ஆஸ்திரேலியாவில் சுறா தாக்கி ஒருவர் பலி

ஆஸ்திரேலியாவில் கேபிள் கடற்கரையில் சுறாவின் தாக்குதலால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது

ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதியில் உள்ள கிம்பர்லி பிராந்தியத்தில் கேபிள் என்ற புகழ்பெற்ற கடற்கரை உள்ளது. கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இந்த கடற்கரையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

மக்கள் அனைவரும் கடலில் ஆனந்த குளியல் போட்டனர். அப்போது ஒருவர் கடலில் ஆழமான பகுதிக்கு சென்று குளித்த போது சுறா மீன் ஒன்று அவரை கடுமையாக தாக்கியது.

உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விரைந்து செயல்பட்டு சுறாவிடம் இருந்து அவரை மீட்டனர். ஆனாலும் சுறாவின் தாக்குதலால் அதிக ரத்தம் கசிந்து அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அங்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதை தொடர்ந்து உடனடியாக அந்த கடற்கரைக்கு பூட்டு போடப்பட்டது. மேலும் அந்த கொலைகார சுறாவை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் அண்மை காலமாக சுறா மீன் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்த ஆண்டில் மட்டும் 8 பேர் சுறா தாக்கி உயிர் இழந்துள்ளனர். மேலும் 22 பேர் காயமடைந்துள்ளனர்.