சில ஆண்டுகளுக்கு முன் வலிகாமம் பகுதியில் பங்குத் தந்தையாக பணிபுரிந்த ஒரு மதகுரு சொன்னார்….. “யாழ்ப்பாணத்தில் அதிகம் தோட்டக் காணிகளைக் கொண்ட ஒரு பிரதேசம் அது. படைத் தரப்பின் ஆக்கிரமிப்புக்குள் அதிகம் தோட்டக் காணிகளை இழந்த ஒரு பிரதேசமும் அது. அப்பிரதேசத்தில் இப்பொழுது விவசாயம் செய்வது அதிகம் முதியவர்களும் நடுத்தர வயதினரும்தான்” என்று.
இளவயதினருக்கு விவசாயத்தில் ஆர்வம் இல்லை. அவர்கள் பெருமளவுக்கு முதலில் படிக்கப் போகிறார்கள். ஆனால் படிப்பையும் முடிப்பதில்லை. இடையில் முறித்துக் கொண்டு லீசிங் கொம்பெனிகளில் வாகனங்களை வாங்கி ஓடுகிறார்கள். எல்லாரும் ஒரேயடியாக ஒரே தொழிலுக்கு செல்வதனால் வாகனங்களை வைத்து உழைக்க முடிவதில்லை. முடிவில் வாகனங்களையும் பறிகொடுத்து முதலையும் பறிகொடுத்து தெருவுக்கு வருகிறார்கள். அவர்களுக்கு விவசாயத்திலும் ஆர்வம் இல்லை. ஏனைய தொழில் துறைகளிலும் ஆர்வம் இல்லை” என்று கூறித் துக்கப்பட்டார்.
அப்பங்குத் தந்தை கூறியதே 2009க்குப் பின்னரான ஒரு பொது தோற்றப்பாடாக மாறி வருகிறதா? பச்சை மிளகாயின் விலை உச்சத்தைத் தொட்ட ஒரு நாளில் திருநெல்வேலிச் சந்தையில் ஒரு மரக்கறி வியாபாரியிடம் கேட்டேன் “என் இந்த விலை ?” என்று. அவர் சொனார் “ஒரு கையில் கைபேசியும் இனொரு கையில் மண்வெட்டியுமாக தோட்டம் செய்ய முடியுமா? இப்பவெல்லாம் பொழுது போக்குக் கூடி விட்டது உழைப்பில் நாட்டம் குறைந்து விட்டது” என்று.
கைபேசியும் மோட்டார் சைக்கிளுமாக பெருந் தொகுதி இளையோரை சந்திகளில் தெருக்களில் காண முடிகிறது. ஆனால் தொழில் துறைகளில் அரிதாகவே காண முடிகிறது. அதிலும் குறிப்பாக பாரம்பரிய தொழில்களில் ஈடுபடுவோரின் தொகை குறைந்து கொண்டே போகிறது. பாரம்பரிய தொழில்களிற் பல சாதித் தொழில்களாக இருப்பது இதற்கு ஒரு முக்கிய காரணம். அதேசமயம் பாரம்பரியத் தொழிலை நவீனப்படுத்தி அதை ஒரு இண்டஸ்ட்ரி ஆக மாற்றி எடுக்க வேண்டும் என்ற ஆர்வமும் இளையோர் மத்தியில் குறைவு.
