அமெரிக்க, இந்திய அணுகுமுறையும் ஈழத் தமிழர்களும்

2009ஆம் ஆண்டு இந்தோ- பசுபிக் பிராந்திய நலன்சார் போட்டியைச் சாதமாகப் பயன்படுத்தி அப்போதைய இலங்கை இராணுவத்தின் பலவீனங்களை இந்த நாடுகளின் இராணுவ உதவிகள், தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, இலங்கை எவ்வாறு ஈழப் போரை இல்லாதொழித்ததோ, அதேபோன்று 2020இல் ஏற்பட்டுள்ள இலங்கையின் பொருளாதாரப் பலவீனங்களை இந்தப் புவிசார் அரசியலின் போட்டிகளைப் பயன்படுத்தி இலங்கை மீட்டெடுக்கும் வாய்ப்புகளே அதிகம்.

ந்தோ- பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பு விவகாரத்தில் இலங்கை அரசு அமெரிக்க, இந்திய நலன்களுக்கு ஏற்றவாறு செயற்பட வேண்டுமென்ற ஆழமான கடினமாக பரிந்துரை ஒன்றை இந்தியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் முன்வைத்திருக்கிறார்.

இலங்கை அரசின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடன் கொழும்பில் இடம்பெற்ற சந்திப்பில் முக்கியமாக மூன்று விடயங்கள் உள்ளடங்கியிருந்ததாக இலங்கை வெளியுறவுத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். ஒன்று கடல்சார் கூட்டுப் பாதுகாப்பு ஒத்துழைப்பு, (Maritime Domain Awareness) (MDA) அதாவது இலங்கைக் கடற்படை வைத்திருக்கும் ராடர்கள் இந்தியக் கடற்படையின் ராடர்களில் தெரிய வேண்டும் என்பது. இரு நாடுகளும் ஒரே மாதிரியான ராடர் செயற்பாடுகளைக் கொண்டிருக்க வேண்டும் என்ற நோக்கிலானது.

இரண்டாவது பாக்கிஸ்தான் தவிர்ந்த இந்தியப் பொருங்கடலை மையப்படுத்திய பிராந்திய ஒத்துழைப்பு (Indian Ocean Rim Association) (IORA) அதாவது வர்த்தக ரீதியான செயற்பாடுகள் மற்றும் பிராந்திய நாடுகளை ஊக்குவித்தல தொடர்பான விவகாரங்களில் இலங்கையின் பங்களிப்பு.

முன்றாவது கொழும்பு கிழக்குத்துறைமுக கிழக்கு முனைய கொள்கலன் இறங்கு துறை அபிவிருத்தி. அதாவது இந்திய, ஜப்பான், இலங்கை ஆகிய மூன்று நாடுகளும் ஒன்றினைந்து மேற்கொள்ளும் அபிவிருத்தித் திட்டத்தை ஆரம்பித்தல்

இந்த மூன்று விடயங்கள் தொடர்பாகவும் இலங்கை ழுமுமையான ஒத்துழைப்பை வழங்குமென அஜித் டோவால் புதுடில்லியில் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கையில் சந்திப்பை முடித்துக் கொண்டு புதுடில்லிக்குச் சென்ற அவர், இந்தோ- பசுபிக் பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில் இலங்கையின் பங்களிப்புத் தொடர்பான உறுதிப்பாடுகளை பிரதமர் நரேந்திர மோடியிடம் கூறியிருக்கிறார். இது தொடர்பாக இலங்கை வெளியுறவு அமைச்சின் செயலாளர் பேராசிரியர் ஜெயநாத் கொலம்பகே இந்தியச் செய்தியாளர்களிடம் விபரமாகக் கூறியிருக்கிறார்.

