வீணடிக்கப்பட்ட 20 நாட்கள்

”தமிழ் கட்சிகள், பிரதிநிதிகள் தமது மக்கள் தொடர்பில் பேசினால் அவர்கள், புலிப் பயங்கரவாதிகள், பிரபாகரன்கள். முஸ்லிம் கட்சிகள், பிரதிநிதிகள் தமது மக்கள் தொடர்பில், மதம் தொடர்பில் பேசினால் அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ்.பயங்கரவாதிகள், சஹ்ரான்கள்”

  • தாயகன்

கொரோனா வைரஸின் ஆக்கிரமிப்புக்கு மத்தியிலும் பொதுஜன பெரமுன தலைமையிலான ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அரசின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் கடந்த வியாழக்கிழமை மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 151 வாக்களும் எதிராக 54 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையிலேயே இவ்வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அரசின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை கடந்த நவம்பர் மாதம் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.40 மணிக்கு பிரதமரும் நிதி அமைச்சருமான மகிந்த ராஜபக்ச சபையில் சமர்ப்பித்து இரண்டரை மணிநேரம் உரையாற்றினார்.பாராளுமன்றத்தில் கொரோனா அச்சம் காரணமாக இந்த வரவு செலவுத்திட்டத்திற்கு ஊடகவியலாளர்கள் எவரும் அனுமதிக்கப்படாததுடன் ஏனைய விருந்தினர்கள், பிரமுகர்கள், அரச அதிகாரிகளின் வருகைகளும் கட்டுப்படுத்தப்பட்டிருந்ததுடன் வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் நிதி அமைச்சின் அனுமதியளிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு மாத்திரமே வரவு செலவுத்திட்ட அமர்வை பார்வையிட அனுமதியளிக்கப்பட்டிருந்தது .இதே நிலைமைதான் வரவு செலவுத்திட்ட விவாதம் முடியும் வரை நீடித்தது.

நவம்பர் மாதம் 17 ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத்திட்டம் மீதான விவாதங்கள் நவம்பர் 18 ஆம் திகதி முதல் டிசம்பர் 10 ஆம் திகதி வரையிலான 20 நாட்கள் இடம்பெற்றன. பிரதமரினால் வரவுசெலவுத்திட்டம் முன்வைக்கப்பட்டதையடுத்து கடந்த 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை வரவுசெலவுத்திட்டம் தொடர்பான இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்றதைத் தொடர்ந்து 2021 வரவுசெலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு 99 மேலதிக வாக்குகளால் நவம்பர் 21 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்புக்கு 151 வாக்குகள் ஆதரவாகவும், 52 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டிருந்த நிலையில் 99 மேலதிக வாக்குகளினால் அது நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் வரவுசெலவுத்திட்ட குழு நிலை விவாதம் கடந்த நவம்பர் 23 ஆம் திகதி முதல் கடந்த வியாழக்கிழமை 10 ஆம் திகதி வரை இடம்பெற்ற நிலையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் ஆதரவாக 151 வாக்களும் எதிராக 54 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையிலேயே இவ்வரவு செலவுத்திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அரசின் 2021 ஆம் ஆண்டுக்கான இந்த வரவு செலவுத்திட்டம் மீது 20 நாட்கள் விவாதங்கள் நடத்தப்பட் ட நிலையில் வரவு செலவுத்திட்டம், நாட்டின் பொருளாதாரம், எதிர்கால முதலீடுகள், அபிவிருத்திகள், நிவாரணங்கள், யோசனைகள் தொடர்பில் ஓரிரு எம்.பி.க்கள் ,அமைச்சர்களே கருத்துக்களை முன்வைத்தனர். மிகுதிப்பேர் இந்த 20 நாட்களிலும் இனவாதம், மதவாதம் பேசியதுடன் சேறுபூசுதலையும் குற்றம் சாட்டுதலையும் விவாதப்பொருளாக்கியிருந்தனர். இன்னும் சிலரோ இதனையும் தாண்டி ஆபாச பேச்சுக்களையும் அருவருப்பு உரைகளையுமே நிகழ்த்தினர். குறிப்பாக இந்த 20 நாட்களும் நாட்டின் உயர் பீடமும் சட்டங்களை இயற்றும் சபையுமான பாராளுமன்றம் இனவாதம், மதவாதத்தில் மூழ்கியே காணப்பட்டது.

