வாழ்க்கையின் நிழல் படிந்த சிறுகதைகள் எழுதுபவர், முன்னாள் பத்திரிகையாளர், விளிம்பு நிலை மக்கள் பாதிப்புறும்போதெல்லாம் நியாயம் பேசும் அறக்குரலுக்கு சொந்தக்காரர் சந்திரா. ‘கள்ளன்’ படத்தை இயக்கிக்கொண்டிருக்கிறார். ஒரு மழை மதியத்தில் அவருடனான உரையாடல்.
‘ஆண் சூழ் உலகு’ ஆகவே இருக் கிற சினிமா உலகம், உங்கள் பார்வையில் எப்படி இருக்கிறது?
கலையுலகத்துக்கு ஆண், பெண் என்கிற வித்தியாசம் எல் லாம் கிடையாது என்று நான் சொல்ல மாட்டேன். ஒரு ஆண் ஒரு தடவை தட்டினால் திறக்கும் சினிமா உலகக் கதவு, ஒரு பெண் பத்து தடவை தட்டினால்தான் மெல்லத் திறக்கும். இங்கே ஒரு பெண் ஜெயிப்பதற்கு தொடர் போராட்டம் தேவைப்படுவதை நன்றாக உணர் கிறேன். முழுமையான தெளிவு தேவைப்படும் இடம் இது. திற மையை, உழைப்பை நேசிக்கிற ஆண்களுடன் இணைந்துதான் என்னுடைய இலக்கை நான் அடைய வேண்டும் என்பதை யும் நான் உணர்ந்திருக்கிறேன்.
இலக்கியம், பத்திரிகைகளில் இருந்து சினிமாவுக்குள் நுழைந்து விட்டீர்கள். எப்படியிருக்கு அந்த பெரிய கேன்வாஷ்?
பத்திரிகை வேலை மனரீதி யான டிராவலுக்கு நிறைய வாய்ப் பளித்தது. மழை நேரத்து தேநீர் மாதிரி இதமானது. ஆனந்த விகடன், குமுதம், ஆறாம் திணை போன்றவற்றில் பார்த்த வேலை யும் சந்தித்த மனிதர்களும் எனது சுவடுகள். ‘புனைவு’ என்று பார்த் தால் நான் சினிமாவுக்குள் வந்த பிறகுதான் நிறைய எழுத ஆரம் பித்தேன். நான் உதவி இயக்கு நராக இருந்த காலகட்டத்தில்தான் என்னுடைய பல கதைகள் வெளியாயின. எனக்கு சின்ன வயசு முதலே சினிமா ஆசை இருந்தது. அதற்குள் நுழைய தங்கநாற்கர சாலையாக இருந்தன இலக்கிய மும் பத்திரிகை பணிகளும்.
‘கள்ளன்’ எதை சொல்லப்போகிறது. எப்படி வந்திருக்கு..?
வேட்டைக்கார சமூகத்தைச் சேர்ந்த ஒருவன் திருடனாக மாறிய கதைதான் ‘கள்ளன்’. இந்தப் படம் குறிப்பிட்ட ஜாதியைப் பற்றி யது அல்ல. மலையடிவார கிரா மங்களில் வசிக்கும் வேட்டைக்கார சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேட்டையாடுவதுதான் முழுநேர தொழில். ஆனால் வேட்டைத் தொழிலுக்கு அரசாங்கம் தடை விதித்தப் பிறகு, கதாநாயகனும் அவனது நண்பர்களும் ஒரே ஒரு திருட்டில் ஈடுபட்டு, வாழ்க்கையில் செட்டிலாக நினைக்கின்றனர். அந்த திருட்டு அவர்களுடைய வாழ்க்கையை எப்படி மாற்றி அமைக்கிறது என்பதுதான் நான் சொல்ல விரும்பிய கதை. கிரைம், ஆக்ஷன், அட்வெஞ்சர் எல்லாம் கலந்து படம் நல்லா வந்துள்ளது. எல்லா வேலைகளும் முடிஞ்சு இதோ சீக்கிரத்தில் வெளிவரப் போகுது படம்.
இந்தக் கதையை நான் சொல் லாத தயாரிப்பாளர்களே கிடை யாது. இது எனது ஐந்து வருஷ முயற்சி. கதையைக் கேட்டுவிட்டு நல்லா இருக்கும்பாங்க. ஆனா ஏதோ ஒரு நினைப்பில் பின் வாங்கிடுவாங்க. இயக்குநர் வெற்றிமாறன் சார் கூட தயா ரிக்க முன்வந்தார். சித்தார்த் நடிப்ப தாக இருந்தது. அதுவும் டிராப் ஆயிட்டு. அப்புறம்தான் ’எக்ஸ்ட்ரா எண்டர்டெயின்மெண்ட்’ மதியழ கன் சார் என் ஸ்கிரிப்ட்டை முழுசா நம்பி தயாரிக்க முன்வந்தார். அவர் ஏற்கெனவே ‘அப்பா’, ‘திலகன்’, ’ராஜா மந்திரி’ போன்ற படங்களை எடுத்தவர்.
கரு.பழனியப்பனை எப்படி கள்ளனா தெரிவு செய்தீங்க..?
என் ஸ்கிரிப்ட்டை புரிந்துகொள் கிற ஒருவர் இந்த புராஜெக்ட்டுக் குள் வந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். அப் போது கரு.பழனியப்பனின் கண்ணாடியைக் கழற்றிவிட்டு, இந்த பாத்திரத்துக்கு அவரை யோசித்தபோது அவர் பொருத்த மாக இருப்பது தெரிந்தது. அவரும் ஒரு இயக்குநர் என்பதால் என் ஸ்கிரிப்ட்டை நன்றாக உள்வாங் கிக்கொண்டு ஒத்துழைத்தார். அவருடன் நாயகியாக நிகிதாவும் சிறப்பாக நடித்துள்ளார்.