கொழும்பில் மாபெரும் கையெழுத்து போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு பல வருட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி, இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில், கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் இன்று மாலை 3 மணிமுதல் 6 மணிவரை இடம்பெறவுள்ள இக் கையெழுத்து போராட்டத்தில், அனைவரையும் கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறு கேட்கப்பட்டுள்ளது.
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள இச்செயற்பாட்டின் இறுதியில், சேகரிக்கும் கையெழுத்துக்களை ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கு அனுப்பிவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த காலங்களில் தொடர்ச்சியாக பல போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்திருந்த போதிலும், அதற்கு எவ்வித தீர்வும் எட்டப்படவில்லை.
புதிய பயங்கரவாத தடைச் சட்டத்தை கொண்டு வரும் முனைப்பில் அரசாங்கம் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் நிலையில், அதற்கு முன்னதாக ஏற்கனவே உள்ள சட்டத்தின் பிரகாரம் கைதுசெய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.