ஆப்கானிஸ்தானில் தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றிய பெண் நிருபர் மலாலா மைவாண்ட் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஆப்கானிஸ்தானில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் பெண் நிருபராக வேலைபார்த்தவர் மலாலா மைவாண்ட். இவர் பணி விஷயமாக ஜலாலாபாத் நகருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். காரை டிரைவர் முகமது தாகிர் ஓட்டிச்சென்றார்.
அப்போது காரை மறித்த மர்மநபர்கள் துப்பாக்கியால் பெண் நிருபரை சரமாரியாக சுட்டனர். மேலும் கார் டிரைவரையும் சுட்டனர். இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உடனே மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர். சுட்டுக்கொல்லப்பட்ட பெண் நிருபர் மலாய் மைவான்ட் சமூக ஆர்வலராகவும் இருந்து வந்தார். அவரது தாயார் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரும் சமூக ஆர்வலராக இருந்து வந்தார்.
கடந்த ஒரு மாதத்தில் ஆப்கானிஸ்தானில் 2-வது பத்திரிகையாளர் கொல்லப்பட்டுள்ளார். இந்த கொலைக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.