கொக்கட்டிச்சோலை காவல் துறை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரனுக்கு எதிராக எடுக்கப்பட்ட நீதிமன்றத் தடை உத்தரவுக்கு எதிராக நீதின்றத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தொடுத்த வழக்கை இன்று வியாழக்கிழமை (26) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நிராகரித்ததுடன் மாவடிமுன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவேந்தலை நடத்த தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாளை கார்த்திகை 27ஆம் திகதி மாவீரர் நினைவேந்தல் இடம்பெறவுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவடிமுன்னமாரி துயிலும் இல்லத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் விளக்கேற்ற உள்ளதாகவும் இந்த நிகழ்வு இடம்பெறும் இடத்தில் கொரோனா தொற்று ஏற்படும் மற்றும் விடுலைப் புலிகளை மீண்டும் கட்டியெழுப்புவதாகவும் அவருக்கு எதிராக காவல் துறையால் நீதிமன்ற தடை உத்தரவு ஒன்று பெறப்பட்டு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்தத் தடை உத்தரவுக்கு எதிராக மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (23) திகதி ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தலைமையில் 27 சட்டத்தரணிகள் ஆஜராகி வழக்கு தாக்குதல் செய்தனர். இந்த வழக்கை ஆராய்ந்த நீதவான் இன்று வியாழக்கிழமை வழக்கை ஒத்திவைத்தார்.
இன்று வியாழக்கிழமை (26) இந்த வழக்கு எடுக்கப்பட்ட நிலையில் தடை உத்தரவுக்கு எதிராக தாக்குதல் செய்யப்பட்ட வழக்கை நீதவான் நிராகரித்ததுடன் மாவடி முன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் விளக்கேற்ற தனக்கு தடை விதித்து கட்டளை பிறப்பித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்தார்.
இதேவேளை மக்கள் தமது வீடுகளில் மாவீரர்களுக்கான விளக்கை ஏற்றி அனுஷ்டிக்குமாறும் அவர் தெரிவித்தார்.
Eelamurasu Australia Online News Portal