கிளிநொச்சி மாவட்டத்தில் இதுவரை 17 பேர் கொவிட் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் மூவர் ஏற்கனவே குணமடைந்து வீடு சென்றுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மாவட்டத்தில் தற்போது கொவிட் 19 தொடர்பான நிலை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்விடயத்தினை தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று புதிதாக ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார். அவருடன் மாவட்டத்தில் இதுவரை 17 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்களில் மூவர் ஏற்கனவே குணமடைந்து வீடுகளிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.நேற்றைய தினம் கண்டறியப்பட்டவர் ஏற்கனவே தொற்று அடையாளம் காணப்பட்டவருடன் தொடர்புபட்டவர் என சுகாதார தரப்பு தெரிவிக்கின்றது.
அந்த வகையில் அவருடன் தொடர்புபட்டவர்களை அடையாளம் காணும் செயற்பாடுகள் நேற்று முதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அவர்களையும் தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள மழையுடனான காலநிலையில் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும், கொவிட் தொற்று தொடர்பில் அவதானமாக செயற்பட்டு சுகாதார நடைமுறைகளை தொடர்ந்தும் மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் பொதுமக்களை கோரியுள்ளார்.