நீதிமன்றத்துக்கு வந்த பிட்டு

“யுத்த காலங்களில் பிட்டும் வடையும் ரொட்டியும் தோசையும் சாப்பிட்ட தமிழ் மக்கள் இப்பொழுது பீட்சா சாப்பிடும் ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது” என்ற தொனிப்பட யாழ் மாவட்ட தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரியான பிரசாத் பெர்னாண்டோ யாழ் மேல் நீதிமன்றத்தில் கருத்துக் கூறியுள்ளார். மாவீரர் நாள் தொடர்பான ஒரு வழக்கில் அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார் அவர் அவ்வாறு கூறியது தவறு என்று சுமந்திரன் ஆட்சேபனை தெரிவித்ததையடுத்து நீதிமன்றம் வழக்கோடு சம்பந்தப்பட்ட விடயங்களை மட்டும் நீதிமன்றத்தில் கதைக்குமாறு பிரசாத் பெர்னாண்டோவிடம் அறிவுறுத்தி இருக்கிறது.

அதன்பின் கடந்த புதன்கிழமை நடந்த நீதிமன்ற அமர்வின் போது கொழும்பிலிருந்து வந்த சிரேஷ்ட பிரதி வாதாடி மன்றாடியார் முன்னைய அமர்வில் பிரசாத் பெர்னாண்டோ தெரிவித்த கருத்துக்கு மன்னிப்புத் தெரிவித்துள்ளார். அதைத் தொடர்ந்து அங்கிருந்த பிரசாத் பெர்னாண்டோவும் மன்னிப்புக் கோரியுள்ளார்.

எனினும், தமிழ் மக்களின் உணவுப் பழக்க வழக்கம் குறித்து ஒரு பொலிஸ் அதிகாரி தெரிவித்த கருத்துக்கள் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பலமான எதிர்வினையை கிளப்பியுள்ளன. ஆளுங் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான அங்கஜன் குறிப்பிட்ட போலீஸ் அதிகாரியை கண்டிக்கும் அளவுக்கு நிலைமை வளர்ந்திருக்கிறது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் கூட பிட்டும் வடையும் விடயத்தில் ஒன்றுபட்டு நிற்கிறார்கள். மொத்தத்தில் இது தமிழ் மக்களை இயக்க வேறுபாடுகளுக்கு அப்பால் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் ஒன்றுபடுத்தியிருக்கிறது. அதே சமயம் அது முகநூல் உலாவிகளின் கவனத்தை மாவீரர் நாளிலிருந்து திசை திருப்பி பிட்டின் மீது குவித்துள்ளதா? பொது வெளியில் நினைவுகூர்தலை அனுஷ்டிக்க முடியாத ஒரு மக்கள் கூட்டம் பிட்டின் மகிமையை நிரூபிக்கப் புறப்பட்டு விட்டதா?

ஒரு மக்கள் கூட்டத்தின் உணவை இழிவு படுத்திக் கூறுவது என்பது அந்த மக்கள் கூட்டத்தின் மரபுரிமைச் சொத்துக்களுக்கு எதிரான அரசியலின் ஒரு பகுதிதான் என்பதனை எனது நண்பரான ஒரு புலமையாளர் சுட்டிக் காட்டினார். பாரம்பரிய உணவுகள் ஒரு சமூகத்தின் மரபுரிமைச் சொத்துக்களே. ஏற்கனவே அரசாங்கம் தமிழ் மரபுரிமைச் சொத்துக்களுக்கு எதிராக ஒரு யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. மரபுரிமைச் சொத்துக்களில் இருக்கக்கூடிய பல்வகைமையை அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக தமிழ் முஸ்லிம் கிறிஸ்தவ மரபுரிமைச் சொத்துக்களுக்கு எதிராக சிங்கள பௌத்த மரபுரிமை சொத்துக்களை முன்நிறுத்தும் ஒரு போக்கை அரசாங்கம் முன்னெடுக்கின்றது. சிங்கள பௌத்த மயமாக்கலின் ஒரு பகுதியாக இந்த மரபுரிமை யுத்தம் முன்னெடுக்கப்படுகிறது.

கிழக்கில் தமிழர்களோ முஸ்லிம்களோ இல்லாத ஒரு தொல்லியல் செயலணியை அரசாங்கம் உருவாக்கியிருக்கிறது. ஒரு தமிழ் மருத்துவர் அதில் இணைய முன்வந்த போதிலும் அவரை உள்ளெடுக்க அரசாங்கம் தயாரில்லை. இப்படிப்பட்ட ஓர் அரசாங்கத்தின் உபகரணமாகிய ஒரு போலீஸ் அதிகாரி மேற்கண்டவாறு தெரிவித்தமை தமிழ் மக்களை இன ரீதியாக; உணவு ரீதியாக பண்பாட்டு ரீதியாக ஒன்றிணைத்திருக்கிறது.

