அவுஸ்திரேலியாவின் சிறப்புப்படை மீதான விசாரணையும், அரசின் நிலைப்பாடும்

ண்மையிலே அவுஸ்திரேலியா இராணுவத்தின் சிறப்புப்படை தொடர்பான விசாரணை அறிக்கை வெளியாகியது. அஃது ஆப்கானிஸ்தானில் சிறப்புப்படையினர் மீதான படுகொலைக் குற்றச்சாட்டு தொடர்பானதாகும். விசாரணை முடிவு அதிர்ச்சிகரமானதாக இருக்கலாம் என்பதை அவுஸ்திரேலியப் பிரதமர் முன்னரே கோடி காட்டியிருந்தார். இருந்தபோதிலும், சிறப்புப்படையினர் சட்டவிரோதக் கொலைகளுடன் சம்பந்தப்பட்டதை அறிந்தபோது கங்காருதேசம் அதிர்ச்சியடைந்தது.

2001 செப்டம்பரில் நியூயோர்க் இரட்டைக்கோபுரம் தாக்குதலுக்கு உள்ளாகியது. அதன்போது மூவாயிரம் வரையானவர்கள் கொல்லப்பட்டனர். அதனால் அமெரிக்கா மட்டுமல்ல, உலகமே அதிர்ச்சிக்கு உள்ளாகியது. அத்தகைய கொடிய தாக்குதலை, தலிபான்களே தொடுத்தனர் என்பது அமெரிக்காவைச் சீண்டியது. அதனுடைய தொடர்ச்சியாகத் தலிபானுக்கு எதிரான அமெரிக்காவின் யுத்தம் ஆரம்பமாகியது. அமெரிக்காவுடன் கூட்டாளிகளும் இணைந்துகொண்டனர். அந்தவகையிலேயே, அவுஸ்திரேலியத் துருப்புக்கள் 2002ல் ஆப்கானிஸ்தானில் களம் புகுந்தன.

காலப்போக்கில் மனிதவுரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. தலிபான், அமெரிக்கா மற்றும் கூட்டாளித் துருப்புக்களின் அத்துமீறல் குறித்து, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், 2016லேயே அச்சம் வெளியிட்டது. பிரித்தானியா சிறப்புப்படையின் அத்துமீறல் குறித்து, பிரித்தானியா அரசு பூரணமான விசாரணையை முன்னெடுக்கவில்லை என, பிபிசி செய்திச்சேவையின் பனோரமா நிகழ்ச்சி குற்றஞ்சாட்டியது. தீர்க்கமான விசாரணையை அரசு முன்னெடுக்கவில்லையோ என்பது தொடர்பில், பிரித்தானியா ஹைகோர்ட் (உயர்நீதிமன்றம்) ஆராய்வதாகவும் செய்திகள் வெளியாகின. இத்தகைய பின்னணியிலே, அவுஸ்திரேலியா தன்னுடைய சுயமுடிவின் பிரகாரம் உள்ளக விசாரணைகளை ஆரம்பித்தமை கவனிக்கத்தக்கதாகும்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள், மெய்ப்பொருள் காண்ப தறிவு என்பதைக் கங்காருதேசம் நம்புகின்றது. அதனாலேயே குற்றச்சாட்டை எதிர்கொள்ளத் துணிந்தது. ஆப்கானிஸ்தானில் 2005 முதல் 2016 வரையான காலகட்டத்திலான சிறப்புப்படை நடவடிக்கை குறித்த விசாரணையை, நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பித்தது. அதுவே, தேசத்தின் வரலாற்றில் அதிககாலம் நீடித்த இராணுவ விசாரணையாகியது. நானூறு வரையான சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன. இருபதினாயிரம் வரையான பத்திரங்களும், இருபத்தையாயிரம் வரையான காட்சிப் படங்களும் ஆராயப்பட்டன.இராணுவத்தின் தொழில்சார் கண்ணியமும், கட்டுப்பாடும் ஆங்காங்கே மீறப்பட்டமை விசாரணையில் தெரியவந்தது. சிறப்புப்படை 39 சிவிலியன்களைச் சட்டவிரோதமாகப் படுகொலை செய்தமை கண்டறியப்பட்டது. அஃது நம்பகரமான சாட்சிகளின் அடிப்படையில் கண்டறிந்த முடிவு என்பதை அறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. மேற்படி கொலைகள், 2009 முதல் 2013 வரையான காலப்பகுதியில் நடைபெற்றிருக்கலாம் என விசாரணை அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. அக்கொலைகள் தொடர்பில் 19 தற்போதைய அல்லது முன்னாள் சிறப்புப்படை வீரர்களை, பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தவேண்டும் என்னும் பரிந்துரை, விசாரணை அறிக்கையில் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது.

