- இந்தோ- பசுபிக் பிராந்தியக் கொதிநிலைக்குள் சுழியோட வேண்டிய தமிழ்த்தரப்பு, தேர்தல் அரசியலில் மாத்திரமே கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது
– அ.நிக்ஸன்
சீனாவை மையப்படுத்தி 15 நாடுகளை உள்ளடக்கிய பிராந்திய பொருளாதார ஒத்துழைப்புக் கட்டமைப்பு ஒப்பந்தம் (Regional Comprehensive Economic Partnership) (RCEP) சென்ற சனிக்கிழமை கைச்சாத்திடப்பட்டுள்ள நிலையில், சென்ற புதன்கிழமை இந்தோ- பசுபிக் பிராந்திய பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட குவாட் கடற்படைப் பயிற்சியின் இரண்டாவது தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய நான்கு நாடுகளும் இணைந்து மேற்கொண்டு வரும் இந்தப் பயிற்சியும் பாதுகாப்பு முன்னேற்பாடுகளும் சீனாவின் கடல் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்துவதே பிரதான நோக்கமாகும்.
ஆனால் RCEP எனப்படும் ஒப்பந்தத்தில் அவுஸ்திரேலியாவும் ஜப்பானும் கைச்சாத்திட்டுள்ள நிலையில், குவாட் பயிற்சியின் பிரதான நோக்கம் எவ்வாறு அமையும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இந்தோ- பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பு விவகாரங்களில் அவுஸ்திரேலியாவும் ஜப்பானும் தொடர்ந்தும் ஒத்துழைக்குமென இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்க புதுடில்லியில் செய்தியாளர்களிடம் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஆனாலும் அமெரிக்கா விலகியதையடுத்து ஆசிய பசுபிக் கூட்டாண்மை ஒப்பந்தம் (Trans Pacific Partnership) (TPP) 2017ஆம் ஆண்டு செயலிழந்தால், அவுஸ்திரேலியா மீது ஆத்திரமடைந்த சீனா, அவுஸ்திரேலியக் கப்பல்களுக்குத் தடைவித்தது. மறைமுகமாக பொருளாதாரத் தடைகளையும் ஏற்படுத்தியது. இந்தவொரு நிலையிலேயே சீனாவை மையப்படுத்திய, RCEP எனப்படும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள அவுஸ்திரேலியா, எந்தளவு தூரம் குவாட் கடற்படைப் படைப் பயிற்சியிலும் அதன் பின்னரான இந்தோ- பசுபிக் பாதுகாப்புச் செயற்பாடுகளிலும் அமெரிக்காவுடன் ஒத்துழைக்கும் என்ற கேள்விகள் எழாமலில்லை.
ஆனால் இந்த ஒப்பந்தத்தின் மூலம் தனித்துச் சீனா மாத்திரம் அனைத்து லாபங்ளையும் பெற்றுவிடக்கூடாது என்ற நோக்கில் அல்லது, பிராந்தியத்தில் சீனாவின் வர்த்தக நகர்வுகளை அவதானிப்பதற்காகவே அவுஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளை ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுமாறு அமெரிக்கா வலியுறுத்திருக்கலாம் என்ற அவதானிப்புகளும் உண்டு. அப்படிப் பார்த்தால், சீனாவின் வர்த்தக நகர்வை அவதானிப்பதற்காக TPP எனப்படும் ஆசிய பசுபிக் கூட்டாண்மை ஒப்பந்தத்திற்குள் நுழைந்த அமெரிக்கா பின்னர் ஏன் விலகியது என்ற கேள்வியும் உண்டு.
அவ்வாறு விலகியமை டொனால்ட் ட்ரம்ப்பின் தனிப்பட்ட முயற்சியாக இருக்கலாம். ஏனெனில் பராக் ஒபாமா ஜனாதிபதியாக இருந்தபோது செய்யப்பட்ட ஒப்பந்தம் என்பதால், டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்காவை அந்த ஒப்பந்தத்தில் இருந்து வலிக்கியிருக்கலாம். ஆகவே ஜனவரி மாதம் ஜோ பைடன் நிர்வாகம் பதவியேற்றதும் அமெரிக்க அணுகுமுறைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுப் பொருளாதார ரீதியான செயற்பாடுகளில் மாத்திரம் சீனாவை மையப்படுத்திய கூட்டு ஒப்பந்தங்களில் தனது நட்பு நாடுகள் இணைவதற்கு சம்மதிக்கக் கூடிய வாய்ப்புகள் வரலாம்.