குறிப்பாக கொழும்புத்துறைமுக கிழக்கு முனைய கொள்கலன் அபிவிருத்தித் திட்டம் இந்தியாவிடமே ஒப்படைக்கப்படும். அந்த விடயத்தில் இலங்கையிடம் மாற்றுக் கருத்தில்லை எனவும் ஜெயநாத் கொலம்பகே உறுதியாகக் கூறிருக்கிறார். ஆகவே கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான இலங்கை அரசாங்கம் இந்திய அமெரிக்க நலன்சார்ந்தும் செயற்படும் என்பது வெளிப்பட்டுள்ளது. அத்துடன் பொருளாதார விடயங்களில் சீனாவுடன் இணைந்து செயற்படுவதை இந்தியாவோ அமெரிக்காவோ எதிர்க்காது என்ற நம்பிக்கையும் இலங்கைக்குக் கிடைத்திருக்கிறது.

அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ செப்ரெம்பர் மாதம் 28ஆம் திகதி கொழும்புக்கு வந்து சென்ற போதும்கூட இந்த நம்பிக்கையை அமெரிக்காவிடம் இருந்து பெற்றிருந்தது. ஆனால் இலங்கையின் இறைமை சீனாவிடம் அடகு வைக்கும் நிலைக்குச் சென்றுவிடக்கூடாதென்ற எச்சரிக்கையும் மைக் பொம்பியோவினால் கொழும்பில் முன்வைக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த எச்சரிக்கையை கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்காக புதியதொரு மாற்றமாகவே கருதியிருக்க வேண்டும்.

ஏனெனில் மாலைதீவு அரசு அமெரிக்க, இந்திய அரசுகளின் நலன்களையே முதன்மைக் கொள்கையாக வகுத்துள்ளது. ஷஆனால் அப்படியொரு முதன்மைக் கொள்கை ஒன்றை இலங்கையும் வகுக்க வேண்டுமென அமெரிக்காவோ இந்தியாவோ இலங்கையிடம் கேட்டதாகத் தெரியவில்லை. மாலைதீவு ஜனாதிபதி சோலீ இப்ராஹிம் அரசாங்கத்தின் கீழ் மாலைதீவு அதன் வெளியுறவுக் கொள்கை அணுகுமுறை ‘இந்தியா முதலில்’ என்ற அடிப்படையில் அமையும் என்று வெளிப்படையாக அறிவித்திருக்கிறது. நரேந்திரமோடி இரண்டாவது தடவையாகப் பதவியேற்ற அடுத்த சில நாட்களில் மாலைதீவுக்குச் சென்றிருந்தார். அதன் பின்னரே அவ்வாறான கொள்கை ஒன்றை மாலைதீவு வகுத்ததெனலாம்.

இலங்கைக்கும் நரேந்திர மோடி வந்தபோது, மாலைதீவு அரசின் முன்மாதிரி பற்றிக் கூறப்பட்டிருந்தது, ஆனால் இந்தியா முதலில் என்ற அணுகுமுறை உத்தரவாதத்தை இலங்கையிடம் இருந்து பெறமுடியவில்லை. இந்தியாவுக்கும் அப்படியொரு உத்தரவாதம் இலங்கையிடம் இருந்து உடனடியாகத் தேவைப்பட்டிருக்கவும் இல்லை. ஏனெனில் MDA எனப்படும் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு Ioro எனப்படும் இந்தியப் பெருங்கடல் பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு ஏற்ப இலங்கை செயற்பட்டாலே போதும் என்ற நோக்கு இந்தியாவிடம் இருந்தது.

