விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு தடை செய்யப்பட்ட இயக்கமாக இருப்பதனால் அதன் தியாகிகளை நினைவு நினைவுகூர்வது தடை செய்யப்படுகிறது என்று அரசாங்கம் கூறுகிறது. இந்த அடிப்படையிலேயே கடந்த திலீபன் நினைவு நாள் மாவீரர் நாள் என்பவற்றைப் பொதுவெளியில் கொண்டாடத் தடைகள் விதிக்கப்பட்டன.
இது விடயத்தில் தமிழ் கட்சிகளுக்கு இரண்டு வழிகள் உண்டு. முதலாவது மனோ கணேசன் சுட்டிக் காட்டியது போல புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்குவதற்கான சட்ட முயற்சிகளில் இறங்குவது. இரண்டாவது நினைவு கூர்தலுக்கான கூட்டு உரிமைக்காக மக்கள் மயப்பட்ட போராட்டங்களை முன்னெடுப்பது. இவை இரண்டையும் சற்று விரிவாக பார்க்கலாம்.
ஒரு தடை செய்யப்பட்ட இயக்கத்தை நினைவு கூர முடியாது என்று இலங்கை அரசாங்கம் கூறுகிறது. எனவே அந்த இயக்கத்தின் தடையை நீக்குவதற்கு வழக்கறிஞர்களாக உள்ள தமிழ் அரசியல்வாதிகள் போராடலாம். ஆனால் இந்த போராட்டத்தை அவர்கள் ஏற்கனவே செய்திருந்திருக்க வேண்டும். அதாவது ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் அதன் மறைமுக பங்காளியாக கூட்டமைப்பு இருந்த காலத்தில் அதை செய்திருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக ஐநாவின் நிலைமாறுகால நீதிக்கான தீர்மானத்தில் கூட்டமைப்பும் ஒருவிதத்தில் மறைமுகப் பங்காளி. எனவே தனது மற்றொரு பங்காளியான ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தின் மீது செல்வாக்கைப் பிரயோகித்து சட்டத் தடைகளை நீக்குவது குறித்து சிந்தித்திருந்திருக்க வேண்டும். ஆனால் அந்த நேரத்தில் யாரும் அதை சிந்திக்கவில்லை.
நிலைமாறுகால நீதியின் கீழ் நினைவு கூர்தலுக்கான உரிமை என்பது ஏற்றுக்கொள்ளப்படுகிறது. குறிப்பாக நிலைமாறுகால நீதியின் ஒரு பகுதியான இழப்பீட்டு நிதியின் கீழ் பொதுமக்கள் தமது இழப்புக்களை நினைவு கூர்வதற்கும் பொதுவான அல்லது தனிப்பட்ட நினைவுச் சின்னங்களை நிறுவுவதற்கும் உரிமை பெற்றவர்கள்.
எனினும் கூட்டமைப்பின் உதவியோடு ரணில் விக்கிரமசிங்க உருவாக்கிய இழப்பீட்டு நீதிக்கான சட்ட மூலத்தில் இது தொடர்பான விவரங்கள் தெளிவாக கூறப்படவில்லை என்பதனை விடயம் தெரிந்தவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். இழப்பீட்டு நீதிக்கான அலுவலகத்தை உருவாக்குவதற்கான சட்டமூலத்தை எழுதும் பொழுது அதில் நினைவுகூர்தல் தொடர்பில் உரிய ஏற்பாடுகள் இணைக்கப்பட்டிருந்திருக்க வேண்டும். ஆனால் இழப்பீட்டு நீதிக்கான சட்டமூலத்தில் அப்படி எதுவும் இணைக்கப்படவில்லை என்றும் சுட்டிக் காட்டப்படுகிறது.
எனவே இதுவிடயத்தில் ரணில் விக்கிரமசிங்கவை எல்லாத் தருணங்களிலும் பாதுகாத்த கூட்டமைப்பின் வழக்கறிஞர்கள் தமது மக்களுக்கு பொறுப்புக் கூற வேண்டும். தமது பேரம் அதிகமாக இருக்கும் ஒரு காலகட்டத்தில் தமக்குத் தேவையானதைப் பெற்றுக் கொள்வதே வழமையான ஒரு அரசியல் ஒழுக்கம். அன்றைக்கு அவர்கள் ஏன் அதைச் செய்யவில்லை? செய்ய வேண்டியதை செய்ய வேண்டிய நேரம் செய்யாமல் இப்பொழுது வழக்காடி என்ன பயன்?
இதுவிடயத்தில் இப்பொழுது கூட்டமைப்பின் சட்டவாளர்களை சுட்டிக்காட்டும் மனோ கணேசனும் அப்போது ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தில் ஓர் அமைச்சராக இருந்தவர். அப்போது, அவர் அதனைச் சுட்டிக்காட்டியிருந்தார். இந்நிலையில் ராஜபக்சக்கள் இரண்டாவது வருகைக்குப்பின் குறிப்பாக 20 ஆவது திருத்தத்தின் கீழ் இனிமேல் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்குவதற்கான வாய்ப்புகள் ஒப்பீட்டளவில் குறைந்து விட்டன என்பதே யதார்த்தம். இது முதலாவது.