அப்படியானால் RCEP எனப்படும் பிராந்திய பொருளாதார ஒத்துழைப்புக் கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட மறுத்த இந்தியா இணையக்கூடிய வாய்ப்புகள் உருவாகலாம். இந்தியா இணையும் என்று உறுப்பு நாடுகள் எதிர்ப்பார்ப்பதாக மலேமெயில் என்ற மலேசிய ஊடகம் தெரிவித்துள்ளது.
ஆகவே இந்தோ- பசுபிக் பிராந்திய பொருளாதாரச் செயற்பாடுகளில் சீனாவின் நகர்வுகளுக்கு முன்னால் அமெரிக்கா போன்ற மேற்குலக நாடுகளுக்கும், இந்தியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கும் நின்று பிடிக்க முடியாதவொரு நிலமையைத்தான் RCEP எனப்படும் ஒப்பந்தம் வெளிப்படுத்தியிருக்கிறதென வாதிடலாம்.
வாதத்தின்படி இதுதான் உண்மைக் காரணம் என்றால், இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இலங்கையின் கொழும்புத் துறைமுகக் கிழக்கு முனையக் கொள்கலன் இறங்குதுறையை அபிவிருத்தி செய்வதற்கான ஒப்பந்தம் ஒன்றிலும் இந்தியா, ஜப்பான், ஆகிய நாடுகள் இலங்கையுடன் இணைந்து கைச்சாத்திட்டதன் எதிர்காலப் பயன்பாடு என்ன என்று மற்றுமொரு கேள்வியும் எழுகின்றது.
ஏனெனில் சீனாவை மையப்படுத்திய RCEP எனப்படும் இந்த ஒப்பந்தம் பற்றிய உரையாடல் 2012ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுத் தொடர்ச்சியாக 2020ஆம் நவம்பர் மாதம் 15ஆம் திகதி கைச்சாத்திடப்படும் வரை நடைபெற்றிருக்கிறது. இந்தக்காலப் பகுதிலேதான், 2012ஆம் TPP எனப்படும் ஆசிய பசுபிக் கூட்டாண்மை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 2017இல் செயலிழந்திருக்கிறது. கொழும்புத் துறைமுகத்தின் கிழக்குக் முனைய அபிவிருத்தி குறித்த ஒப்பந்தம் 2018ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டிருக்கிறது.
ஆகவே இந்தோ- பசுபிக் பிராந்திய பாதுகாப்பு மற்றும் பொருளாதார, அரசியல் நலன்சார் விடயத்தில் அமெரிக்காவுடன் இணைந்து செயலாற்றிய அவுஸ்திரேலியா, ஜப்பான், மாலைதீவு ஆகிய நாடுகள் RCEP எனப்படும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டமை என்பது அமெரிக்க இராஜதந்திரத்திரப் பலவீனம் என்ற முடிவுக்கு நேரடியாகவே வந்துவிடலாம்.
இப்படிப் பலவீனமானவொரு நிலையிலும் இந்தோ- பசுபிக் விவகாரத்தில் பொருளாதாரச் செயற்பாடுகள் தவிர்த்துப் பாதுகாப்பு விடயங்களில் அவுஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா போன்ற நாடுகள் தம்முடன் நிற்க வேண்டுமென்ற அமெரிக்க அணுகுமுறை என்பது, இலங்கை போன்ற இன அழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நாடுகளுக்கு வாய்ப்பாகவே இருக்குமென அவதானிகள் கருதுகின்றனர்.
ஏனெனில் ரோகின்யா முஸ்லிம்களை இன அழிப்புச் செய்து வரும் மியன்மார் அரசும் இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டிருக்கிறது. இந்தியா இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகியிருந்தாலும், மியன்மார் அரசுடன் நரேந்திரமோடி அரசு உறவைப் பேணி வருகின்றது. நீர்முழ்கிக் கப்பல் ஒன்றையும் இந்தியா மியன்மாருக்கு வழங்கியுள்ளது.
ஆகவே அமெரிக்க, இந்திய அரசுகளின் இவ்வாறான அணுகுமுறைகள் அரசியல் விடுதலை வேண்டி நிற்கும் ஈழத்தமிழர்களுக்குப் பாதுகாப்பற்றதொரு நிலையை உருவாக்கியிருக்கிறது. ஒருபுறத்தில் அமெரிக்காவோடு நட்பாக இருக்கும் நாடுகள் சீனாவுடன் மேற்படி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட, மறுபுறத்தில் இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்க நலன்சார்ந்து நிற்கும் இந்தியா, இனப்படுகொலையில் ஈடுபட்ட மியன்மார் அரசுடன் உறவைப் பேணி வருகின்றது.
