கோலான் குன்றில் வெடிபொருட்களை புதைத்த சிரிய படையினர்

இஸ்ரேல் சிரியாவில் சிரிய இராணுவ இலக்குகள் மீதும் ஈரானிய இலக்குகள் மீதும் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள கோலான் குன்றுகள் மீது வெடிபொருட்கள் வைக்கப்பட்டதை தொடர்ந்து சிரியாவின் வடபகுதியில் உள்ளநிலைகள் மீதும் சிரியாவில் உள்ள ஈரானிய நிலைகள் மீதும் வான்தாக்குதலை மேற்கொண்டதாக  இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் வன்முறை காரணமாக சிரிய படையினர் மூவர் கொல்லப்பட்டுள்ளனர் ஒருவர் காயமடைந்துள்ளார் என சிரிய செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
சிரிய இராணுவநிலைகளையும் ஈரானின் குட்ஸ்படையணியையும் இலக்குவைத்துள்ளதாக தெரிவித்துள்ள இஸ்ரேல் அவர்களின் ஆயுதகளஞ்சியங்கள் இராணுவ வளாகங்கள் மற்றும் சிரியாவின் விமான எதிர்ப்பு ஆயுதங்கள் ஆகியவற்றை தாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளது.

கோலான் குன்றுகளில் இஸ்ரேல் பகுதியில் சிறிய வெடிபொருட்களை சிரியா படையினர் வைத்து சென்றுள்ளனர் எனவும் இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.

இது சிரியாவிற்குள் ஈரானின் ஆக்கிரமிப்பு அதிகரிப்பதை வெளிப்படுத்தியுள்ளது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.


செவ்வாய்கிழமை இஸ்ரேலின் எல்லை பகுதிகளிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் கோலான் குன்றுகளில் வெடிபொருட்களை வைப்பதை சகித்துக்கொள்ளப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.

இது பாரதூரமான சம்பவம் நாங்கள் இதனை அலட்சியம் செய்ய முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலிற்குள் நடக்கும் அனைத்திற்கும் சிரியாவே பொறுப்பு என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் சிரியாவிற்குள் தொடர்ச்சியாக விமான தாக்குதலை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேற்குலகின் ஆதரவுடன் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள அறிவிக்கப்படாத போர் எனஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்