நந்திக்கடல் ’கப்பல் கதை’ அம்பலமானது

சொல்லாமல் சொன்னார் சமரசிங்க எம்.பி

ராஜபக்‌ஷ பொய் சொன்னார் என சபையில் அறிவித்தார்

பிரபாகரனும் கப்பலில் ஏறியிருப்பார் என்றார்

இறுதி யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது, முல்லைத்தீவு நந்திக்கடலில் சிக்கிக்கொண்ட அப்பாவி பொதுமக்களை காப்பாற்றுவதற்காக, கப்பலொன்றை அனுப்புவதற்கு இராஜதந்திரிகள் கலந்துரையாடினர் எனினும், அன்றைய ஜனாதிபதியாக இருந்த மஹிந்த ராஜபக்ஷ, இராஜதந்திரிகளுக்கு பொய்யையே சொன்னார் என, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட எம்.பியான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

2021ஆம் ஆண்டு வரவு-செலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதம், நேற்று (23) ஆரம்பமானது. அதில், கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

“இறுதி யுத்தத்தின் போது, இராஜதந்திரிகள் குழுவொன்று, அந்நாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பதற்கு அனுமதி கோரியிருந்தது. ஜனாதிபதி செயலகத்தில் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அந்நாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் பங்கேற்றிருந்தார். அமைச்சராக இருந்த நானும் அந்த சந்திப்புக்குச் சென்றிருந்தேன்” என்றார்.

கொழும்பிலுள்ள தூதுவர் ஒருவருடன் அந்தக் குழு வந்திந்தது, அந்தக் குழுவையும் நாட்டின் தூதுவரையும் சொல்லமாட்டேன் எனத் தெரிவித்த மஹிந்த சமரசிங்க “ முல்லைத்தீவு நந்திக்கடலில் சிக்குண்டுள்ள பொதுமக்களை மீட்பதற்கு கப்பலொன்றை அனுப்பவுள்ளோம். மக்களை ஏற்றிக்கொண்டு கப்பலும் திருகோணமலைக்குச் சென்றுவிடும்” என்றனர்.

இதன்போது யாருடைய ஆலோசனையையும் கேட்காத ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, “அருகிலிருக்கும் நாடொன்றும், மக்களை மீட்பதற்காக கப்பலொன்றை அனுப்புவதாக கூறியிருக்கின்றது என, சிரித்துக்கொண்டே பதிலளித்தார்” என்றார். “அவ்வாறு வருவதாக கூறப்பட்ட கப்பல், எந்தநாட்டுடையது என்பதையும் இவ்விடத்தில் கூறமாட்டேன்” என மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.

“கப்பலுக்கு அனுமதியளித்திருந்தால், சாதாரண மக்கள் மட்டுமன்றி, எல்.ரீ.ரீ.ஈ இயக்கத்தின் தலைவர்களும் அதிலேறி தப்பிச்சென்றிருப்பர். எங்களுக்கு மத்தியில் பிரபாகரன் இன்றிலில்லை. அவரும் கப்பலில் ஏறி, சென்றிருப்பார்” என்றார்.

கப்பல் நடுக்கடலுக்குச் சென்றதும் அங்கு என்ன நடக்குமென எங்களுக்குத் தெரியாது, எங்களுடைய கப்பல்களால் அந்தக் கப்பலை பின்தொடர்ந்து சென்றிருக்க முடியாது” ஆனால், மிகக் சரியான முடிவை அன்றைய ஜனாதிபதி எடுத்திருந்தார் என்றார்.

அந்தக் கலந்துரையாடலின் பின்னர், கப்பல் விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் வினவினேன். “அவ்வாறு ஒரு கப்பலும் வராது, இராஜதந்திரிகளிடம் நான் பொய் சொன்னேன்” எனக் கூறிவிட்டார்.

இங்கிருப்பவர்கள் சர்வதேசத்துடன் கரம் கோர்த்துக்கொண்டு பயணிக்குமாறு வலியுறுத்துகின்றனர். அவ்வாறு பயணித்தமையால்தான், ஐ.நாவில் எங்களுக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டது எனத் தெரிவித்த மஹிந்த சமரசிங்க, சகல நாடுகளையும் இராஜதந்திர ரீதியில் நண்பர்களாக்கி பயணிப்பதற்கு நாங்கள் தயார் என்றார்.