இந்த 20 நாள் விவாதங்களிலும் வரவு செலவுத்திட்டத்திலுள்ள விடயங்களை விடவும் மாவீரர் வாரம்,தமிழ் தேசியக்கூட்டமைப்பை பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றுதல், அதனை தடை செய்தல், கொரோனா வைரஸால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்தால் ஆபத்து,முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் என்ற விடயங்களே ஆதிக்கம் செலுத்தியிருந்தன. இத்தனைக்கு மத்தியிலும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக பகிரங்கமாகவே அரச தரப்பினர் நடந்து கொண்ட போதும் எதிர்க்கட்சிகளிலிருந்த முஸ்லிம் எம்.பி.க்கள் சிலர் கட்சித் தலைமைகளின் நிலைப்பாடுகளையும் மீறி அரசுக்கு ஆதரவளித்த அதேவேளை இன்னும் சிலர் தலைவர் எதிராக வாக்களித்த நிலையில் தாம் வாக் களிப்பில் பங்கேற்காத விசித்திரமும் நடந்தேறியது. இந்த வாக்கெடுப்புக்களில் எதிர்க்கட்சிகள் தரப்பில் இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்பு, சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி ஆகியவை பங்கேற்கவில்லை.

இந்த 20 நாள் விவாதங்களிலும் தமிழ் ,முஸ்லிம் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ், முஸ்லிம் கட்சிகளோ,உறுப்பினர்களோ தமது இனம் சார்ந்த ,மதம்சார்ந்த உரிமைகள், பிரச்சினைகள் தொடர்பில் சபையில் சுதந்திரமாக கருத்துக்களையோ விமர்சனங்களையோ ,குற்றச்சாட்டுக்களையோ முன்வைக்க முடியாதளவுக்கு இன ,மதவாதங்கள் சபையில் உருக்கொண்டிருந்தன. தமிழ் கட்சிகள் ,பிரதிநிதிகள் தமது மக்கள் தொடர்பில் பேசினால் அவர்கள், புலிப் பயங்கரவாதிகள்,பிரபாகரன்கள்.முஸ்லிம் கட்சிகள் ,பிரதிநிதிகள் தமது மக்கள் தொடர்பில்,மதம் தொடர்பில் பேசினால் அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ்.பயங்கரவாதிகள், சஹ்ரான்கள் என்ற ரீதியிலேயே அமைச்சர்களும் அரசுத்தரப்பு எம்.பி.க்களும் ஆக்ரோஷம்,அடாவடித்தனம், காட்டி இனவாதத்தை உமிழ்ந்தனர்.

குறிப்பாக தமிழ் தேசியக்கூட்டமைப்பு எம்.பிக்களான சுமந்திரன், சாணக்கியன், சார்ள்ஸ் நிர்மலநாதன், ஸ்ரீதரன் ,தமிழ் மக்கள் தேசிய கூட்டணி எம்.பி.யான.சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி எம்.பி.க்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.க்களான முஜிபுர் ரஹ்மான், மரிக்கார் போன்றவர்கள் தமது இனம்,மக்கள், உரிமைகள் தொடர்பில் வாய் திறக்க முடியதளவுக்கு இனவாதம் தலைவிரித்தாடியது. இவர்கள் உரையாற்ற எழுந்தாலே அரச தரப்பினர் உருவாடத்தொடங்கி விடுவார்.

இதில் தமிழ் கட்சிகள் ,பிரதிநிதிகள் தமது மக்கள் தொடர்பில் பேசினால் ,உரிமைகள் தொடர்பில் குரல் எழுப்பினால் . இராணுவ ஆக்கிரமிப்புக்கள், ஆதிக்கங்கள்,அட்டூழியங்கள் தொடர்பில் சுட்டிக்காட்டினால் அரச தரப்பிலிருந்து மட்டுமல்லாது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்தும் இனவாதக்குரல்கள் வெளிப்பட்டன. இதில் அரச தரப்பில் முதன்மையானவராக கடற்படையின் முன்னாள் ரியர் அட்மிரலும் தற்போதைய கோத்தபாய ராஜபக்ச அரசின் அமைச்சரவை அந்தஸ்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருமான சரத் வீரசேகரவும் எதிர்க்கட்சிதரப்பில் முதன்மையானவராக முன்னாள் இராணுவத்தளபதியும் தற்போதைய எம்.பி.யுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும் இருந்தனர்.

எம்.பி .பதவி இல்லாதபோதே சொந்த செலவில் ஜெனீவா சென்று ஐ.நா.கூட்டத்தொடர்களில் இனவாதம் கக்கி தமிழர்களுடன் மல்லுக்கட்டியவர்தான் தற்போதைய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர. சும்மாவே கொம்பில்லாமல் குத்திய மாட்டுக்கு கோத்தபாய ராஜபக்ச கொம்பும் வைத்து அதனை நன்றாக சீவியும் விட்டுள்ளார். அதனால் தான் பாராளுமன்றத்திலிருந்து தமிழ் தேசியக்கூட்டமைப்பை விரட்டியடிப்பதுடன் அதனை தடை செய்யவும் வேண்டுமென அவர் இந்த 20 நாட்களும் விடாது இனவாதக் கூச்சலிட்டார்.

சிங்களவர்களிற்கு எதிரான வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் உரைகளை நிகழ்த்தும் தமிழ் அரசியல்வாதிகளை பாராளுமன்றத்திலிருந்து விரட்ட வேண்டும் தமிழ் தேசியக்கூட்டமைப்பை தடை செய்யவேண்டும் என்பதுதான் அவரது கோஷமாக இருந்தது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தவறிழைத்துவிட்டார்.அவர் தமிழ் அரசியல்வாதிகள் குறித்து அனுதாபமுள்ளவராகயிருந்துள்ளார்.ஹிட்லர் தோற்கடிக்கப்பட்டவேளை நாஜி அரசியல் கட்சி முற்றாக அழிக்கப்பட்டது,பொல் பொட் கொல்லப்பட்டதை தொடர்ந்து அவரின் கெமரூஜ் கட்சி காணாமல்போய்விட்டது.சதாம் ஹு சைன் கொல்லப்பட்டதை தொடர்ந்து அவரது பாத்கட்சி அழிக்கப்பட்டது, ஹொஸ்னி முபாராக் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டதை தொடர்ந்து அவரது தேசிய ஜனநாயக கட்சி தடைசெய்யப்பட்டது .

அவ்வாறே புலிகளும் பிரபாகரனும் அழிக்கப்பட்டபோது அவர்களின் பினாமியாக இருந்த தமிழ் தேசியக்கூட்டமைப்பை தடை செய்திருக்க வேண்டும்.ஆனால் அவ்வேளை ஜனாதிபதியாகவிருந்த மகிந்த ராஜபக்ச தவறு செய்துவிட்டார். அவர் தமிழ் அரசியல்வாதிகள் குறித்து அனுதாபம் கொண்டிருந்தார்.அவர் அவர்களை மன்னித்தார்,தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு அதனை சாதகமாக பயன்படுத்துகின்றது என்றுசரத் வீரசேகர கூறியதன் மூலம் யுத்தம் முடிவுக்கு வந்த போதே தமிழ் தேசியக்கூட்டமைப்பையும் அழித்திருக்க வேண்டும் அல்லது தடை செய்திருக்க வேண்டும் என்று முழு இனவாதியாக பாராளுமன்றத்தில் தொடர்ந்தும் முழங்கினார்.

அடுத்தவர் 2010 ஆண்டு ஜனாதிபதித்தேர்தல் மூலம் இலங்கையின் ஜனாதிபதியாக்க தமிழ் தேசியக்கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று ஒட்டு மொத்த தமிழர்களும் வாக்களித்த முன்னாள் இராணுவத்தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா. அவர் ஏற்கனவே போர்க்குற்றவாளியாக அறியப்பட்டவர். அந்த நிலையில் தான் அவருக்கு வாக்களிக்குமாறு தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமிழ் மக்களை கேட்டிருந்தது. தமிழ் தேசியக்கூட்டமைப்பு மீது தமிழ் மக்களுக்கிருந்த நம்பிக்கை காரணமாக தமிழ் மக்களும் வாக்களித்திருந்தனர்.அவர் அந்த தேர்தலில் கௌரமான தோல்வியைப்பெற தமிழ் மக்களின் வாக்குகளே உதவியிருந்தன.சிங்கள மக்கள் அவரை நிராகரித்தபோது ,அவரால் பாதிக்கப்பட்ட ,அழிக்கப்பட்ட தமிழ் மக்களும் இன்னொரு சிறுபான்மையினமான முஸ்லிம் மக்களுமே அவரை ஆதரித்தனர். அந்த நன்றி கூட இல்லாது அவர் கூட பாராளுமன்றத்தில் பகிரங்கமாக இனவாதம் கக்கும் ஒரு நபராக தன்னை மாற்றி சிங்களவர்கள் மத்தியில் பிரபல்யமடைய இந்த 20 நாள் விவாதத்தையும் பயன்படுத்தினார்.

யுத்தத்தில் வடக்கில் சிவிலியன்கள் படுகொலை செய்யப்பட்டதாக எம்மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றன . வடக்கில் அவ்வாறு சிவிலியன்கள் எவரும் கொல்லப்படவில்லை. சர்வதேச அமைப்புகளும் புலிகளும் கூறும் விதத்திலும் அல்லது பாராளுமன்றத்தில் உள்ள சில எம்.பி.க்கள் கூறும் விதத்திலும் 40ஆயிரம் சிவிலியன்கள் கொல்லப்படவில்லை. 5 அல்லது 6 ஆயிரம் பேர் உயிரிழந்திருக்கக் கூடும்.தீவிரவாதத்தின் தீப்பொறிகள் மீண்டும் சாம்பலுக்குள் இருந்து வருகின்றன . அதனால் கதிரைகளில் அமர்ந்து சாய்ந்து கொண்டு நாம் நாட்டை பாதுகாக்கின்றோமென கனவுகளை மாத்திரம் கண்டுகொண்டிருப்பதால் பயனில்லை. ஆழமாக ஆராய்ந்து இதுதொடர்பில் செயற்பட வேண்டும்.இதேவேளை மாவீரர் தினம் தொடர்பாக கூற வேண்டியுள்ளது. புரவி புயல் மாவீரர் வாரத்தில் வந்திருந்தால் மாவீரர்களை நாம் துடைத்தெறிந்திருந்த இடங்கள் அழிவடைந்திருக்கும். காரணம் அந்த இடங்களில்தான் புரவி புயல் தற்போது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.அப்போது புரவி புயல் வந்திருந்தால் மாவீரர்கள் தினம் காணாமல் போயிருக்கும் எனதமிழ் மக்கள் புனிதமாக போற்றும் மாவீரர் நாளை கேவலப்படு த்தியதுடன் தமிழ் மக்களின் மனங்களையும் புண்படுத்தினார்.

அதே போல் இன்னொரு அமைச்சரான பிரசன்ன ரணதுங்க , 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது நான் யாழ்ப்பாணம் சென்றிருந்தேன்.தெற்கு மக்கள் தொடர்பில் வடக்கிலுள்ள சில அரசியல்வாதிகள் அங்கு குரோதமனப்பான்மையை உருவாக்கியிருந்தனர். அங்குள்ள மக்களிடம் நாம் உரையாடினோம். மூன்று வேளையும் நன்றாகச் சாப்பிட்டு சுதந்திரமாக வாழும் சூழ்நிலை உருவாகவேண்டுமென்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது என்று தமிழினத்தை சாப்பாட்டுக்காக வாழ்பவர்கள் என்ற ரீதியில் கருத்துக் கூறினார் அத்துடன் இங்கு இனவாதம் பேச [தமிழர்களின் உரிமை தொடர்பில் பேசுவதே சிங்கள அமைச்சர்களின் பார்வையில் இனவாதம்] யாருக்கும் இடமளிக்கப்படாது என்றும் கூறினார்

இவர்கள் மட்டுமல்ல தற்போது பாராளுமன்றத்தில் உள்ள கோத்தபாய ராஜபக்ச தரப்பில் 100 க்கு 95 வீதமானோரும் இனவாதத்தை மூலதனமாக கொண்டவர்களாகவே இந்த 20 நாள் விவாதத்திலும் நடந்து கொண்டனர். இவர்களின் ஒட்டு மொத்தக்கோரிக்கையாக தமிழ் தேசியக்கூட்டமைப்பை தடை செய்ய வேண்டும். அவர்கள் பாராளுமன்றம் வருவதனை அனுமதிக்கக்கூடாது என்பதாகவே இருந்தது. அதிலும் பாராளுமன்றத்துக்கு முதல் தடவையாக வந்திருந்த புதிய உறுப்பினர்கள் கூட பாராளுமன்றத்திலுள்ள தமிழ் ,முஸ்லிம் மூத்த தலைவர்களையும் உறுப்பினர்களையும் மிகவும் தரக்குறைவாக விமர்சித்து திட்டித் தீர்த்ததும் அதனை சபாநாயகரோ மூத்த அமைச்சர்களோ கண்டு கொள்ளாமல் வேடிக்கை பார்த்ததும் ஒரு இன ரீதியான செயலாகவே இருந்தது.

ஒட்டு மொத்தத்தில் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தொடர்பான இந்த 20 நாள் விவாதங்களிலும் இன ,மதவாதங்களுக்கே முன்னுரிமையளிக்கப்பட்டிருந்ததுடன் பாராளுமன்றத்தில் என்றுமில்லாதவாறு ஊடகங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டு ஊடக சுதந்திரமும் பறிக்கப்பட்டிருந்தது.