சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படத்தின் போஸ்டர் மற்றும் டீசரை பகிர்வதை நிறுத்த வேண்டும் என விலங்குகள் நல வாரியம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் சிம்புவின் புதிய படம் ஈஸ்வரன். சுசீந்திரன் இப்படத்தை இயக்கி உள்ளார். இதன் மோஷன் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மோஷன் போஸ்டரில் சிம்பு கையில் பாம்பு பிடித்திருப்பதைப் போன்ற காட்சி இடம்பெற்றது. இதனால் பிரச்சினை எழுந்தது. அது கிராபிக்ஸில் உருவாக்கப்பட்டது என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் கிராபிக்ஸில் உருவாக்கப்பட்ட பாம்பாக இருந்தாலும் திரைப்படங்களில் விலங்குகளைப் பயன்படுத்த, சித்தரிக்க விலங்குகள் நல வாரியத்திடம் அனுமதி பெற வேண்டியது கட்டாயம். ஆனால் ‘ஈஸ்வரன்’ படக்குழுவினர் இதற்கான அனுமதியைப் பெறாததால், வெளியிடப்பட்டிருக்கும் போஸ்டர் மற்றும் டீசரை பகிர்வதை நிறுத்த விலங்குகள் நல வாரியம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக விலங்குகள் நல வாரியம், தயாரிப்பு நிறுவனத்துக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில், ” ‘ஈஸ்வரன்’ திரைப்படத்தின் போஸ்டர் மற்றும் டிரெய்லரில் கிராபிக்ஸில் உருவாக்கப்பட்டிருக்கும் பாம்பினை, இந்திய விலங்குகள் நல வாரியத்திடம் தடையில்லாச் சான்றிதழ் (என்.ஓ.சி) பெறாமல் பயன்படுத்தியிருக்கிறீர்கள் என்பது எங்களுக்குத் தெரியவந்துள்ளது.
இது விதிமீறலாகும். எனவே, உடனடியாக இந்த டிரெய்லர் மற்றும் போஸ்டரை பகிர்வதை நிறுத்த வேண்டும். இந்தக் கடிதம் கிடைக்கப்பெற்ற 7 நாட்களுக்குள், ஏன் உரிய அனுமதி பெறவில்லை என்பதற்கான விளக்கத்தை படக்குழு அளிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளது. இதனால் ஈஸ்வரன் படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.