அவுஸ்திரேலியா, நியூசிலாந்து கையாளும் கொரோனாத் தொற்று தொடர்பான அணுகுமுறை

தியுச்சமான சவால்களை கொண்டதாகவே 2020ம் ஆண்டு அமைந்துவிட்டது. அதற்குக் கொரோனாப் பேரிடர் ஆரம்பப் புள்ளியாகியது. இதோ முடிவுக்கு வருகின்றது. அதோ முடிவு தெரிகின்றது என்னும் கொரோனா குறித்த கணிப்புகள் வந்தவழியே திரும்பி ஓடிவிட்டன. தொற்று ஆரம்பமாகி ஒருவருடம் பூர்த்தியாகின்றது. கொரோனாவின் முடிவு குறித்த நம்பிக்கை, நாற்றுமேடையிலிருந்து வெளியே வரவே திணறுகின்றது.

சமத்துவம் கிலோ என்ன விலை எனக் கேட்கும் காலத்தில், கொரோனாவின் சமத்துவம் வியப்பைத் தருகின்றது. நீதிமன்றங்களிலே கண்ணில் கறுப்புத்துணி கட்டிக்கொண்டு நிற்கும் நீதிதேவதையைப் பார்த்திருப்பீர்கள். அஃது, சமன்செய்து சீர்தூக்கி வழங்கப்படுகின்ற நீதிக்கு அடையாளமாகச் சொல்லப்படுகின்றது. அதேபோன்று, கொரோனாத் தேவதைக்கும் பாகுபாடு கிடையாது. கொரோனாத் தொற்று எங்கு – எப்போது – எவருக்கு ஏற்படும் என்பதில் எந்த வித்தியாசமும் இல்லை. அதிலே, பொருளாதார வலுவடைந்தநாடு – அபிவிருத்தியடையும்நாடு என்னும் வேறுபாடு இல்லை. ஏழை – பணக்காரன் வேறுபாடு இல்லை. கறுப்பர் – வெள்ளையர் வேறுபாடு இல்லை. பால் – வயது வேறுபாடு இல்லை. அனைவரும் சமம் என்னும் நிலை காணப்படுகிறது. கொரோனாத் தொற்றை எதிர்கொள்வதில் தேசமொன்றின் தேசபரிபாலனமும், தேசத்தின் மக்கள்திரளுமே முக்கிய பங்காளிகளாகின்றனர். விறகு கட்டாக இருந்தபோது முறிக்க முடியாத சகோதரர்கள், விறகுகளைத் தனித்தனியாக்கிய பின்னர் முறிக்க முடிந்த கதையைக் கொரோனா நினைவுபடுத்துகின்றது. ஒன்றுபட்டுநிற்கின்ற தேசத்தை எதிர்கொள்ள கொரோனா திணறுகிறது. அன்றேல் நர்த்தனமாடுகிறது.

அந்தவகையிலேயே, அவுஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் கவனத்தைப் பெறுகின்றன. உலகெங்கும் பரவிய கொரோனாத் தொற்றின் பாதிப்புக்கு இவ்விரண்டு நாடுகளும் விதிவிலக்கல்ல. சில சந்தர்ப்பங்களில் கணிசமான சவால்களை எதிர்கொண்டன. ஆனாலும் கொரோனாப் பேரிடரை இவ்விரண்டு தேசங்களும் எதிர்கொள்கின்ற பாங்கே கவனத்தைப் பெறுகின்றது. தேசபரிபாலனத்தின் இயங்குதன்மையும், அங்குள்ள மக்கள்திரளின் பங்களிப்புமே கொரோனாத் தொற்றைக் கையாள்வதற்கான வல்லமையை அவுஸ்திரேலியாவுக்கும், நியூசிலாந்துக்கும் வழங்குகின்றன.

நியூசிலாந்து அரசு கொரோனாப் பேரிடர் ஆரம்பமாகிய வேளையில் தெளிவான முடிவுகளை மேற்கொண்டது. உலகிலேயே மிகக் கடுமையான லொக்டவுன் நியூசிலாந்திலேயே முதலில் ஏற்படுத்தப்பட்டது. அதுகூட, தொற்றின் ஆரம்பக் கட்டங்களிலே ஏற்படுத்தப்பட்டதாகும். லொக்டவுன் குறித்த ஒழுங்குகளை அரசு ஆரம்பத்திலேயே தெளிவாகச் சொல்லியது. உதாரணத்திற்கு சொல்வதனால், லொக்டவுன் காரணமாக ஏற்படக்கூடிய பணமுடைகளை எதிர்கொள்வதற்கான நிவாரணத் திட்டங்களை அரசு ஆரம்பத்திலேயே அறிவித்தது. தொழில் நிறுவனங்களுக்கு உதவித்தொகை மற்றும் வரிநிவாரணம் அறிவிக்கப்பட்டன. லொக்டவுன் காரணமாக வேலைக்குப் போகமுடியாதவர்களுக்குச் சம்பள உதவித்தொகைத் திட்டம் அறிவிக்கப்பட்டது. அந்தவகையிலே, அரசின் செயற்பாடு மக்களின் தேவைகளைக் கவனத்தில் கொண்டதாகவே அமைந்தது. ஒரு பேரிடர் காலத்திலேயும்கூட, அரசின் செயற்பாடுகள் பொதுமக்களுக்குத் தொடர்ச்சியாகச் சொல்லப்பட்டன. பிரதமர் அல்லது முக்கிய அமைச்சரொருவர் தினசரி மதியவேளைப் பத்திரிகையாளர் சந்திப்பு மூலமாக, அரசின் நடவடிக்கைகளை மக்களுக்குச் சொன்னார்கள். அந்தவகையிலே, மக்களுடனான தொடர்பாடல்களை அரசு தொடர்ச்சியாகப் பேணிக்கொண்டது. அதனால், அரசின் அறிவுறுத்தல்களை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். லொக்டவுனை அரசு நிர்ணயித்த கட்டுப்பாடு என்று சொல்வதிலும் பார்க்க, நியூசிலாந்து ஒரு தேசமாக ஒன்றுதிரண்டு பொதுநன்மைக்காக கடைப்பிடித்த ஒழுங்குமுறை என்றே சொல்லலாம்.

