ஆஸ்கார் விருதுக்கு தேர்வாகி உள்ள ஜல்லிக்கட்டு என்கிற மலையாள படம் விருதை வெல்ல வாய்ப்பு இருப்பதாக இயக்குனர் செல்வராகவன் தெரிவித்துள்ளார்.
இந்தியா சார்பில் ஆஸ்கார் விருது போட்டிக்கு மலையாள படமான ஜல்லிக்கட்டு தேர்வாகி உள்ளது. இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ், செம்பன் வினோத், சாந்தி பாலச்சந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கி உள்ளார்.
ஒரு மலை கிராமத்தில் இருந்து கசாப்பு கடைக்கு கொண்டு வரப்பட்ட எருமை மாடு வெட்டப்படுவதற்கு முன்னால் தப்பித்து விடுகிறது. அந்த மாட்டை பிடித்தே தீர வேண்டும் என்று கிராமத்தினர் வெறிகொண்டு அலைவதுதான் படத்தின் கரு. ஜல்லிக்கட்டு படம் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
இப்படம் ஆஸ்காருக்கு தேர்வாகி உள்ளதை தொடர்ந்து பல்வேறு பிரபலங்களும் ‘ஜல்லிக்கட்டு’ படக்குழுவினருக்கு தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் இயக்குனர் செல்வராகவன் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: “லிஜோவின் ‘ஜல்லிக்கட்டு’ திரைப்படத்தைப் பார்த்தேன், மிகவும் பிடித்தது. இந்தப் படம் இந்தியா சார்பாக ஆஸ்காருக்கு செல்வதில் மிக்க மகிழ்ச்சி. இந்த அழகான படத்தால் நாம் விருதை வெல்ல வாய்ப்பு இருக்கிறது என நினைக்கிறேன்”. இவ்வாறு செல்வராகவன் பதிவிட்டுள்ளார்.
Eelamurasu Australia Online News Portal