புகலிடக்கோரிக்கையாளர்கள் மீதான வாழ்நாள் தடைக்கு லேபர்கட்சி எதிர்ப்பு

மனுஸ் மற்றும் நவுறு தடுப்பு முகாம்களிலுள்ள புகலிடக்கோரிக்கையாளர்கள் தமது வாழ்நாளில் ஒருபோதும் அவுஸ்ரேலியாவுக்குள் நுழைய முடியாதபடி தடை செய்யும் அரசின் திட்டத்திற்கு ஆதரவு வழங்கப்போவதில்லை என எதிர்க்கட்சியான லேபர் கட்சி தெரிவித்துள்ளது.

எனவே இது தொடர்பில் நாடாளுமன்றில் அரசு இன்று அறிமுகப்படுத்தியுள்ள சட்ட முன்வடிவுக்கெதிராக வாக்களிக்கப்போவதாக லேபர் கட்சி தெரிவித்துள்ளது.இன்று கூடிய லேபர்கட்சியின் கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கிரீன்ஸ் கட்சியும் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் செனட் அவையில் இச்சட்டமுன்வடிவு வெற்றிபெறுவதற்கு செனட் அவையின் தீர்மானிக்கும் சக்திகளாக விளங்கும் சிறுகட்சி செனட்டர்களின் ஆதரவு அரசுக்கு தேவைப்படுகின்றது.

குறித்த சட்டமுன்வடிவுக்கு நாடாளுமன்றத்தில் அனுமதி கிடைக்கும்பட்சத்தில் அவுஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமிலுள்ளவர்கள் உண்மையான அகதிகள் என இனங்காணப்பட்டாலோ, அல்லது மூன்றாவது நாடொன்றில் குடியேறினாலோ, அவர்கள் தமது வாழ்நாள் முழுவதும் அவுஸ்திரேலியாவுக்குள் எந்தவொரு விசாவிலும் வர முடியாதென்பது குறிப்பிடத்தக்கது.