ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் பகுதியில் உள்ள மந்த்ரா ஹோட்டலில் சிறைவைக்கப்பட்டுள்ள 65 அகதிகளுக்கு முறையான உரிமைகளை வழங்கக்கோரியும் அவர்களை விடுவிக்கக் கோரியும் நடந்த போராட்டதில் 150க்கும் மேற்பட்டோர் பங்கேற்றிருக்கின்றனர்.
ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்கள் செயல்படும் பப்பு நியூ கினியா, மற்றும் நவுரு ஆகிய தீவுகளிலிருந்து மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட பல அகதிகள் சரியான சிகிச்சையின்றி அவதிப்பட்டு வரும் நிலையில் இவ்வாறான போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் நிலவி வரும் இச்சூழலில், பொது ஒன்றுக்கூடலுக்கான கட்டுப்பாட்டினைக் கருத்தில் கொண்டு குழுக் குழுவாகப் பிரிந்து போராட்டம் நடந்துள்ளது. அதாவது, 9 பேர் கொண்ட குழு மாறி மாறி 10 நிமிடங்கள் அகதிகள் வைக்கப்பட்டுள்ள ஹோட்டலுக்கு வெளியே நின்று போராட்டம் நடத்தியிருக்கிறது.
10 பேருக்கு மேல் ஒன்றுக்கூட கூடாது என்ற சுகாதார கட்டுப்பாட்டின் அடிப்படையில் ஒவ்வொரு குழுவிலும் 9 பேரை உள்ளடக்கி இப்போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இப்போராட்டத்தினை ஒருங்கிணைத்த Refugee Action Collective என்ற அமைப்பு, தடுப்பில் வைக்கப்பட்டுள்ள அகதிகள் விடுவிக்கப்பட்டு அவர்களுக்கு நிரந்தர பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. அத்துடன், ஆஸ்திரேலிய சமூகத்தில் வாழும் அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு JobSeeker, JobKeeper உள்ளிட்ட உதவித்தொகையினை அரசு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.