ்தர் ஒருவர் மனநலப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார்.
மருதனார்மடம் பொதுச்சந்தையில் வெற்றிலைக் கடை நடத்தும் குடும்பஸ்தர் ஒருவர், சுன்னாகம் பகுதியில் வசித்து வருகின்றார். அவரிடமும் மாதிரி பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்குக்கு உட்படுத்தப்பட்டது.
இருப் பினும் அதன் பெறுபேறை நேற்று வரை அவருக்குத் தெரியப்படுத்தாத நிலையில் நேற்று அவரது வீட்டுக்குச் சென்ற சுகாதார அதிகாரிகள் குழுவினர் கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு உடன் வாருங்கள் எனக் கூறி அழைத்தனர். இதனால் குறித்த நபரும் வாகனத்தில் ஏறிப் பயணித்துள்ளார்.
அவருடன் கூட சுன்னாகம் – கண்ணகி முகாமில் வசிக்கும் ஒரு கொரோனா நோயாளியையும் ஏற்றிக்கொண்டு வேறு ஒருவரது முகவரியைத் தேடித் திரிந்த சுகாதார அதிகாரிகள், அதன் பின்னர் கோப்பாய் கல்வியியல் கல்லூரியில் இயங்கும் கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு வந்தடைந்தனர். அதன்போது கோப்பாய் கல்வியியல் கல்லூரி வாசலில் பதிவேட்டைப் பரிசீலித்தவர் கொரோனா நோயாளர் பெயர்ப்பட்டியலில் குறித்த குடும்பஸ்தரின் பெயர் இல்லை எனக் கூறி அவருடன் வந்த இரண்டாவது நோயாளியை மட்டும் சிகிச்சை நிலையத்துக்கு அனுமதித்தார்.
இதையடுத்து குறித்த குடும்பஸ்தர் மீண்டும் அதே வாகனத்தில் வீட்டுக்குக் கொண்டு வரப்பட்டு இறக்கப்பட்டார்.
தான் கொரோனா நோயாளியுடன் வாகனத்தில் பயணித்தமையால் தனக்கு உண்மையில் கொரோனாத் தொற்று ஏற்படுமா என அவர் அஞ்சி மனநலப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார்.
இது தொடர்பில் அவரின் குடும்பத்தினர் கவலையும் விசனமும் தெரிவித்துள்ளனர்.