சிறிலங்கா அரசின் போர்க்குற்றவாளிகள் நாட்டிற்குள் நுழைவதைத் தடை செய்வது, மற்றும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றிற்கு பரிந்துரைத்தல் தொடர்பாகவும் ஐ.நா.அங்கீகாரம் பெற்ற அமைப்பான “அலையன்ஸ் கிரியேட்டிவ் கம்யூனிட்டி ப்ராஜெக்ட்” (The “Alliance Creative Community Project) கனடாவின் வெளியுறவு அமைச்சருக்கு ஒரு கோரிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.
உலகம் முழுவதும் டிசம்பர் 10 கொண்டாடப்படும் சர்வதேச மனித உரிமைகள் தினத்தையும், டிசம்பர் 9 ஆம் தேதி நிகழும் சர்வதேச இனப்படுகொலை தினத்தையும் முன்னிட்டே இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும் போர் குற்றச் சட்டத்தின் கீழ், நாட்டிற்குள் நுழையும் போர்க் குற்றவாளிகளை கனடா தடைசெய்ய முடியும் என்றும், குடிவரவு மற்றும் அகதிகள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழும் மற்றும் 2017 இல் கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு ஊழல் அதிகாரிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கும் சட்ட விதிகளின் கீழும் நடவடிக்கை எடுக்க முடியும் எனவும் இந்த அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது.
இந்த மனிதவுரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் மீது முழுமையான பயணத்தடை, சொத்து முடக்கம், நிதி மற்றும் வணிக தடை போன்றவற்றை விதிப்பது தொடர்பாக நாம் கனேடிய அரசுடன் இணைந்து பணியாற்ற அணியமாக உள்ளோம் என இவ்வறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
தமிழர்கள் போர் சூழல் காரணமாக உலகமெங்கும் சிதறடிக்கப்பட்டாலும், தமது தாய்நாட்டுக்கு அடுத்தபடியாக, கனடாவில் தான் அதிக எண்ணிக்கையில் வாழ்கிறார்கள். அது மட்டுமன்றி, பலவழிகளில் இந்நாட்டு வளர்ச்சியில் தமது பங்களிப்பையும் செலுத்தி வருகின்றனர்.
மனித உரிமைகள் தொடர்பில் கனடா, உள்நாட்டில் மாத்திரமல்லாது சர்வதேச ரீதியாகவும் மிகவும் அக்கறை செலுத்தி வரும் நாடாக திகழ்கிறது. எனவே கனடா இந்த போர் குற்றவாளிகளுக்கு எதிராக அந்நாட்டு சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுத்து சர்வதேசத்துக்கு முன் மாதிரியாக திகழ்வதோடு, சிறிலங்காவினது போர் குற்றவாளிகளை ரோமை சட்டத்தின் அடிப்படையில் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றிற்கு பரிந்துரைக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.