சீனாவைப் பிரதானப்படுத்திய RCEP எனப்படும் ஒப்பந்தத்தில் இலங்கை இல்லாவிட்டாலும், இந்த நகர்வுகள் இலங்கைக்கு அரசியல், பொருளாதார ரீதியில் பெரும் வாய்ப்பாகவே அமைந்துள்ளது. குறிப்பாக சீனாவுடன் ஏற்கனவே செய்துகொண்ட பொருளாதார ரீதியான ஒப்பந்தங்கள், அபிவிருத்தித் திட்டங்களைத் தொடர்ந்து மேற்கொண்டு, இந்தோ- பசுபிக் பாதுகாப்பு விவகாரங்களில் மாத்திரம் அமெரிக்க, இந்திய அரசுகளுடன் நின்றுவிடலாம் என்ற மகிழ்ச்சியானதொரு செய்தி இலங்கை ஒற்றையாட்சி அரசுக்குக் கிடைத்திருக்கின்றது.
பாதுகாப்பு விடயத்தில் ஒத்துழைப்பு வழங்குவதன் ஊடாக, ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக் கோரிக்கையை முற்றாகவே அடக்கிவிடலாமென இலங்கை கருதுகின்றது. அது ஒன்றுதான் இல்ங்கையின் பிரதான நோக்கமாகவும் உள்ளது. அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இலங்கையின் இந்த அணுகுமுறை புரியாதல்ல. ஆனால் தமது நலன்சார் விவகாரங்களுக்காக இலங்கை விட்டுக் கொடுக்கும் நிலையில், ஈழத்தமிழர்கள் தொடர்பாகக் கவனம் செலுத்த வேண்டியதொரு தேவையில்லை என்றே அமெரிக்காவும் இந்தியாவும் கருதுகின்றது.
ஏனெனில் தமிழ்த்தேசியக் கட்சிகள், 2009ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழலில் அதாவது 2010இல் சரத் பொன்சோகாவுடனும் 2015இல் மைத்திரி- ரணில் விக்கிரமசிங்கவுடனும் இணைந்து பயணித்திருக்கின்றன. இது இலங்கை ஒற்றையாட்சி அரசுடன் தமிழ்மக்களும் இணைந்து வாழமுடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறன.
2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஒபாமா அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றபோது இலங்கை அரசு போரை நிறுத்தும் என்றொரு எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் ஈழப்போர் அழிக்கப்பட்டால் மாத்திரமே இந்தோ- பசுபிக் பாதுகாப்பு உள்ளிடட அரசியல். பொருளாதார நலனில் சாதகமானதொரு நிலையை உருவாக்கலாமென ஒபாமா அரசாங்கமும் மன்மோகன் சிங் அரசாங்களும் அப்போது நம்பியிருந்தன. இருந்தாலும் 2009ஆம் ஆண்டு மே மாதததின் பின்னரான சூழலிலேதான் இந்தோ- பசுபிக் பிராந்தியத்தில் சீன அதிக்கம் வலுப்பெற்றிருக்கிறது.
2013இல் கொழும்பு போட் சிற்றி எனப்படும் சர்வதேச நிதி நகரத் திட்டத்திற்கான ஒப்பந்தம், அம்போந்தோட்டைத் துறைமுக அபிவிருத்தி மற்றும் மத்தள விமான நிலைய ஒப்பந்தம், 2014இல் முழு ஆசியவையும் கண்காணிக்கக் கூடிய கொழும்பு மருதானை தாமரைக் கோபுரத் திட்டம், 2020இல் அம்பாந்தோட்டைத் துறைமுக நேரடி முதலிட்டு ஒப்பந்தம். உள்ளிட்ட பல்வேறு பொருளாதாரத் திட்டங்கள் அதற்கான ஒப்பந்தங்களை இலங்கையோடு சீனா கைச்சாத்திட்டிருக்கிறது.
இன்று அமெரிக்காவின் இந்தோ- பசுபிப் பாதுகாப்புத் திட்டத்தைத் தகர்த்தெறியும் வகையில் RCEP எனப்படும் வர்த்தக ஒப்பந்தத்தில் சீனா 15 நாடுகளோடு கைச்சாத்திட்டுள்ளது. இதன் வலியைத் தற்போது அமெரிக்க இந்திய அரசுகளும் இதனை உணர ஆரம்பித்திருக்கின்றன. ஆனால் இந்த இடத்திலே சுழியோடவேண்டிய தமிழ்த்தரப்பு, தேர்தல் அரசியலில் மாத்திரமே கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது.