கொரோனா வைரஸ் பெருந்தொற்றினை கண்டறிகிற உமிழ் நீர் அடிப்படையிலான ஸ்மார்ட் போன் பரிசோதனையை மருத்துவ கல்லூரி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கொரோனா வைரஸ் பெருந்தொற்றினை 15 நிமிடங்களில் கண்டறிகிற உமிழ் நீர் அடிப்படையிலான ஸ்மார்ட் போன் பரிசோதனையை அமெரிக்காவில் உள்ள துலேன் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் சயின்ஸ் அட்வான்சஸ் பத்திரிகையில் கூறி இருப்பதாவது:-
ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை போன்றே இந்த பரிசோதனை திறம்பட செயல்படுகிறது.இந்த ஸ்மார்ட் போன் இயங்குதளம் எதிர்கால பயன்பாடாக அமையும் என்று நம்புகிறோம். கொரோனா பரிசோதனையை விரைவாக விரிவுபடுத்துவதற்கான திறனை வழங்குகிறது. வழக்கமாக கொரோனா பரிசோதனைக்கு தொண்டை அல்லது மூக்கு சளி மாதிரி சேகரிக்கப்படுகிறது. இதில் உமிழ்நீர்தான் சேகரிக்கப்படுகிறது. ஆரம்ப நோய்த்தொற்றின்போது, உமிழ்நீரில் கொரோனா வைரஸ் இருக்கும்.
இந்த பரிசோதனைக்காக ஒரு சிப்பை உருவாக்கி உள்ளோம். இது சிஆர்ஐஎஸ்பிஆர்/கேஸ் 12 ஏ மூலக்கூறுகளை பயன்படுத்துகிறது. இந்த சிப், ஸ்மார்ட் போன் அடிப்படையிலான புளோரசன்ஸ் மைக்ரோஸ்கோப்பில் இணைக்கப்படுகிறது. அதன்மூலம் உமிழ்நீர் மாதிரியில் உள்ள வைரஸ் மரபணு பொருளை சிறப்பாக கண்டறியலாம், 15 நிமிடங்களில் கொரோனா தொற்றை கண்டறிந்து விடலாம்.
இவ்வாறு அவர்கள் கூறிஉள்ளனர்.