இரண்டாவது- நினைவு கூர்தலுக்கான கூட்டுரிமையைக் கேட்டுப் போராடுவது. இதற்கு திலீபன் நினைவு நாள் ஓர் உதாரணம். திலீபனின் நினைவு நாளையும் அரசாங்கம் சட்ட ரீதியாகத் தடுத்தது. தடைக்கு எதிராக வழக்காடிய தமிழ் அரசியல்வாதிகள் வெற்றி பெற முடியவில்லை. எனினும் தடை விதிக்கப்படாத ஒரு இடமாக பார்த்து குறியீட்டு வகைப்பட்ட எதிர்ப்பை அவர்கள் காட்டினார்கள். அதன்பின் நினைவு கூர்தலுக்கான உரிமையைக் கேட்டு ஒரு கடையடைப்பை ஒழுங்குபடுத்தினார்கள். அது ஒப்பீட்டளவில் வெற்றி பெற்ற ஒரு கடையடைப்பு. ஒப்பீட்டளவில் அதிகம் மக்கள் மயப்பட்ட ஓர் எதிர்ப்பு. கிழக்கில் சில பட்டினங்களைத் தவிர கடையடைப்பு தமிழ் பகுதிகளில் எதிர்பாராத வெற்றியைப் பெற்றது மட்டுமல்ல அதில் வடக்கில் முஸ்லிம் சமூகமும் கடைகளை மூடித் தனது சகோதரத்துவத்தைக் காட்டியது.
திலீபன் நினைவு நாளில் பெற்ற படிப்பினைகளின் அடிப்படையில் தமிழ்க் கட்சித் தலைவர்கள் சிந்தித்திருக்கவில்லை. சிந்தித்திருந்தால் மறுபடியும் மாவீரர் நாளை ஒரு சட்ட விவகாரமாக அணுகியிருக்க மாட்டார்கள். திலீபனின் நினைவு நாளில் நினைவு கூர்வதற்குத்தான் வரையறைகள் இருந்தன. ஆனால் பொதுவாக நினைவுகூர்தலை அனுமதிக்குமாறு கேட்டு அதாவது நினைவு கூர்தலுக்கான கூட்டுரிமைக்காக நடந்த கடையடைப்பை யாரும் பெரியளவில் தடுக்கவில்லை. எனவே கூட்டுரிமைக்கான போராட்டத்தை முன்னெடுப்பதே இப்போது இருக்கக்கூடிய ஒரே வழி.
இது விடயத்தில் ஏற்படக்கூடிய சட்டத் தடை எனப்படுவது கோவிட் 19 க்குரிய தனிமைப்படுத்தல் சட்டங்கள்தான். இச்சட்டச் சிக்கலை எதிர் கொள்ளும் விதத்தில் புதிய உபாயங்களை புதிய போராட்ட வழிமுறைகளை ஏன் தமிழ்க் கட்சித் தலைவர்கள் சிந்திக்கக்கூடாது?
நினைவு கூர்தலுக்கான உரிமை என்பது அனைத்துலக சட்டங்களின் கீழ் குறிப்பாக வழக்காற்று சட்டங்களின் கீழ் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஓர் உரிமை. இறந்தவர் அல்லது கொல்லப்பட்டவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராகவும் இருக்கலாம்.எந்த இயக்கத்தைச் சேர்ந்தவராவும் இருக்கலாம். ஆனால் இறப்பு இறப்புத்தான். இழப்பு இழப்புத்தான். நினைவு நினைவுதான். எனவே நினைவு கூரல் நினைவுகூரல்தான். அதில் அரசியல் உண்டு. ஆனால் நினைவு கூர்வதற்கான வெளியை அனைத்துலகச் சட்டங்கள் குறிப்பாக அனைத்துலக வழக்காற்று சட்டங்கள் ஏற்றுக்கொள்கின்றன. நிலைமாறுகால நீதியும் ஏற்றுக்கொள்கிறது.
இந்த அடிப்படையில் நினைவு கூர்தலுக்கான கூட்டுரிமையைக் கேட்டு தமிழ்க் கட்சித் தலைவர்களும் அரசியல்வாதிகளும் போராடலாம். நிலைமாறுகால நீதியின் கீழ் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக நினைவு கூர்தல் ஒரு நடைமுறையாக இருந்தது என்பதைச் சுட்டிக்காட்டி உலக சமூகத்திடம் குறிப்பாக ஐ.நாவிடம் ஆதரவைக் கேட்கலாம். தனிமைப்படுத்தல் சட்டங்களுக்குட் சிக்குப்படாமல் எப்படி மக்கள் மயப்பட்ட ஒரு போராட்டத்தை முன்னெடுப்பது என்பது குறித்து தமிழ் அரசியல்வாதிகள் சிந்தித்தால் என்ன?
