திருப்பதியில் இன்று 7 டன் மலர்களால் ஏழுமலையானுக்கு புஷ்ப யாகம் நடந்தது.திருப்பதி ஏழுமலையானுக்கு கார்த்திகை (தெலுங்கு பஞ்சாங்கம் படி) திருவோணம் நட்சத்திர நாளில், வருடாந்திர புஷ்ப யாகம் நடத்துவது வழக்கம். அதன்படி, இன்று திருவோணம் நட்சத்திரம் என்பதால் ஏழுமலையானுக்கு புஷ்ப யாகம் நடந்தது.
புஷ்ப யாகம் எவ்வித தடங்கல், இடையூறும் இன்றி சிறப்பாக நடைபெற வேண்டி தேவஸ்தானம் சார்பில் நேற்று மாலையே ஏழுமலையானின் சேனாதிபதியான விஷ்வக் சேனர் முன்னிலையில் அர்ச்சகர்கள் அருகில் உள்ள நந்தவனத்துக்கு சென்றனர்.
அங்கிருந்து புற்று மண்ணை எடுத்து வந்து கோவிலுக்குள் உள்ள மண்டபத்தில் அந்த மண்ணை கொண்டு பூதேவியின் வடிவத்தை அமைத்தனர். பிறகு, அச்சிலையின் வயிற்று பகுதியில் இருந்து மண்ணை எடுத்து அதில் நவதானியங்களை முளைவிட்டனர்.
இந்த நிகழ்ச்சியில், திருமலை மடத்தின் ஜீயர்கள், தேவஸ்தான அதிகாரிகள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, இன்று 7 டன் மலர்களால் ஏழுமலையானுக்கு புஷ்ப யாகம் நடந்தது. இவற்றில் மொத்தம் 12 வகையான பூக்கள் மற்றும் துளசி, மருவம், தவணம், பில்வம், பன்னீர் உள்பட 6 வகை வாசனை பொருட்கள் பயன்படுத்தப்பட்டன.
புஷ்ப யாகத்தையொட்டி, கல்யாண உற்சவம், வசந்த உற்சவம், ஆர்ஜித சேவைகள் இன்று ரத்து செய்யப்பட்டன.
Eelamurasu Australia Online News Portal