போரை முடிவுக்கு கொண்டு வந்ததன் மூலம் அரசாங்கம் போர்க்காலத்தில் பிட்டு வடை ரொட்டி தோசை ஆகியவற்றை மட்டும் சாப்பிடக் கூடியதாக இருந்த தமிழ் மக்களுக்கு பீட்சா சாப்பிடும் ஒரு நிலைமையை பெற்றுக் கொடுத்திருக்கிறது என்ற தொனிப்பட அப்பொலிஸ் அதிகாரி நீதிமன்றத்தில் கூறினார்.யுத்த காலத்தின் கஷ்டங்களை எடுத்துக்காட்ட அவர் இப்படிக் கூறியிருக்கலாம். ஆனால் அவருடைய கூற்று தமிழ் மக்கள் மத்தியில் பின்வருமாறு விளங்கிக் கொள்ளப்பட்டிருகிறது.

முதலாவது அரசாங்கம் போரை முடிவுக்கு கொண்டு வந்ததன் மூலம் தமிழ் மக்களுக்கு ஐரோப்பிய பாணியிலான ரெசபிகளை சுவைக்கும் ஒரு நிலைமையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

இரண்டாவது பிட்டும் வடையும் தோசையும் பீட்சாவை விட தாழ்ந்தவை.
மூன்றாவது பிட்டும் வடையும் சாப்பிடும் ஒரு வாழ்க்கை முறை உயர்வானது அல்ல.
நாலாவது போராட்டம் தொடர்ந்து நடந்திருந்தால் தமிழ் மக்களுக்கு பீசா கிடைத்திருக்காது.

ஐந்தாவது உணவுதான் தமிழ் மக்களுக்கு பிரச்சினை. உரிமைகள் அல்ல.
மேற்கண்டவற்றைத் தொகுத்துப் பார்த்தால் அதில் அரசியல் ரீதியான தாக்குதல் இருக்கிறது. பண்பாட்டு ரீதியிலான தாக்குதல் இருக்கிறது. அது ஒரு மக்கள் கூட்டத்தின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்துகிறது. வாழ்க்கை முறையைக் கொச்சைப்படுத்துகிறது. உணவுப் பழக்க வழக்கங்களை கொச்சைப்படுத்துகிறது. எனவே மரபுரிமைச் சொத்துக்களை கொச்சைப்படுத்திகிறது.

ஆனால் இது தமிழ் மக்களுக்கு புதியதல்ல. ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்கு முன்பு 1968ஆம் ஆண்டில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, கொம்யூனிஸ்ட் கட்சி, சமசமாஜக் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து நடாத்திய மேதின ஊர்வலத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக “தோச வட அப்பிற்ற எப்பா” – “தோசை வடை எமக்கு வேண்டாம்” என்று கோஷம் எழுப்பப்பட்டதை இங்கே நினைவூட்ட வேண்டும். குறிப்பாக டட்லிக்கும் செல்வநாயகத்துக்கும் இடையில் இணக்கம் நிலவியதைச் சுட்டிக்காட்டி “டட்லிகே படே மசாலா வடே” “டட்லியின் வயிற்றில் வடை” என்றும் கோஷம் எழுப்பபட்டது.

ஒரு மக்கள் கூட்டத்தை அவமதிப்பது என்றால் அவர்களுடைய உணவுப் பழக்க வழக்கங்களை விமர்சிப்பதும் ஒரு வழிதான். இதற்கு உதாரணம் கோவிட்-19 வைரஸ் தொற்றினால் உலகம் பூராகவும் பீதியும் அதிர்ச்சியும் ஏற்பட்ட பொழுது சீனாவுக்கு எதிரான கோபமும் அதிகரித்தது. உலகப் பேரரசான அமெரிக்காவின் அதிபர் அதனை வுகான் வைரஸ் அல்லது சீன வைரஸ் என்று அழைத்தார். சீனர்களின் விலங்குச் சந்தைகளிலிருந்தே கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது என்று பரவலாக நம்பப்படுகிறது. எனவே சமூக வலைத்தளங்களில் அந்த வைரஸ் பரவக் காரணமாக இருந்த சீனர்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் கடுமையாக விமர்சிக்கப்பட்டன. கொரோனா வைரசின் மீதான கோபத்தை; பயத்தை சீனர்களின் மீதான கோபமாக சீனர்களின் மரபுரிமை சொத்துக்களான அவர்களின் உணவுப் பழக்க வழக்கத்தின் மீதான விமர்சனமாக பலரும் முன் வைத்தார்கள்.

வரலாற்றில் இதற்கு முன்னரும் இந்த நிலைமை இருந்தது. ஒரு மக்கள் கூட்டத்தை இழிவு படுத்துவதற்கு அவர்களுடைய உணவுப் பழக்க வழக்கங்களை இழிவுபடுத்தும் ஒரு போக்கு தொடர்ச்சியாக வரலாற்றில் காணப்படுகிறது. முஸ்லிம் சமூகத்தை இழிவுவுபடுத்துவதற்கு பன்றி இறைச்சியை இழுத்துக் கதைக்கும் ஒரு போக்கு பரவலாக உண்டு.

