அமெரிக்காவில் முதல் கொரோனா தடுப்பூசி 24 மணி நேரத்துக்குள் வழங்கப்படும் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தற்போது தினமும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதேபோல் பலியானவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டி இருக்கிறது. நேற்று ஒரே நாளில் 3 ஆயிரம் பேர் உயரிழந்துள்ளனர்.
இதனால் அமெரிக்காவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இந்த மாதத்தில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பு மருந்தை உருவாக்கின. இந்த தடுப்பூசி 95 சதவீதம் பலன் அளிப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அந்த தடுப்பூசியை அவசர பயன்பாட்டுக்கு அனுமதிக்க கோரி பைசர் நிறுவனம் அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் விண்ணப்பித்தது.
பைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை ஆய்வு செய்வதற்காக நிபுணர்கள் ஆலோசனை குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவினர் தடுப்பூசியின் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் தரவுகளை ஆய்வு செய்தனர்.
இதற்கிடையே தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு கொண்டுவர நிபுணர் ஆலோசனை குழுவில் இடம்பெற்ற 17 பேர் ஆதரவு தெரிவித்தனர். 4 பேர் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தனர்.
நிபுணர் ஆலோசனை குழுவில் அதிகபட்ச உறுப்பினர்கள் ஆதரவு அளித்ததையொட்டி பைசர் நிறுவன தடுப்பூசிக்கு அரசு விரைவில் அனுமதி அளிக்கும் என்று தகவல் வெளியானது.
அதன்படி அமெரிக்காவில் பைசர் நிறுவனம், பயோன்டெக் நிறுவனம் உருவாக்கி உள்ள தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் தலைமை விஞ்ஞானியான டெனிஸ் ஹிண்டன் பைசர் நிறுவனத்துக்கு எழுதிய கடிதத்தில் கொரோனா வைரசை தடுப்பதற்கான தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு நான் அங்கீகரிக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து சுகாதார அமைச்சர் அலெக்ஸ் அசார் கூறும்போது, ‘தடுப்பூசி விரைவில் பொதுமக்களுக்கு செலுத்தப்பட உள்ளது என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளித்தது தொடர்பாக அதிபர் டிரம்ப் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-
அமெரிக்காவில் முதல் தடுப்பூசி 24 மணி நேரத்துக்குள் வழங்கப்படும். ஏற்கனவே ஒவ்வொரு மாகாணத்துக்கும் நாங்கள் தடுப்பூசியை அனுப்பும் பணியை தொடங்கி விட்டோம். யாருக்கு முதலில் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்பதை அந்தந்த மாகாண கவர்னர்கள் முடிவு செய்வார்கள்.
மூத்த குடிமக்கள், சுகாதார பணியாளர்கள் ஆகியோருக்கு முதலில் தடுப்பூசி வழங்கப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். இது விரைவாகவும், வியக்கத்தக்க முறையில் இறப்புகளையும் மருத்துவமனையில் சேர்க்கப்படுவதையும் குறைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
பைசர் மற்றும் பயோன்டெக் நிறுவனங்களின் தடுப்பூசிக்கு முதன் முதலில் இங்கிலாந்து அனுமதி அளித்தது. அதன்பின் பக்ரைன், கனடா, சவுதி அரேபியா ஆகிய நாடுகள் அவசர பயன்பாட்டுக்கு ஒப்புதல் அளித்தது.
இந்த நிலையில் பைசர் நிறுவன தடுப்பூசிக்கு அமெரிக்காவும் அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.