அண்மைய ஆண்டுகளாக கச்சேரிகளுக்கு முன்னே அரசு ஊழியத்தை கேட்டு ஆர்ப்பாட்டம் செய்யும் பட்டதாரிகளை காணமுடிகிறது. பட்டதாரிகளில் அதிகமானவர்கள் அரசு ஊழியத்துக்கு ஆசைப்படுகிறார்கள். ஏன் ஆசைப்படுகிறார்கள்? ஏனென்றால் கஷ்டப்படாமல் சம்பாதிக்கலாம்; அதிகம் முறியத் தேவையில்லை; முடிவில் ஓய்வூதியம் கிடைக்கும் என்ற காரணங்களால்தான் பெரும்பாலானவர்கள் அரசு ஊழியத்தை நாடுவதாக அவதானிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான ஒரு பின்னணியில் யாழ்ப்பாணத்தில் சாதாரணமாக கூலித் தொழிலுக்கு மட்டுமல்ல மாபிள் பதிப்பது போன்ற நுட்பமான வேலைகளுக்கும் ஆட்களைக் கண்டுபிடிப்பது கடினமாக இருக்கிறது. கூலித் தொழிலுக்கு ஒரு நாளைக்கு 1500 ரூபாய் வரை கொடுக்கப்படுகிறது. எட்டு மணித்தியாலங்கள் வேலை. ஆனால் ஆட்கள் இல்லை. மோட்டார் வாகனங்களுக்கு வயரிங் செய்யும் ஒருவரிடம் நான் முதலில் சென்றபோது அவருக்குத் துணைக்கு நின்றவரை அடுத்த முறை சென்ற பொது காணவில்லை. வேறு ஒரு புதிய ஆள் நின்றார். முன்பு நின்றவர் எங்கே என்று கேட்டேன் “தொழில் பழக வரும் பெரும்பாலானவர்கள் அதில் விசுவாசம் இல்லை. தொழிலைத் எப்படிக் குறுக்கு வழியில் கற்கலாம் என்றுதான் சிந்திக்கிறார்கள். ஒரு தொழிலைத் தவமாகக் கருதி கடுமையாக உழைத்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று சிந்திப்பவர்கள் குறைவு. நோகாமல் எப்படி முதலாளியாக வரலாம் என்று பெரும்பாலானவர்கள் சிந்திக்கின்றார்கள்” என்று. இதையேதான் ஒரு மெக்கானிக்கும் கூறினார்….. “வேலை பழக வரும் இளையவர்கள் இரண்டு நட்டுக்களைக் கழட்டியதும் எப்படி விரைவாக முதலாளியாகலாம் என்று சிந்திக்கின்றார்கள். அது எப்படி முடியும் ? தொழிலாளியாக இருந்து தொழில் பழகாமல் முதலாளியாக வர ஆசைப்படும் ஆட்களே அதிகம்.” என்று.
இது மெக்கானிக் தொழிலுக்கு மட்டுமல்ல பாரம்பரியத் தொழில்களும் உட்பட எனைய எல்லா தொழில் துறைகளுக்கும் பொருந்தும். மாணவராக இராமல் எப்படி ஆசிரியராக வரலாம்? தொண்டராக இராமல் எப்படி தலைவராக வரலாம் என்று சிந்திக்கும் ஒரு போக்கு அதிகரித்து வருகிறது. இப்போக்கினால் ஏற்பட்ட வெற்றிடத்தில் ஒருபகுதி இளையோர் வாள்களோடு திரிகிறார்கள். அல்லது போதைப் பொருட்களுக்கு அடிமைகளாகிறார்கள். கடந்த தீபாவளி தினத்தை முன்னிட்டு இவ்வாறு வாள்வெட்டு குழுக்களால் யாழ்பாணத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டார்கள் என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
இப்போக்கிற்குக் காரணம் என்ன? மிகத் துலக்கமான காரணங்களை கூறலாம். முதலாவது 2009க்கு பின் இளையவர்களை இலட்சியப் பாங்கான ஒரு வாழ்க்கையை நோக்கி வழிநடத்திச் செல்லவல்ல தலைவர்கள் இல்லாமல் போனது. இரண்டாவது ஆயுத மோதல்களுக்கு பின்னரான ஒரு கூட்டு உளவியலின் சீரழிவுகள். மூன்றாவது புலம் பெயர்ந்த தமிழ் மக்களிடமிருந்து வரும் நிதி உதவிகள். இவை மூன்றும் பிரதான காரணங்கள். ஏனைய உப காரணங்களும் உண்டு. இவ்வெல்லாக் காரணங்களினதும் திரட்சியாக இளையோர் மத்தியில் தொழில் முனைவு நாட்டம் குறைந்து கொண்டே போகிறது. கஷ்டப்படாமல் எப்படி மேலே வரலாம் என்று பெரும்பாலானவர்கள் சிந்திக்கின்றார்கள்.
இப்படிப்பட்டதோர் பின்னணியில்தான் அண்மையில் இலங்கை அரசாங்கம் தொழில் முனைவோருக்கு காணிகளை வழங்க முன் வந்தது. அரச தொழில் முயற்சிகள் மற்றும் சொத்துக்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சுக்கூடாக இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டிருக்கிறது. இத் திட்டத்தின் விண்ணப்ப முடிவுத் திகதி கடந்த மாதம் 31ஆம் திகதி என்று முன்பு அறிவிக்கப்பட்டது. எனினும் அது பின்னர் இமாதம் பதினைந்தாம் திகதிவரை நீடிக்கப்பட்டது.
