ஜோ பைடன் எச்சரித்தார்- ஹிலாரி ஆதரித்தார் – தனது நூலில் பராக் ஒபாமா
ஒசாமாபின்லேடனை கொல்வதற்கான நடவடிக்கை குறித்து ஜோ பைடன் தன்னை எச்சரித்தார் என முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தனது நாளை வெளியாகவுள்ள புரொமிஸ்ட் லான்டில் தெரிவித்துள்ளார்.
நேவி சீல்ஸ் நடவடிக்கை குறித்த கலந்தாலோசனையின் போது ஜோ அந்த நடவடிக்கையை முன்னெடுக்கவேண்டாம் என கேட்டுக்கொண்டார் என ஒபாமா எழுதியுள்ளார்.
2011 மே மாதம் முதலாம் திகதி ஒபாமா நேவிசீல்ஸ் குழுவை பாக்கிஸ்தான் அனுப்பியிருந்தார்.
தோல்வியால் ஏற்படக்கூடிய மோசமான விளைவுகள் குறித்து பைடன் எச்சரித்திருந்தார், குறிப்பிட்ட வீட்டினுள் பின்லேடன் இருப்பதை புலனாய்வு பிரிவினர் உறுதியாக உறுதிப்படுத்தும்வரை தாக்குதல் குறித்த முடிவை ஒத்திவைக்கவேண்டும் என பைடன் கேட்டுக்கொண்டார் என பராக் ஒபாமா எழுதியுள்ளார்.
ஜனாதிபதியாக நான் எடுத்த ஒவ்வொரு முடிவிலும் நான் உறுதியாகயிருந்தது போன்று, நடைமுறையில் உள்ள மனோநிலைக்கு எதிராக கடினமான கேள்விகளை கேட்கும் ஜோவின் இயல்பினை நான் பாராட்;டினேன், எனது சொந்த உள்மனவிவாதங்களுக்கான இடத்தை தருவதற்கான ஆர்வம் காரணமாகவே அவர் அவ்வாறு கேள்வி எழுப்பினார்என ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.
டெசேர்ட் ஒன் ஒத்திகையின் போது பைடன் வோசிங்டனில் இருந்தவர் என்பது எனக்கு தெரியும் எனவும் ஒபாமா எழுதியுள்ளார்.
ஈரானில் பணயக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த அமெரிக்கர்களை மீட்பதற்கான நடவடிக்கையே டெசேர்ட் ஒன். இந்த நடவடிக்கையின் போது ஹெலிக்கொப்டர் விபத்துக்குள்ளாகி விழுந்து நொருங்கியதுடன் எட்டு அமெரிக்க படையினர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவது குறித்த ஜிம்மி கார்ட்டரின் கனவுகளை தவிடுபொடியாக்கியது.
ஒசாமாவிற்கு எதிரான நடவடிக்கையின் போது பாதுகாப்பு செயலாளராக விளங்கிய ரொபேர்ட் கேட்ஸ் , எவ்வளவு சிறப்பாக திட்டமிட்டாலும் இவ்வாறான நடவடிக்கைகள் தோல்வியடையலாம், என எனக்கு தெரிவித்தார் எனவும் ஒபாமா எழுதியுள்ளார்.
இது நடவடிக்கையில் ஈடுபடவுள்ள படையணிக்கு ஆபத்தை ஏற்படுத்துவதுடன் , இந்த நடவடிக்கை தோல்வியடைந்தால் அது ஆப்கானில் அமெரிக்க படையினர் மேற்கொண்டுள்ள நடவடிக்கை மீது கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் பாதுகாப்பு செயலாளர் குறிப்பிட்டார் என ஒபாமா எழுதியுள்ளார்.
அது நிதானமான-நன்கு நியாயமான மதிப்பீடு என ஒபாமா தெரிவித்துள்ளார். சீல்விசேட பிரிவினர் ஆப்கானிஸ்தானின் ஜலாலாபாத்தில், எங்கள் இறுதி உத்தரவிற்காக காத்துக்கொண்டிருந்தவேளை வெள்ளைமாளிகையில் கடும் ஆலோசனையை மேற்கொண்டிருந்த நானும் ஒசாமாவிற்கு எதிரான நடவடிக்கை வெற்றிபெறுவது 50-50 வீதமே சாத்தியம் என நம்பினேன் எனவும் எழுதியுள்ளார்.
சிஐஏ தலைவர் லியோன் பனேட்டா,உள்நாட்டு பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் பிரெனன்,முப்படைகளின் பிரதானி அட்மிரல் மைக்முல்லென் ஆகியோர் ஒசாமாவிற்கு எதிரான நடவடிக்கையை முன்னெடுக்கவேண்டும் என்றனர் எனவும் பராக் ஒபாமா தனது நூலில் தெரிவித்துள்ளார்.
இராஜாங் செயலாளர் ஹிலாரி கிளின்டன் நடவடிக்கை வெற்றிபெறுவதற்கான சாத்தியக்கூறுகள் 51- 49 என கருதியதுடன் நடவடிக்கையை முன்னெடுக்கவேண்டும் என்ற தரப்பிற்கு ஆதரவாகயிருந்தார் எனவும் பராக் ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.
ஹெலிக்கொப்டர்கள் புறப்பட்டதும் ஜோ பைடன் எனது தோளில் தனது கையை வைத்து அழுத்தினார், பாராட்டுக்கள் பொஸ் என்றார் என ஒபாமா குறிப்பிட்டுள்ளார்.