பிரேசில் நாட்டில் பல்பொருள் அங்காடி பாதுகாவலர்களால் கருப்பினத்தவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெற்கு பிரேசிலில் உள்ள போர்ட்டோ அலெக்ரே நகரத்தில் உள்ள பல்பொருள் அங்காடியில், கருப்பினத்தவரான ஜோவோ அல்பெர்டோ(வயது 40) என்ற நபர் அங்குள்ள பாதுகாவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டார்.
பல்பொருள் அங்காடியின் வாகன நிறுத்துமிடத்தில் நடந்த இந்த சம்பவத்தில் கருப்பினத்தவரான ஜோவோ அல்பெர்டோவை ஒரு பாதுகாவலர் பிடித்துக்கொள்ள மற்றொரு பாதுகாவலர் அவரின் முகத்தில் கடுமையாக தாக்கினார்.
இந்த தாக்குதலில் ஜோவோ அல்பெர்டோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பல்பொருள் அங்காடியில் வேலை செய்துவந்த பெண் ஊழியரை ஜோவோ அல்பெர்டோ தாக்கியதாகவும், அந்த பெண் ஊழியர் கடை பாதுகாவலர்களுக்கு தகவல் கொடுத்ததையடுத்து, கடை ஊழியர்கள் இருவர் அல்பெர்டோவை தாக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜோவோ அல்பெர்டோவை பாதுகாவலர்கள் தாக்குவதை அங்கு நின்றுகொண்டிருந்த ஒரு பெண் தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். அந்த வீடியோ பிரேசில் உள்ளூர் ஊடகங்களில் ஒளிபரப்பப்பட்டது. மேலும், சமூகவலைதளத்திலும் வைரலானது.
இதையடுத்து, கருப்பினத்தவர் மரணத்திற்கு நீதிகேட்டு பிரேசிலின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. சம்பவம் நடைபெற்ற பல்பொருள் அங்காடிக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து நெறுக்கினர். மேலும், நகரின் முக்கிய பகுதிகளில் பேரணியும் நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், ஜோவோ மீது தாக்குதல் நடத்திய பல்பொருள் அங்காடி ஊழியர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். பிரான்சை தலைமையிடமாக கொண்ட அந்த பல்பொருள் அங்காடி நிறுவனம் தனது அங்காடியில் பணியாற்றிய அந்த 2 ஊழியர்களையும் நீக்கியுள்ளது.
ஜோவோ கொலைக்கு கண்டனம் தெரிவித்து பிரேசிலில் போராட்டம் தீவிரமடைந்து வருவதால் போலீசார், ராணுவம் என பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், பிரேசிலில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.