3 முக்கிய மாற்றத்தை கொண்டு வந்த ஆஸ்திரேலியா

பிக் பாஷ் டி20 லீக்கில் சுவாரஸ்யத்தை அதிகரிக்க 3 முக்கிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு.

இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்டுதோறும் ஐபிஎல் டி20 லீக்கை நடத்துவதுபோல் ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டும் பிக் பாஷ் லீக் என்ற பெயரில் டி20 லீக்கை நடத்தி வருகிறது.
பிக் பாஷ் டி20 லீக்கில் சுவாரஸ்யத்தை அதிகரிக்க அடிக்கடி விதிமுறைகளை மாற்றம் செய்யும். கிரிக்கெட்டில் டாஸ் சுண்டுவதற்குப் பதிலாக பேட்டை தூக்கிப்போட்டு மேடா? பள்ளமா? எனக்கேட்கும் முறையை அறிமுகப்படுத்தியது.
இந்த சீசனில் மூன்று முக்கிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. அதை பார்ப்போம்
1. பவர் சர்ஜ் (Power surge)
தற்போது டி20 போட்டியில் முதல் 6 ஓவர் பவர்-பிளேயாக கருதப்படுகிறது. இனிமேல் முதல் 4 ஓவர் பிளே-யாக கருதப்படும். அதன்பின் பேட்டிங் செய்யும் அணி 11-வது ஓவருக்குப்பின் தேவைப்படும் இடத்தில் மீதமுள்ள இரண்டு ஓவர்களை பவர் பிளே-யாக தேர்வு செய்து கொள்ளலாம். இந்த இரண்டு ஓவர்களும் பவர் சர்ஜ் என அழைக்கப்படும்.
2. முக்கிய காரணி வீரர் (X-factor player)
முக்கிய காரணி வீரர் என்பது மாற்று வீரரை இரண்டு அணியிலும் அனுமதிப்பது. ஆனால், இந்த வீரர் முக்கியத்துவம் வாய்ந்த தாக்கத்தை ஆட்டத்தில் ஏற்படுத்த முடியாது.
முதல் பாதி ஆட்டத்திற்குப் பிறகுதான் மாற்று வீரர் களம் இறங்க முடியும். ஒரு வீரர் மாற்று வீரராக களம் இறங்கினார், அவர் ஒரு பந்து வீச்சாளராக இருந்தால், ஒரு ஓவர் மட்டுமே பந்து வீச முடியும். அவர் பேட்ஸ்மேனாக இருந்தால், அதற்கு முன் களம் இறங்கியிருக்கக் கூடாது.
3. பாஷ் பூஸ்ட் (Bash boost)
வெற்றிபெறும் ஒவ்வொரு அணிக்கும் 3 புள்ளிகள் வழங்கப்படும். ஆனால், கூடுதலாக ஒரு புள்ளிகளும் பெற வாய்ப்புள்ளது.
உதாரணத்திற்கு, முதலில் பேட்டிங் செய்யும் அணி 10 ஓவர்களில் 80 ரன்கள் அடித்திருந்து, 20 ஓவரில் 170 ரன்கள் சேர்த்தால், 2-வது பேட்டிங் செய்யும் அணி முதல் 10 ஓவரில் 70 ரன்கள் அடித்து 170 ரன்னை சேஸிங் செய்தாலும், 2-வது பேட்டிங் செய்யும் அணிக்கு 3 புள்ளிகள் வழங்கப்படும்.
அதேவேளையில் முதலில் பேட்டிங் செய்த அணி தோல்வியடைந்தாலும், முதல் பாதி ஆட்டத்தில் கூடுதல் ரன்கள் அடித்திருந்ததால் ஒரு புள்ளி வழங்கப்படும். இது பாஷ் பூஸ்ட் என அழைக்கப்படுகிறது.