எழுக தமிழ் செயற்பாட்டாளர் அலெக்ஸ் கைது- கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

எழுக தமிழிற்கு பின்னரும் மாணவர்கள் படுகொலைக்குப் பின்னரும் தோன்றியிருக்கும் மக்கள் எழுச்சியினால் மிரண்டு போயுள்ள அரசாங்கம் மாணவர்கள் மீதான படுகொலையை நியாயப்படுத்த வேண்டிய சங்கடமான சூழ்நிலையில் யாழில் அசாதாரண கூழல் நிலவுவதாக காட்ட முனைவதாகவும் அதன் ஒரு அங்கமாகவே  தமது கட்சியின் தீவிர செயற்பாட்டாளரும் , எழுக தமிழ் நிகழ்வில் முன்னின்று செயற்பட்ட செயற்பாட்டாளர்களில் ஒருவருமான அலெக்ஸ் அரவிந்தன் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் தெரிவித்துள்ளார்.

யாழில் உள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கட்சி அலுவலகத்தில் திங்கட்கிழமை (07) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,

கடந்த சனிக்கிழமை எமது அலுவலகத்திற்கு காவல்துறை சீருடை அணிந்தவர்கள் மற்றும் சிவில் உடையில் வந்த நபர்கள் எமது கட்சி அலுவலகத்தில் இருந்த அலெக்ஸ் அரவிந் எனும் எமது கட்சியின் செயற்பாட்டாளரை கைது செய்து கொண்டு சென்று இருந்தனர். அது தொடர்பில் நாம் யாழ்.காவல்துறை நிலையத்துடன் தொடர்பு கொண்டு கேட்ட வேளை தாம் அவ்வாறு யாரையும் கைது செய்யவில்லை என தெரிவித்தனர்.

அதன் பின்னர் நாம் மனித உரிமை ஆணைக்குழுவிடம் முறையிட்டோம். மனித உரிமை ஆணைக்குழு விசாரணையின் போது எமது செயற்பாட்டாளரை பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிசார் விசாரணைக்கு அழைத்து சென்று உள்ளதாகவும் 24 மணி நேரத்திற்குள் விசாரணைகள் முடிவடைந்தால் அவரை விடுதலை செய்வதாகவும் இல்லாவிடின் கைது செய்யபாடுவார் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது 48 மணி நேரம் கடந்த நிலையிலும் இதுவரை எமது கட்சியின் செயற்பாட்டாளர் விடுவிக்கப்படவும் இல்லை , அவர் பற்றிய தகவல் எதனையும் எமக்கோ அவரின் பெற்றோர்களுக்கோ உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

எழுக தமிழ் நிகழ்வுடன் தமிழ் மக்கள் மத்தியில் ஒரு எழுச்சி காணப்படுகின்றது. அதேவளை இரு பல்கலைகழக மாணவர்களின் படுகொலை சம்பவமும் , அதனை தொடர்ந்து இடம்பெற்ற போராட்டங்களில் பல்கலைகழக மட்டம் மக்கள் மத்தியில் ஒரு எழுச்சி காணப்பட்டது.

அதனால் மாணவர்கள் மீதான துப்பாக்கி பிரயோகத்தை நியாயப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டு உள்ளது. அதனால் வடக்கில் ஒரு அசாதாரண சூழ்நிலை காணப்படுவதாகவும் , அப்படிப்பட்ட நிலைமை காணப்படுவதனால் தான் காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகம் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டதாகவும் கூறவே வடக்கில் அசாதாரண சூழல் காணப்படுவது போன்ற நிலைமை ஏற்படுத்தப் பட்டு உள்ளது.

தற்போது இந்த நிலைமை தொடர்பில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுக்க காரணம் மக்கள் மத்தியில் பய பீதிகளை ஏற்படுத்தவே.

கொடூரமான சட்டமாக உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க கோரி சர்வதேச மட்டத்தில் அழுத்தங்கள் ஏற்பட தொடங்க , பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கி , அதனை விட மிக மோசமான சட்டத்தை இராணுவத்தினரின் விருப்புடன் கூடிய சட்டத்தை கொண்டு வர உள்ளார்கள்.

பயங்கரவாத தடுப்பு சட்டம் என்பது யாரையும் எந்நேரமும் எந்த ஆதாரமும் சாட்சியமும் இல்லமால் கைது செய்து எத்தனை வருடங்களும் தடுத்து வைக்கலாம் அவர்களை குற்றவாளிகளும் ஆக்கலாம்.

இந்த ஆட்சியும் தமிழ் மக்களை முடக்கும் செயற்பாட்டையே செய்கின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பு பெயரவில் எதிர்க்கட்சி என கூறிக்கொண்டு அரசாங்கத்திற்கு ஆதரவாகவே செயற் படுகின்றது என மேலும் தெரிவித்தார்.

14992064_211704119240621_2761077642789253300_n