யாழ்.போதனா வைத்தியசாலை பிசிஆர் சான்றிதழை விமான நிலையத்தில் ஏற்க மறுப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளும் பிசிஆர் பரிசோதனையின் பெறுபேறு செல்லாது என்றும், கொழும்பு நவலோகாவில் புதிய பரிசோதனை மேற்கொண்டு வருமாறும் விமான நிலையத்தில் பயணிகள் திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

வெளிநாடுகளிலிருந்து வந்து நின்றவர்கள் உட்பட வெளிநாடுகளுக்குப் பயணிப்பவர்கள் அனைவரும் விமானம் ஏறுவதற்கு முன்பு 72 மணித்தியாலங்களுக்கு உட்பட்ட நேரத்தில் பெறப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைச் சான்றிதழை சமர்ப்பித்தே விமானத்தில் பயணிக்கும் நடைமுறை பின்பற்றப்படுகின்றது.

இந்த நடைமுறைக்கு அமைய ஆரம்பத்தில் வடக்கிலிருந்து பயணிப்பவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிசிஆர் பரிசோதனை மேற்கொண்டசான்றிதழுடன் சென்ற வேளை விமான நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் பரிசோதனை மேற்கொண்டு உறுதிப்படுத்தல் சகிதம் செல்பவர்களுக்கு விமான நிலையத்தில் அனுமதி மறுக்கப்படுகின்றது.

அவர்கள் கொழும்பிலுள்ள நவலோகா வைத்தியசாலையில் பரிசோதனை மேற்கொண்டு அந்தச் சான்றிதழைப் பெற்று வருமாறு பணிக்கப்படுகின்றனர்.

இதற்கமைய நவலோகா வைத்தியசாலையில் கொவிட்-19 பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளும் ஒருவருக்கு 9 ஆயிரம் ரூபா பணம் அறவிடப்படுவதாகவும் இதனால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகவும் அறியவருகிறது.