முதலாவதாக ஒரு கோட்பாட்டுப் பிரச்சினையை இங்கு முன்வைக்க வேண்டும். தமிழ் மக்களுக்கு காணி அதிகாரம் இல்லை. மாகாண சபைகளுக்கு சட்டப்படி வழங்கப்பட்ட காணி அதிகாரத்தை கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த எந்த ஓர் அரசாங்கமும் ஏற்கவில்லை. இப்போது இருக்கும் ஜனாதிபதி இந்தியாவில் வைத்து காணி பொலிஸ் அதிகாரங்களை வழங்க மாட்டேன் என்று திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அதாவது தமது தாய்நிலத்தின் காணிகளின் மீது அதிகாரம் இல்லாத ஒரு மக்கள் கூட்டத்துக்கு அவர்களுடைய தாய் நிலத்தின் காணிகளையே அரசாங்கம் பிரித்துக் கொடுக்கப் போகிறது. இது மாகாண சபைகளில் ஏற்கனவே வழங்கப்பட்ட காணி அதிகாரத்துக்கு முரணானது. இதுகுறித்து தமிழ் அரசியல்வாதிகளில் எத்தனை பேர் வாய் திறந்தார்கள்?
ஒரு தேசிய இனம் என்ற அடிப்படையில் தமிழ் மக்களுக்கே உரிய காணிகளை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் அரசாங்கம் அதில் ஒருசிறு பகுதியை தமிழ் மக்களுக்கு பிரித்து தரப்போவதாக கூறுகிறது. காணி அதிகாரம் எனப்படுவது ஒரு மக்கள் கூட்டத்தின் கூட்டுரிமை. காணித் துண்டுகளை இலங்கையில் எங்கேயும் வாங்கலாம் என்பது தனியாள் உரிமை. தமிழ் மக்கள் கேட்கும் காணி அதிகாரம் கூட்டுரிமையின் பாற்பட்டது. இது முதலாவது முக்கியமான விடயம்.
இரண்டாவது விடயம்- காணி அதிகாரம் இல்லை என்பதை ஒரு நடை முறையாக ஏற்றுக்கொண்டு இப்பொழுது அரசாங்கம் தரப்போகும் காணிகளை எப்படிப் பயன்படுத்துவது என்பதைக் குறித்து உத்தி பூர்வமாகச் சிந்திப்பது.
அரச காணிகள் அதிகமுள்ள மாவட்டங்களில் தொழில் முனைவோருக்கு காணிகள் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பை ஏற்று காணிகளுக்காக விண்ணப்பித்தவர்கள் தொகை தொடக்கத்தில் மிகக் குறைவாக இருந்தது. அரசாங்கம் முடிவு திகதியை இம்மாதம் 15ஆம் திகதி வரை நீடித்தது. முடிவுத் திகதிக்கு சில நாட்கள் முன்னதாகவே சில அரசியல்வாதிகள் அறிக்கைகள் விட்டார்கள். ஊடகங்களில் அது தொடர்பான செய்திகள் வெளி வந்தன.
எனினும் சமூக வலைத்தளங்களில் ஏற்கனவே அது தொடர்பான விவாதங்கள் தொடங்கி விட்டிருந்தன. ஆனால் தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசன் போன்ற மிகச் சிலரைத் தவிர பெரும்பாலான தமிழ்க் கட்சித் தலைவர்கள் அது தொடர்பில் தொழில் முனைவோருக்கு பொருத்தமான ஆலோசனைகளை வழங்கியிருக்கவில்லை.
