அந்தரத்தில் ஒரு புதிய தேசம்!

புதிய தேசம் ஒன்றை நிறுவப்போவதாக சர்வதேச விஞ்ஞானிகள் குழு ஒன்று அறிவித்தது. பூமியில் அல்ல, விண்வெளியில்!

‘அஸ்கார்டியா’ என்ற பெயர் கொண்ட அந்த நாட்டிற்கு, இப்போது புதிய அரசாங்கத்தையும், 12 அமைச்சர்களையும் அறிவித்துள்ளது அஸ்கார்டியா ‘அரசு.’ புதிய அமைச்சரவைக்கு வரும் ஜூன், 2017ல், அஸ்கார்டியாவின் நிறுவனர் டாக்டர்.இகோர் அசுர்பெய்லி பதவிப் பிரமாணம் செய்து வைக்கப் போவதாக, அஸ்கார்டியன்.காம் இணையதளம் தகவல் வெளியிட்டுள்ளது.

ரஷ்ய விஞ்ஞானியான இகோர், ஒரு தொழிலதிபரும் கூட! அறிவியல், விண்வெளி, தொழில், இளைஞர் நலம் மற்றும் கல்வி, ஒருமைப்பாடு, தகவல் மற்றும் செய்தித் தொடர்பு, வெளியுறவு, நிதி, பாதுகாப்பு மற்றும் நீதி போன்ற துறைகளுக்கு விரைவில் அமைச்சர்கள் பதவியேற்பர்.கடந்த அக்டோபர் 12ல், யுனெஸ்கோவின் விண்வெளி அறிவியல் கமிட்டிக்கு தலைவராக அசுர்பெயிலி பொறுப்பேற்ற அதே நாளில், விண்வெளி தேசமான அஸ்கார்டியா பற்றிய அறிவிப்பும் வெளிவந்தது.

உலகெங்குமிருந்து, 4.5 லட்சம் பேருக்குமேல் அஸ்கார்டியாவின் பிரஜைகளாக தங்களை பதிவு செய்திருக்கின்றனர். இன்னும் அந்த பட்டியல் வளர்ந்து வருகிறது. அஸ்கார்டியா விண்வெளியில் அமைந்த தேசம் என்றாலும், அதன் குடிமக்கள் பூமியில்தான் இருப்பர். அதாவது புதிய தேசம் விண்வெளியில் கட்டுவிக்கப்படும் வரை. தேச எல்லைகள் போன்ற மனிதர்களை பிரித்து வைக்கும் எதையும் அஸ்கார்டியா அனுமதிக்காது என்றும், ஒவ்வொரு மனித உயிருக்கும் மதிப்பளிக்கும் தேசமாக இது இருக்கும் என்றும் அஸ்கார்டியாவின் இணையதளம் பிரகடனம்
செய்கிறது.

அறிவு, அறிவியல் மற்றும் மானுடம் ஆகியவையே அஸ்கார்டியாவின் அடிக்கற்களாக இருக்கும் என, அந்த இணைய தளம் சத்தியம் செய்கிறது.ஐ.நா.,வின் அங்கீகாரத்திற்கு விண்ணப்பித்துள்ளது.