வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் நாளை இரண்டாம் திகதி மாலையில் திருகோணமலை ஊடாக சூறாவளியாக ஊடறுக்கும் போது கடல் கொந்தளிப்பாக இருக்கும். எனவே மீனவர்கள் மற்றும் கரையோரப் பிரதேசங்களில் இருக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்கள மட்டக்களப்பு அதிகாரி சுப்பிரமணியம் ரமேஷ் தெரிவித்தார்.
தற்போது கிழக்கில் ஏற்பட்டுள்ள காலநிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்கள மட்டக்களப்பு அதிகாரி சுப்பிரமணியம் ரமேஷ் இன்று செவ்வாய்க்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
“வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்துக்கு அருகிலும் தென் கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்துக்கு மேலாகவும் காணப்படுகின்ற தாழமுக்கமானது கடந்த 6 மணித்தியாலங்களில் மணிக்கு 10 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு திசை நோக்கி நகர்ந்து தென் மேற்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்படுகின்றது.
இது தற்போது திருகோணமலையில் இருந்து கிழக்கு தென்கிழக்காக 530 கிலோமீற்றர் தூரத்திலும் கன்னியாகுமரியிலிருந்து கிழக்கு தென் கிழக்காக 930 கிலோமீற்றர் தூரத்திலும் காணப்படுகின்றது. இது அடுத்துவரும் 24 மணித்தியாலங்களில் சூறாவளியாக வலுவடைந்து திருகோணமலை பிரதேசத்துக்கு நாளை 2ஆம் திகதி மாலை அல்லது இரவு வேளையில் ஊடறுக்கும் என என எதிர்பார்க்கப்படுகின்றது.
இச்சந்தர்ப்பத்தில் கிழக்கு வடக்கு, வடமத்திய, ஊவா மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை, மாத்தறை மாவட்டத்திலும் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இத் தாக்கத்தினால் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30 தொடக்கம் 40 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
எனவே இத்தருணத்தில் கடல் கொந்தளிப்பாக காணப்படும் மீனவர்கள் மற்றும் கரையோரப் பிரதேசங்களிலுள்ள மக்கள் அவதானமாக நடந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்” என்றார்.
Eelamurasu Australia Online News Portal