இது விடயத்தில் முதலாவதாக இளையோரை தொழில் முனைவு நாட்டம் உடையவர்களாக மாற்ற வேண்டும். அதற்கு அரசியல்வாதிகளிடம் ஒரு பொருத்தமான அபிவிருத்தித் தரிசனம் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட தரிசனங்கள் இருந்தால்தான் இளையவர்களை தொழில் துறைகளை நோக்கி ஊக்குவிக்கலாம்; ஒருங்கிணைக்கலாம்; தொழில் முனைவோர் படை ஒன்றை உருவாக்கலாம். ஆனால் தமிழ் அரசியல்வாதிகளில் அநேகர் அப்படி எதையும் இதுவரையிலும் செய்திருக்கவில்லை. மாறாக தங்கள் தங்கள் தொகுதிகளில் உள்ள இளையோருக்கு எப்படி அரசு ஊழியத்தை பெற்றுக் கொடுக்கலாம்; அதிலும் குறிப்பாக தனது கட்சி ஆளுக்கு தகுதி குறைவாக இருந்தாலும் எப்படி அரசு ஊழியத்தை பெற்றுக் கொடுக்கலாம் என்று சிந்திக்கும் அரசியல்வாதிகளே தமிழ் மக்கள் மத்தியில் அதிகம் உண்டு.
தான் கொடுக்கும் வேலை தனக்கு வாக்காகத் திரும்பி வரும் என்று சிந்தித்துத் திட்டமிடும் அரசியல்வாதிகள் மத்தியில் தமது இளைய சமூகத்தை எப்படி தொழில் முனைவோராக்கலாம்? என்று சிந்தித்துத் திட்டமிடும் தமிழ் அரசியல்வாதிகள் எத்தனை பேர் உண்டு? இப்படிப்பட்டதோர் வெற்றிடத்தில்தான் வடக்கில் அரச காணிகளுக்காக விண்ணப்பித்தவர்களின் தொகை கிட்டத்தட்ட 50,000 வரை என்று கூறப்படுகிறது. போதிய அளவு தொகை விண்ணப்பிக்க தவறினால் அத்தொகையை தென்னிலங்கையில் இருப்பவர்களை கொண்டு அரசாங்கம் ஈடு செய்யும் என்றும் தமிழ் பகுதிகளில் உள்ள அரச காணிகள் தமிழர்கள் அல்லாதவர்களுக்கு வழங்கப்படும் என்றும் ஒரு பயம் உண்டு.
இது தொடர்பில் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் எதையாவது பேசினார்களா? தமிழ் பகுதிகளில் உள்ள காணிகளை வழங்கும் பொழுது தமிழ் மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்று யாராவது பேசினார்களா? இல்லையே.
ஒரு மூத்த சிவில் அதிகாரி என்னிடம் கேட்டார் “தேர்தலையொட்டி அரசாங்கம் ஒரு லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புத் தருவதாக கூறியது. இப்பொழுது தொழில் துறைகளை ஊக்குவிப்பதற்கு காணி தருவதாகக் கூறுகிறது. இதில் அரசு ஊழியத்துக்காக விண்ணப்பித்தவர்களின் தொகை அதிகமா ?அல்லது காணி வேண்டும் என்று கேட்டு விண்ணப்பித்தவர்களின் தொகை அதிகமா?” என்று.
இதுதான் பிரச்சினை. ஆயுத மோதல்களுக்கு பின்னரான ஒரு சமூகத்தை கூட்டு காயங்களிலிருந்தும் கூட்டு மன வடுகளில் இருந்தும் விடுவித்து அரசியல் உரிமைகளுக்கான போராட்டத்தையும் சாத்தியமான அபிவிருத்தியையும் சமாந்தரமாக முன்னெடுக்கும் அரசியல் பொருளாதார தரிசனங்களை முன்வைத்து இளையோரை ஒன்று திரட்டவல்ல அரசியல்வாதிகள் தமிழ் மக்கள் மத்தியில் எத்தனை பேருண்டு?
தேசியவாதத்தை வாக்குத் திரட்டும் உத்தியாக பயன்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகளே அனேகர். அவர்கள் தமிழ் இளையோரை வாக்குத் திரட்டும் முகவர்களாகவே பார்க்கிறார்கள். அவர்களை தொழில் முனைவோராக மாற்ற எத்தனை தலைவர்களால் முடியும்? தொண்டராக வராமல் எப்படித் தலைவராக வருவது என்று சிந்தித்த ; சிந்திக்கும் தமிழ் அரசியல்வாதிகளில் அநேகர் தமது தொகுதிகளில் உள்ள இளையோரை மாற்றத்தின் முகவர்களாகக் கட்டியெழுப்புவார்களா? அல்லது வாக்கு வேட்டை முகவர்களாகக் கட்டியெழுப்புவார்களா?
- நிலாந்தன்