ஆகவே இந்திய அமெரிக்க அரசுகளின் இலங்கை தொடர்பான இந்த அணுகுமுறை கோட்டாபய ராஜபக்சவின் கொள்கைக்குப் பொருத்தமானதாகவும். இலங்கையின் இறைமை தன்னாதிக்கம் என்பதை நிலைநிறுத்த அது வாய்ப்பாகவும் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியுமெனவும் இலங்கை நம்புகின்றது. அத்துடன் ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலை குறித்த பேச்சுக்களையும் இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கள் உள்ளடக்கிவிடலாமெனவும் கோட்டாபய ராஜபக்ச உள்ளிட்ட சிங்களத் தலைவர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

மைக் பொம்பியோ கொழும்புக்கு வந்து சென்ற பின்னர் இலங்கையின் வெளியுறவுச் செயலாளர் பேராநிரியர் ஜெயநாத் கொலம்பகே சீனாவின் பிரதி வெளியுறவு அமைச்சர் லுவோ ஷேhஹய் ஆகிய இருவரும் சந்தித்துப் பேசியிருக்கின்றனர். இலங்கையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி ஒத்துழைப்புத் திட்டங்களைத் துரிதப்படுதுவதற்கும் வர்த்தக மற்றும் முதலீடுகளை அதிகரிப்பதற்கும் சீனாவும் இலங்கையும் தீர்மானித்ததாக இலங்கை வெளியுறவு அமைச்சு வெளியிட்டிருந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

கடந்த வாரம் கொழும்பில் மூன்று நாட்கள் இடம்பெற்ற இந்தோ- பசுபிக் கடல்சார் பாதுகாப்பு மாநாட்டில் இலங்கை மாலைதீவுக் கடற்பாதுகாப்பை முழுமையாக அங்கீகரித்துச் செயற்படுத்த மாநாட்டில் உறுதியளிக்கப்பட்டதென்று மாலைதீவில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் சமூகவலைத்தளத்தில் கூறியுள்ளார். இலங்கை உடன்பட்டது என்பதுதான் அவருடைய பதிவின் பிரதான நோக்கமாக இருந்தது. இந்த மாநாட்டில் இலங்கையின பாதுகாப்புச் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன, மாலைதீவு பாதுகாப்பு அமைச்சர் மரியா டிடியும் பங்கேற்றனர். 2014ஆம் ஆண்டுக்குப் பின்னர் இடம்பெற்ற இந்த மாநாட்டில், மொரீசியஸ், சீnஷல்ஸ் ஆகிய இரண்டு நாடுகளும் புதிதாக இணைந்து கொண்டன.

ஆகவே 2009ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் இந்தோ பசுபிக் பிராந்தியத்தில் சீனா ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், தற்போது 10ஆண்டுகள் கடந்துவிட்டன. இதற்கு இலங்கை ஒத்துழைத்துச் செயற்பட்டது என்பதே உண்மை. அமெரிக்க இந்திய அரசுகள் இப்போதுதான் அதுபற்றி உணர ஆரம்பிக்கின்றன. ஆனாலும் இலங்கையோடு அமெரிக்க இந்திய அரசுகள் விட்டுக்கொடுத்துச் செயற்படுவதையே சமீபகால அணுகுமுறையகக் காணமுடிகிறது எனபது தொடர்பாக ஏலவே இப்பத்தியில் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

மாலைதீவைப் போன்று இலங்கையை அமொரிக்க இந்திய அரசுகள் விரைவாகத் தமது கட்டுப்பாட்டில் கொண்டுவரமுடியாது. 2012ஆம் ஆண்டு ஜெனீவா மனித உரிமைச் சபையில் அமெரிக்கா முன்வைத்த இலங்கை தொடர்பான பிரேரணையைக் கூட மிகவும் புத்திசாலித்தனமாக இலங்கை கையாண்டது. 2015ஆம் ஆண்டு புதிய பிரேரணை ஒன்றை அதே அமெரிக்காவினால் சமர்ப்பிக்க வைத்து அதற்கு இணை அணுசரணை வழங்கி மிகக் குறைவான அழுத்தம் உள்ள 30/1 தீர்மானம் நிறைவேற்ற்ப்பட்டிருந்தது.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியமை இலங்கை அரசுக்கு மிகப் பெரிய வெற்றி. சென்ற புதன்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றியிருந்த எதிர்க்கட்சி உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல, 30/1 தீர்மானத்துக்கு 2015இல் ஆதரவு வழங்கியதால் இலங்கை சர்வதேச அரங்கில் காப்பாற்றப்பட்டதாகப் பெருமையோடு கூறியிருந்தார்.