தமிழ்ச் சமூகத்தில் குறிப்பிட்ட பிரிவினரை அல்லது பிரதேசத்தை அல்லது சாதியை இழிவுபடுத்துவதற்கு இவ்வாறு உணவுப் பழக்க வழக்கங்களை சுட்டிக்காட்டித் திட்டும் ஒரு போக்கை காண முடியும்.

உதாரணமாக கிறிஸ்தவர்களை விமர்சிக்கும் போது வேதக்காரர்கள் மாட்டிறைச்சி தின்பவர்கள் என்று இந்துக்களில் ஒரு பகுதியினர் விமர்சிப்பதுண்டு.
இப்பொழுது இறைச்சிக்காக மாடு வெட்டுவதை அரசாங்கம் தடுக்கப் போகிறது என்று ஒரு எதிர்பார்ப்பு உண்டு. இந்த எதிர்பார்ப்பின் பின்னணியிலும் மாட்டிறைச்சிக் கறி சாப்பிடும் சமயங்களையும் சமூகங்களையும் விமர்சிக்கும் ஒரு போக்கைக் காணலாம்.

இவ்வாறான ஒரு வரலாற்றுப் போக்கின் ஆகப் பிந்திய விவகாரம்தான் பிட்டும் வடையும் சர்ச்சையாகும். இறுதிக் கட்டப் போரில் தமிழ் மக்களுக்கு எதிராக உணவை ஓராயுதமாகப் பயன்படுத்திய அரசியல் பாரம்பரியம் ஒன்றில் இது ஆகப் பிந்தியது. இது தொடர்பில் சமூக வலைத்தளங்களைப் பார்த்தால் பிட்டுப் புராணம் ஒன்றை பரவலாக காண முடியும். பிட்டின் பூர்வீகம் தொடர்பான ஆராய்ச்சிகளையும் பரவலாகப் பார்க்க முடியும்.

இந்துக்களைப் பொறுத்தவரை சிவபெருமானை பிட்டுக்கு மண் சுமந்த பெருமான் என்று அழைப்பார்கள். பாண்டிய மன்னனின் காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் செம்மனச்செல்வியின் கதையில் அது காணப்படுகிறது.

காவிரியாறு பெருக்கெடுத்து ஓடிய பொழுது ஊர் மக்களை அணை கட்டுவதற்கு மன்னன் அழைத்தான். ஊரில் ஒரு பாட்டி இருந்தார். பெயர் செம்மனச்செல்வி. பிட்டு அவித்து விற்று வாழ்க்கையை நடத்தி வந்தார். அவருக்கு யாரும் இல்லை. அவரால் அணை கட்ட முடியாது. கூலிக்கு ஆளை அமர்த்தவும் காசில்லை. அவர் சிவபெருமானிடம் வருந்தி அழுதார்.

சிவன் ஒரு கூலியாளாக அவரிடம் வந்தார். கூலிக்கு பதிலாக பிட்டு அவித்து தருவேன் என்று பாட்டி சொன்னாள். உதிர்ந்த பிட்டுகளை எனக்குத் தா உதிராத பிட்டுகளை நீ விற்றுவிடு என்று சிவபெருமான் சொன்னார். பாட்டியும் பிட்டை அவிக்கத் தொடங்கினார். அவித்த பிட்டெல்லாம் உதிரத் தொடங்கியது. சிவபெருமான் எல்லாவற்றையுமே போட்டுப் பிடித்தார். உண்ட களைப்பில் ஒரு மர நிழலில் உறங்கி விட்டார். மன்னன் அணைக்கட்டு வேலை நடக்கிறதா என்று பார்க்க அந்தப் பக்கம் வந்தான் வேலை செய்யாமல் படுத்திருக்கும் கூலியை கண்டான். பிரம்பை எடுத்து முதுகில் அடித்தான். அது சிவனின் மேல் விழுந்த ஆடி. முழு உலகத்தின் மீதும் விழுந்தது. அடித்த மன்னனின் முதுகிலும் விழுந்தது. இதுதான் செம்மனச்செல்வியின் கதை.

அது பழைய கதை. பிட்டுக்கு மண் சுமந்த பெருமானின் கதை. இப்பொழுது புதிய கதை. அது பிட்டைக் குறைத்துக் கூறிய போலீஸ்காரரின் கதை. போராட்டத்தை கீழ்மைப்படுத்தக் கூறிய கருத்து அது. ஆனால் பிரசாத் பெர்னாண்டோ அடித்த அடி எல்லா தமிழர்களின் முதுகிலும் விழுந்தது. அவருடைய முதுகிலும் விழுந்தது. ஏனெனில் அது தமிழ் மக்களை ஒன்று திரட்டி விட்டது. நீதிமன்றத்தில் தான் கூறிய வார்த்தைகளுக்கு இப்படி ஒரு திரண்ட எதிர்வினை இருக்கும் என்று அவர் எதிர்பார்த்திருக்க மாட்டார்.

  • நிலாந்தன்