அவுஸ்திரேலியாவின் சமஷ்டிமுறை பேரிடரை எதிர்கொள்வதில் சவால்களை ஏற்படுத்தியது. கல்வி, சுகாதாரம், பொலிஸ் போன்ற விடயங்களில், சட்டம் இயற்றும் சுயாதீன அதிகாரம் மாநிலங்களிடம் காணப்படுகின்றன. அதனால், வெவ்வேறு மாநிலங்களின் அணுகுமுறையும் மாறுபட்டதாகக் காணப்பட்டன. அதனால் ஒன்றிணைந்த செயற்பாடுகளை முன்னெடுக்க முடியவில்லை. உள்ளக எல்லைகளின் முகாமைத்துவம் சவாலானதாகியது. கிழக்குக்கரை மாநிலங்களிலேயே மக்கள் அதிகமாக வாழ்கின்றனர். கடுமையான லொக்டவுனை மெல்பெர்ன் அறிமுகப்படுத்தியது. இயல்புவாழ்க்கை பாதிக்கப்படாத வகையிலேயே, கொரோனாத் தொற்றை சிட்னி கையாண்டது. உள்ளக எல்லைகளை, குவின்ஸ்லாந்து நீண்டகாலமாக மூடிவைத்திருந்தது. அந்தவகையில் அணுகுமுறையில் வேறுபாடுகள் காணப்பட்டன. இருந்தாலும், கொரோனாப் பேரிடரிலிருந்து மக்களைப் பாதுகாப்பதென்னும் நோக்கத்திலே தேசம் அணிதிரண்டது. அரசின் நடவடிக்கைகள் மக்களுக்குத் தெளிவாகச் சொல்லப்பட்டன. மெல்பேர்னில் லொக்டவுனுக்கு முழுமையான ஆதரவு இருக்கவில்லை. எதிர்ப்புக்கு அஞ்சி அரசு திட்டத்தை மாற்றவில்லை. மாநில எல்லைகள் தொடர்பில் குவின்ஸ்லாந்து கடுமையான நிலைப்பாட்டைக் கடைப்பிடித்தது. சலசலப்புக்களைக் கண்டு தளம்பவில்லை. சமஷ்டி மற்றும் மாநில அரசுகள் தேசத்தினது நலனுக்கே முக்கியத்துவம் அளிக்கின்றன. அதனால், எதிர்ப்புக்களைக் கண்டு அஞ்சுவதில்லை. தேசத்திற்கு எது தேவையானதோ, அதனை செயற்படுத்த அவுஸ்திரேலியா தயங்குவதில்லை. அதுவே, கொரோனாப் பேரிடரை கையாள்வதற்கான வல்லமையை வழங்குகின்றது.

ஊரின் கடைக்கோடியில், வயல்களுக்கு அப்பால் அமைந்த தனித்த வீடு போன்று, உலகின் தென்கோடியில் சனஊடாட்டம் குறைந்த பகுதியில் அமைந்திருப்பது இவ்விரண்டு தேசங்களுக்கும் கிடைத்த வரப்பிரசாதமாகும்.

கங்காருதேசம் கடல்சூழ் கண்டமாகும். 25 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட அவுஸ்திரேலியாவின் நிலப்பரப்பு, மூன்று மில்லியன் சதுரமைல்களாகும். பிரித்தானியாவுடன் ஒப்பிடுகையில், 32 மடங்கு பெரியதாகும். அதேவேளையில், கங்காருதேசத்தின் சனத்தொகை பிரித்தானியாவினதிலும் அரைமடங்காகும். அவுஸ்திரேலியாவிலிருந்து மூவாயிரம் கிலோமீட்டர் தொலைவிலேயே நியூசிலாந்து அமைந்திருக்கின்றது. அண்ணளவாக பிரித்தானியாவுக்கு ஒத்த நிலபரப்பை நியூசிலாந்து கொண்டிருக்கின்றது. அதேவேளையில் நியூசிலாந்தின் சனத்தொகை, பிரித்தானியாவின் சனத்தொகையில் பன்னிரண்டில் ஒரு பங்காகும். அந்தவகையிலே, கொரோனாப் பேரிடரைக் கையாள்வதில் குறைந்த சனத்தொகையைக் கொண்டிருப்பதுவும் அவுஸ்திரேலியாவுக்கும், நியூசிலாந்துக்கும் சாதகமான அம்சங்களாகும்.

இத்தகைய சாதகமான அம்சங்களை அவுஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் பேணிப்பாதுகாக்கின்றன. தேசபரிபாலனத்தின் இயங்குதன்மை அதனைச் செழுமையாக்குகின்றது. தேசத்தின் நலனையே, முற்றும்முழுதான நோக்கமாக இவ்விரண்டு தேசங்களின் தேசபரிபாலனம் கொண்டிருக்கின்றது. அதனால் தேசபரிபாலனத்தில், தேசத்தின் மக்களும் கூட்டிணைகின்றனர். அதுவே, நிலைபேறான மாற்றங்களைச் சாத்தியமாக்குகின்றன. அதனுடைய வெளிப்பாடே, கொரோனா போன்ற பேரிடர்களைக் கையாளுகின்ற வல்லமையாகும்.

  • நியூசிலாந்து சிற்சபேசன்