ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த குர்து அகதியான பர்ஹத் பந்தேஷ் சுமார் ஏழரை ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டிருந்த நிலையில் அவரது 40வது பிறந்தநாளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மனுஸ்தீவில் செயல்பட்ட ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம், ஆஸ்திரேலியாவில் தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் மந்த்ரா ஹோட்டல், இறுதியாக மெல்பேர்ன் குடிவரவு இடைத்தங்கல் முகாடும் என ஏழரை ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டிருந்த பர்ஹத் பந்தேஷ்க்கு ஆஸ்திரேலிய அரசு தற்காலிக இணைப்பு விசா வழங்கி விடுவித்திருக்கிறது.
“இதை என்னால் மறக்கவே முடியாது. இந்த விடுதலை எனது பிறந்த நாள் அன்று கிடைத்திருக்கிறது. எனது வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பரிசு இது. நான் மீண்டும் பிறந்திருக்கிறேன்,” என்கிறார் பந்தேஷ்.
குர்து அகதியான பந்தேஷ்-யுடன் மேலும் 4 அகதிகள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், நவுரு மற்றும் மனுஸ் தீவுகளில் செயல்பட்ட ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக மாற்றப்பட்ட சுமார் 200 அகதிகளையும் ஆஸ்திரேலிய அரசு விடுவிக்க வேண்டும் என்று Asylum Seeker Resource Centre மையத்தின் சார்பாக Jana Favero கோரிக்கை விடுத்துள்ளார்.
குர்து அகதி பந்தேஷ் தொடர்பான வழக்குகளை கவனித்து வந்த Sydney West Legal and Migration எனும் நிறுவனம், விடுவிக்கப்பட்ட அகதிகள் தொடர்பாக மகிழ்ச்சி தெரிவித்திருக்கிறது. அத்துடன், மேலும் பல அகதிகளுக்கு விடுதலைப் பெறுவதில் வெற்றிப் பெறுவோம் என்று நம்புவதாக அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.