ஆனால் இந்த ஆண்டு மார்ச் மாதம் கோட்டாபய அரசாங்கம் 30/1 தீர்மானத்தில் இருந்து விலகியுள்ளது. அவ்வாறு விலகியதால் இலங்கைக்கு ஆபத்து ஏற்படும், போர்க்குற்ற விசாரணை தீவிரமாக இடம்பெறும், ஜே பைடன் தலைமையிலான அமெரிக்காவின் புதிய நிர்வாகம் ஜெனீவா மனித உரிமைச் சபையில் மீண்டும் இணைந்து இலங்கைக்கு எதிராக மீண்டுமொரு தீர்மானம் கொண்டு வரும் என்றெல்லாம் தற்போது சிங்கள எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. இதனைச் சில தமிழ் அரசியல் கட்சிகளும் நம்புகின்றன. சில ஆய்வாளர்களும் அப்படியே எழுதுகின்றனர்.

வெளிநாடுகளில் பணியாற்றும் சிங்கள இராஜதந்திரிகள், இந்த விவகாரத்தை ஈழத்தமிழர்களுக்குச் சார்பின்றிச் சிறப்பாகக் கையாள்வார்கள் என்ற நம்பிக்கை சிங்கள எதிர்க்கட்சிகளுக்கு உண்டு. கோட்டாபாயவுக்கு எதிரான அரசியலுக்காக ஆபத்து என்று அவர்கள் சும்மா பேசக்கூடும். ஆனால் தமிழ் அரசியல் கட்சிகள்; அதனை அப்படியே நம்பி புவிசார் அரசியலில் என்ன நடக்கின்றது என்பதை அறியாமல், தமிழ் மக்களைத் தவறான வழிக்குக் கொண்டு செல்கின்றனர். அஜித் டோவாலின் கொழும்பு வருகையும் கொழும்பில் நடந்த கடல்சார் பாதுகாப்பு மாநாடும் இலங்கை குறித்த அமெரிக்க, இந்திய வெளியுறவுக் கொள்கைகளை புடம்போட்டுக் காண்பித்துள்ளன.

2009ஆம் ஆண்டு தை மாதம் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னரான இந்தோ- பசுபிக் பிராந்திய நலன்சார் போட்டியைச் சாதமாகப் பயன்படுத்தி அப்போதைய இலங்கை இராணுவத்தின்; பலவீனங்களை அந்த நாடுகளின் இராணுவ உதவிகள், தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, இலங்கை எவ்வாறு ஈழப் போரை இல்லாதொழித்ததோ, அதேபோன்று 2020இல் ஏற்பட்டு இலங்கையின் பொருளாதாரப் பலவீனங்களை இந்தப் புவிசார் அரசியலின் போட்டிகளைப் பயன்படுத்தி இலங்கை மீட்டெடுக்கும் வாய்புகளே உண்டு.

அவ்வாறு மீட்டெடுக்கும்போது வடக்கு கிழக்கிலும் பொருளாதார அபிவிருத்தி என்றொரு கதையையும் இலங்கை முன்வைக்கும். அதனை அமெரிக்க இந்திய அரசுகள் நம்பும். ஆனால் அங்கே எதுவும் நடக்காது. எனவே இந்த நிலமைகளை அறிந்தே ஈழத் தமிழர்கள் அரசியலை முன்னெடுக்க வேண்டும். மாறாக சீனாவோடு இலங்கை நிற்கிறது ஆகவே அமெரிக்கா வடக்குக் கிழக்கு இணைந்த சுயாட்சியைப் பெற்றுத் தரும் என்ற கற்பனையோடு அல்ல.

  • அ.நிக்ஸன்