மெல்பேணில் சிறப்பாக நடைபெற்ற மாவீரர்நாள் – 2020

தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஆகுதியாகிய மாவீரர்களை ஒருசேர நினைவூகூரூம் மாவீரராநாள் 27-11-2020 வெள்ளிக்கிழமை அன்று அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது.

கோவிட் இடர்கால நிலையை கருத்திற்கொண்டு, East Burwood Reserve எனும் இடத்தில் மதியம் 1.20 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்வில் 30 நிமிடங்களுக்கு என முற்பதிவுசெய்யப்பட்ட சுழற்சி முறையில் பலரும் பங்குகொண்டனர்.

முதன்மைச்சுடரை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர் திரு லூயின் பிரசாத் அவர்கள் ஏற்றிவைக்க, அவஸ்திரேலியத் தேசியக்கொடியை மருத்துவர் ஆதவன் சிறீதர் அவர்கள் ஏற்றிவைத்தார். தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடியை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் மூத்த செயற்பாட்டாளர் திரு டொமினிக் சந்தியாபிள்ளை அவர்கள் ஏற்றிவைத்தார்.

முதல்மாவீரர் சங்கர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர் திரு பிரதாப் பாலச்சந்திரன் ஈகைச்சுடரேற்றி வைத்தார். முதற்பெண்மாவீரர் திருவுருவப்படத்திற்கு மாவீரர் குடும்பத்தைச்சேர்ந்த திருமதி நாகேஸ்வரி கமலநாதன் அவர்கள் ஈகைச்சுடரேற்றினார்.அதனைத் தொடர்ந்து அகவணக்கமும் துயிலுமில்லப்பாடலும் இசைக்கப்பட்டு மலர்வணக்கத்தில் அனைவரும் இணைந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் தூர இடங்களில் இருந்தும் பலரும் தமக்கு பதிவு செய்யப்பட்ட நேரத்திற்கு வருகைதந்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். மெல்பேணில் கோவிட் 19 கட்டுப்பாடுகளுக்கு அமைவாக ஒரு தடவையில் ஐம்பது பேர் மட்டுமே கலந்துகொள்ளவேண்டியிருந்தபோதும் அந்நடைமுறையை புரிந்துகொண்டு அனைவரும் அதற்கான ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர்.

இந்நிகழ்வில் மாவீரர் நாள் வெளியீடுகளும் ஒவியர் புகழேந்தி அவர்களின் நான் கண்ட போராளிகள் என்ற நூலும் விற்பனை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவ்வாண்டும் வழமைபோல காந்தள் மலரும் வெளிட்டு வைக்கப்பட்டது.

இரவு 8 மணிக்கு தேசியக்கொடிகள் இறக்கிவைக்கப்பட்டு நிகழ்வு நிறைவடைந்தது.