நிலைமாறுகால நீதி தொடர்பில் ஐநா பரிந்துரைத்த வடிவத்தைத்தான் ராஜபக்சக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக ராஜபக்ச பாணியிலான ஒரு நல்லிணக்கப் பொறிமுறை குறித்து அவர்கள் சிந்திக்கக் கூடும் என்று நம்பத்தக்க விதத்தில்தான் கடந்த ஓராண்டு காலம் அமைந்திருக்கிறது. ஏனெனில் ராஜபக்சக்கள் ஐநா தீர்மானத்தில் இருந்து வெளியேறி விட்டதாக கூறி விட்டார்கள்.
ஆனால் ஐநா தீர்மானத்தின் கீழ் ரணில் விக்ரமசிங்க உருவாக்கிய கட்டமைப்புக்களை அவர்கள் தொடங்கும் இயங்க விட்டிருக்கிறார்கள். எனினும் அக்கட்டமைப்புகளில் இணைந்து செயற்பட்ட ஐநா அலுவலர்களுடனான ஒப்பந்தம் வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் முடிவடைகிறது. அதன்பின் அந்த உடன்படிக்கை புதுப்பிக்கப்படாது என்று ஓர் எதிர்பார்ப்பு உண்டு. தவிர கடைசியாக நிறைவேற்றப்பட்ட நிதிநிலை அறிக்கையில் நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கென்று குறிப்பிட்டு நிதி ஒதுக்கப்படவில்லை. எனினும் இழப்பீட்டு நீதிக்கான அலுவலகத்துக்கு நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. முன்னைய ஆண்டு நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட நிதியை விட ஒப்பீட்டளவில் கூடுதலான நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல கடந்த கிழமை காணாமல் போனவர்களுக்கான அலுவலகம் ஒரு புள்ளிவிவரத்தை வெளியிட்டிருக்கிறது. அதில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பான முதல் நிலை அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது.
நிலைமாறுகால நீதிக்குரிய கட்டமைப்புகள் தொடர்பில் ராஜபக்சக்கள் இன்னமும் கறாரான முடிவுகளை எடுத்திருப்பதாகத் தெரியவில்லை. வரும் மார்ச் மாதம் ஐநாவில் அவர்கள் முன்னைய தீர்மானத்துக்கு எதிரான நிலைப்பாட்டைக் காட்டுவார்கள். அதே சமயம் ஒரு புதிய தீர்மானத்தை அதாவது ராஜபக்ச பாணியிலான நல்லிணக்கப் பொறிமுறைகளுக்குரிய ஒரு தீர்மானத்தை உருவாக்குமாறு அவர்கள் கேட்கக்கூடும் என்றும் எதிர்பார்ப்புகள் உண்டு. இதுவிடயத்தில் ஏற்கனவே கம்பூச்சியா யுகோஸ்லாவியா போன்ற முன்னுதாரணங்களை ஐநா வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. அங்கெல்லாம் முதலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் கைவிடப்பட்டு பின்னர் திருத்தப்பட்ட புதிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. எனவே இது விடயத்தில் ராஜபக்சக்கள் தங்களுக்குச் சாதகமான அல்லது வாய்ப்பான ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுமாறு கேட்கக்கூடும்.
இத்தகையதொரு பின்னணியில் நினைவு கூர்தலுக்கான வெளி தொடர்பிலும் அவர்களை அனைத்துலக வழக்காற்று சட்டங்களை அல்லது நிலைமாறுகால நீதிக்குரிய ஏற்பாடுகளை ஏற்றுக்கொள்ளுமாறு நிர்ப்பந்திக்க இடம் உண்டு. எனவே இது விடயத்தில் திலீபன் நினைவு நாளில் இருந்து பெற்ற படிப்பினைகளின் அடிப்படையில் சிந்தித்திருந்திருந்தால் மாவீரர் நாளை ஒரு சட்ட விவகாரமாக அணுகி இருந்திருக்கக் கூடாது. மாறாக அதை ஒரு அரசியல் விவகாரமாக அனுகியிருந்திருக்க வேண்டும். எனினும் நினைவு கூர்தலை ஒரு சட்டப் பிரச்சினையாக அணுகியதன் மூலம் தமிழ் வழக்கறிஞர்கள் ஒரு விடயத்தைச் சாதித்திருக்கிறார்கள் என்று ஒரு சட்டச் செயற்பாடாளர் தெரிவித்தார். அது என்னவெனில் இலங்கைத் தீவின் நீதி பரிபாலனக் கட்டமைப்பு நினைவு கூர்தல் தொடர்பில் எப்படிப்பட்ட முடிவை எடுக்கும் என்பதை அவர்கள் பரவலாக வெளிப்படுத்தியிருகிறார்கள்.
இனிமேலாவது அவர்கள் அதை ஓர் அரசியல் விவகாரமாக அணுகத் தயாரா? அதற்குத் தேவையான தேவையான கூட்டு ஒழுக்கமும் கொள்ளளவும் துணிச்சலும் தீர்க்கதரிசனமும் நீண்டகாலத் திட்டங்களும் தமிழ் அரசியல்வாதிகளிடம் உண்டா ?
- நிலாந்தன்