அவுஸ்ரேலியாவில் கொரோனா தடுப்பூசி சோதனையின்போது, எச்.ஐ.வி.க்கு சாதகம் என போலியான முடிவுகள் காண்பித்ததால் பரிசோதனை நிறுத்தப்பட்டுள்ளது.
குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் மற்றும் அவுஸ்ரேலிய பயோடெக் நிறுவனமான சிஎஸ்எல் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள தடுப்பூசியின் முதற்கட்ட சோதனை 216 பேரிடம் நடத்தப்பட்டது.
இந்த தடுப்பு மருந்தில் பயன்படுத்தப்பட்ட ஆண்டிபாடிஸ், எச்.ஐ.வி. வைரஸ் நோயறிதலில் தோன்றும் விளைவுகளை ஏற்படுத்தியதால் 4இல் ஒருவருக்கு எச்.ஐ.வி. சாதகம் என போலியான முடிவுகளைக் காட்டியது.
2021ஆம் ஆண்டு நடுப்பகுதியில் இந்த தடுப்பூசி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட சோதனைகளை உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மோரிசன் வெள்ளிக்கிழமை காலை ஊடகவியலாளர்களிடம் கூறுகையில், ‘இந்த தடுப்பூசி இனி நாட்டின் தடுப்பூசி திட்டத்தின் ஒரு பகுதியாக இடம்பெறாது’ என கூறினார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘சோதனைக்கு உட்படுத்தப்பட்ட 216 சோதனை பங்கேற்பாளர்களுக்கு எந்தவிதமான மோசமான விளைவுகளும் ஏற்படவில்லை.
எவ்வாறாயினும், தடுப்பூசியால் உருவாக்கப்படும் ஆன்டிபாடிகள் எச்.ஐ.வி நோயறிதலில் தலையிடுவதாகவும் சில எச்.ஐ.வி சோதனைகளில் தவறான நேர்மறைக்கு வழிவகுத்ததாகவும் சோதனை தகவல்கள் தெரிவிக்கின்றன.