மேற்படி கொலைகள் யுத்தமுனையில் நடைபெறவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட சிவிலியன்களைப் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கும் வகையில், இறந்த உடல்களுக்கு அருகே ஆயுதங்கள் வைக்கப்பட்டு, சாட்சியங்கள் சோடிக்கப்பட்டதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. மேற்படி சம்பவங்கள் யுத்தக்குற்றமாகுமா என்பதை, நீதிமன்றிலே ஜூரிகளே தீர்மானிக்கலாம் என்பதையும் விசாரணை அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

நேரடியாகக் குற்றம் இழைத்தவர்கள். அதனை தெரிந்தோ அல்லது தெரியாமலோ அனுமதித்த அதிகாரிகள். குற்றத்தில் நேரடியாகச் சம்பந்தப்படாத – அதேசமயத்தில் குற்றம் இழைக்கப்படுவதை நேரில் பார்த்த சகவீர்கள். குற்றம் இழைக்கப்படுவதை நேரில் பார்க்காதவர்கள் – அதேவேளையில் அச்சம்பவம் தொடர்பில் பின்னர் அறிந்துகொண்ட சகவீரர்கள் என ஏதோவொருவகையில் மனிதகுலத்துக்கு விரோதமான செயலுடன் பல சிறப்புப்படையினர் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பதை அறிந்தபோது கங்காருதேசம் தலைகுனிந்தது.

நவீன யுகத்தில் அவுஸ்திரேலியப் படைவீரர் இத்தகைய செயலில் ஈடுபடுவார் என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை என அவுஸ்திரேலியா இராணுவத்தின் தலைமைத்தளபதி வருந்தினார்.

படைவீரர்களுக்கு அதியுச்சமான மரியாதையைக் கங்காருதேசம் வழங்குகின்றது. அமைதியைப் பேணுவதிலும், சனநாயக அமைப்புக்களைப் பாதுகாப்பதிலும், சுதந்திரத்தைப் போற்றுவதிலும் படையினர் ஆற்றும் பங்களிப்பை அவுஸ்திரேலியா கொண்டாடுகின்றது. அன்சாக் (அவுஸ்திரேலியா நியூசிலாந்து ஆர்மி கோர்ப்ஸ்) பாரம்பரியத்தைக் கொண்ட தேசத்தில் படையினரின் தியாகம் போற்றப்படுகின்றது. அத்தகைய போற்றுதலுக்குரிய படைவீரர்கள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்களாக இருக்கவேண்டும் என்பது தேசத்தின் எதிர்பார்ப்பாகும். கடமை, கண்ணியம். கட்டுப்பாடு என்பவற்றினூடாக, ஒப்பாரும் மிக்காருமற்றவர்களாக அவுஸ்திரேலியா வீரர்கள் திகழ்கின்றனர் என்பது தேசத்தின் பெருமிதமாகும். அதனாலேயே, சிறப்புப்படையினர் மனிதகுலத்துக்கு விரோதமான செயற்பாடுகளில் ஈடுபட்டனர் என்னும் செய்தி அவுஸ்திரேலியர்களைத் தலைகுனியச் செய்தது.

நீதியையும் நியாயத்தையும் நிலைநிறுத்துவதில், அவுஸ்திரேலியா அசையாத நம்பிக்கை கொண்ட தேசமாகும். குற்றங்களைச் சீவிச் சிங்காரித்து அணிவகுப்புச் செய்வது, அவுஸ்திரேலியாவின் மரபல்ல. நெற்றிக் கண்ணைக் காட்டினும் குற்றம் குற்றமே என்பதை, வெறும் வாய்வார்த்தையாகச் சொல்லிக்கொண்டிருக்கும் தேசமல்ல.

ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்களின் செயல்களுக்காக, ஒட்டுமொத்த இராணுவ அமைப்பையும் குற்றவாளியாகக் கருதமுடியாது என்பதை, அவுஸ்திரேலியா அரசு தெளிவாகச் சொல்லியுள்ளது. இராணுவத்தினதும் தேசத்தினதும் நம்பகத்தன்மை நிலைநிறுத்தப்படவேண்டும். அதன்பொருட்டு, குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் என்பது அவுஸ்திரேலியா அரசின் நிலைப்பாடாகும். நீதி நிலைநிறுத்தப்படவேண்டும் என்பதில் அவுஸ்திரேலியா உறுதியாகக் காணப்படுகின்றது.

தற்போது வெளியாகியிருப்பது இராணுவத்தின் உள்ளக விசாரணை அறிக்கையாகும். அதனடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் நடைபெற்றதாகக் குற்றஞ்சாட்டப்படுகின்ற, போர்க்குற்றம் தொடர்பான பூர்வாங்க விசாரணைகளை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் 2020ம் ஆண்டிலேயே ஆரம்பித்தது. ஆனால், அவுஸ்திரேலியா தன்னுடைய சுயமுடிவின் பிரகாரம், உள்ளக விசாரணைகளை 2016ம் ஆண்டிலேயே ஆரம்பித்திருந்தது. அதுவே, நீதியை நிலைநாட்டுவதிலே அவுஸ்திரேலியா கொண்டிருக்கும் தணியாத தாகத்தை, அழுத்தம் திருத்தமாக வெளிப்படுத்துகின்றது.