கொரோனா தொற்று முடிவுக்கு வருவதை நம் கண்முன்னே காணலாம் – உலக சுகாதார நிறுவன தலைவர் நம்பிக்கை

கொரோனா வைரஸ் பெருந்தொற்று முடிவுக்கு வருவதை உலகம் கனவு காண தொடங்கலாம் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று முன்தினம் நடந்த ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் இணையவழியில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், “கொரோனா வைரஸ் தடுப்பூசி சோதனைகளின் முடிவுகள் நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளன. எனவே கொரோனா வைரஸ் பெருந்தொற்று முடிவுக்கு வருவதை உலகம் கனவு காண தொடங்கலாம்” என கூறினார்.

மேலும், “கொரோனா தடுப்பூசி வினியோக நெரிசலில் ஏழைகளையும், ஓரங்கட்டப்பட்டவர்களையும் பணக்கார மற்றும் சக்தி வாய்ந்த நாடுகள் மிதித்து விடக்கூடாது” என கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, “கொரோனா வைரஸ் பெருந்தொற்று அதன் மிகச்சிறந்த மற்றும் மிக மோசமான பக்கத்தை மனித குலத்துக்கு காட்டி உள்ளது. இரக்கம், சுய தியாகத்தின் ஊக்கம் அளிக்கும் செயல்கள், விஞ்ஞானம் மற்றும் புதுமையின் மூச்சடைக்கக்கூடிய சாதனைகள் மற்றும் ஒற்றுமையின் இதயத்தை தூண்டும் நிகழ்வுகளையும் கூட காட்டியுள்ளது” என கூறினார்.