கொவிட்-19 தடுப்பு மருந்து வரும் வரையில் வடக்கு மக்கள் உரிய சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவது அவசியம் என்றும் அதுதொடர்பில் அதிகாரிகள் உரிய நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்க வேண்டும் என்றும் ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ்; தெரிவித்தார்.
வடமாகாண கொவிட் 19 தடுப்பு செயலணி மீளாய்வுக் கலந்துரையாடல் இன்று வடமாகாண ஆளுநர் திருமதி. பி.எஸ்.எம். சார்ள்ஸ் தலைமையில் , ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. இதில் பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், யாழ் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்கள், மாகாணத்திற்குட்பட்ட மாவட்டச் செயலாளர்கள், வடமாகாண சுகாதார சேவைப் பணிப்பாளர், யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர், துறைசார் செயலாளர்கள், கிளிநொச்சி மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி, மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் கடற்படை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது கருத்து வெளியிட்ட ஆளுநர் தெரிவித்ததாவது,
கொவிட் 19 தொற்றின் தற்போதைய நிலையானது ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும் போது எமது மாகாணத்தில் மிகக் குறைந்தளவான தொற்றாளர்களே இனங்காணப்பட்டுள்ளனர்.
எனவே தடுப்பு மருந்து நடைமுறைக்கு வரும் காலம் வரை, மக்கள் சுகாதார வழிகாட்டல் நடைமுறைகளை பின்பற்றி சுற்றியுள்ளவர்களையும். சமுகத்தையும் பாதுகாக்க அக்கறையுடன் செயற்பட வேண்டும்
அனைத்து கட்டுமானப் பணியாளர்கள்; மற்றும் வீதி திருத்தப் பணியாளர்களும் சுகாதார அமைச்சின் சுகாதார வழிகாட்டி சுற்று நிருபத்தினை பின்பற்றி தமது நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும், இவர்களுக்குத் தேவையான விழிப்புணர்வு அறிவுறுத்தல், மேற்பார்வை நடவடிக்கைகளை சுகாதாரத் துறையினர், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் பொலிஸ் தரப்பினரும் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.
வெளி மாகாணங்களிலிருந்து வருபவர்களாலேயே எமது மாகாணத்திற்கு கொவிட்-19 தொற்று அதிகரிப்பதால், வெளி மாகாணத்திற்கு சென்று வரும் பயணிகள் மற்றும் அனைத்து வாகன உரிமையாளர்களும் தமது விபரங்களை வவுனியா சோதனைச் சாவடி மற்றும் உரிய மாவட்ட பொதுச் சுகாதார பரிசோதகர்களிடம் வழங்க வேண்டும்.
மேலும் சட்டரீதியற்ற இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை கடற்படையினர் மேற்கொள்ள வேண்டும். மாகாணத்தில் நடைபெறும் சட்ட ரீதியற்ற நடவடிக்கைகளை கட்டுப்படுத்தி கிராமிய விழிப்புணர்வுக் குழுக்களை விழிப்பாக செயற்பட்டு காவற்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்குவது அவசியமானதாகும்.
தற்போது நடைபெறும் சட்டரீதியற்ற செயற்பாடுகளின் உண்மை நிலை, அதற்கான காரணங்களை தமிழ் மொழியில் ஊடக அறிவித்தலாக மக்களுக்கு தெரியப்படுத்த பொலிஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்தோடு மாணவர்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்தாது ஏனைய பொழுது போக்கு முறைகளை பயன்படுத்தி மன அழுத்தங்களிலிருந்து வெளிவர முயற்சிக்க வேண்டும், இதற்காக பொது இடங்களில் குடும்பத்தினருடன் இருக்கக் கூடிய பூங்காக்கள் மற்றும் பொது விளையாட்டு வசதிகளை உருவாக்கி கொடுத்து மாணவர்களுக்கு ஆலோசனைகளை வழங்குவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
விவசாயத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே 500 மிளகாய் பயிர்ச் செய்கையாளர்களை தெரிவு செய்து அவர்களுக்கான உதவிகளை வழங்கவுள்ளதால், அதற்கான உரிய நடவடிக்கைகளை விவசாயத்துறை செயலாளர் முன்னெடுக்க வேண்டும்.
அண்மைக்காலமாக தற்கொலை இறப்புகள் அதிகரித்து வரும் நிலையில், தற்கொலை முயற்சிக்கான காரணங்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக ஆய்வொன்றை யாழ்ப்பணிப்பாளர் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இதற்காக 24 மணித்தியால உதவி தொலைபேசி சேவை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை ஆளுநரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
Eelamurasu Australia Online News Portal