ஆஸ்திரேலியாவில் சிறைவைக்கப்பட்டுள்ள குர்து- ஈரானிய அகதியான மோஸ், Taekwondo தற்காப்பு கலையின் மூலமாக ஆஸ்திரேலிய சிறுவனான கேலமுடன் அற்புதமான நட்பைக் கொண்டிருக்கிறார்.
ஒவ்வொரு வாரமும் Taekwondo உடையுடன் காணொலி அழைப்பின் மூலம் அகதியான மோஸ்க்கு வகுப்பெடுக்கிறார் சிறுவனான கேலம்.
ஆஸ்திரேலிய அரசால் முதலில் மனுஸ் தீவிலும் பின்னர் ஆஸ்திரேலியாவில் உள்ள தடுப்பிற்கான மாற்று இடத்திலும் சுமார் 7 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவைக்கப்பட்டிருப்பவர் மோஸ்.
கேலமின் அம்மாவான ஜேனின் தொடர்பை 2014ல் கடிதம் எழுதும் ஒரு பிரச்சாரத்தின் மூலம் அகதியான மோஸ் பெற்றிருக்கிறார்.
“எப்போதும் எனக்கு நம்பிக்கை அளிப்பவராக இருக்கிறார் ஜேன். அவர் ஒரு அற்புதமான பெண்மணி. எனது சகோதரியைப் போன்றவர்,” என்கிறார் மோஸ்.
மோஸ் மனுஸ்தீவில் இருந்த போது எட்டு மாதக் குழந்தையாக இருந்த கேலம்க்கு இன்று ஏழு வயது. இந்த ஏழு ஆண்டுகளில் மோஸ் சிறைவைக்கப்பட்டுள்ள இடம் மட்டுமே மாற்றப்பட்டிருக்கிறது, அவரது தடுப்பு வாழ்க்கை அப்படியே தொடர்கிறது.
“ஜேன் குடும்பத்தினருடன் பேசும் போது, சிறையில் இருப்பது நான் உணர்வதில்லை,” என்கிறார் மோஸ்.
கடந்த 2013 முதல் கடுமையான எல்லைப்பாதுகாப்பு கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வரும் ஆஸ்திரேலிய அரசு, படகு மூலம் வருபவர்களை ஒருபோதும் ஆஸ்திரேலியாவுக்குள் குடியமர்த்த மாட்டோம் எனக் கூறி வருகிறது.