உண்மை நீதி மற்றும் இழப்பீடுகளை வழங்க சிறிலங்கா  அரசாங்கம் உறுதியாக இருக்க வேண்டும்!

உள்நாட்டு மோதலினால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோருக்கு உண்மை நீதி மற்றும் இழப்பீடுகளை வழங்க சிறிலங்கா  அரசாங்கம் உறுதியாக இருக்க வேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் நாடாளுமன்றில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் சர்வதேச மன்னிப்பு சபை நேற்று (16) இந்தக்கோரிக்கையை விடுத்துள்ளது.

இது தொடர்பில் சர்வதேச மன்னிப்பு சபையின் பொதுச்செயலாளர் அலுவலக பணிப்பாளர் டேவிட் கிரிஃபித்ஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இடைக்கால நீதி நடைமுறைக்கு வழிவகுத்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை தீர்மானத்தில் இருந்து கடந்த பெப்ரவரி மாதம் சிறிலங்கா  அரசாங்கம் விலகிக்கொண்டது.

இதனையடுத்து காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் மற்றும் இழப்பீடுகளுக்கான அலுவலகம் ஆகியவற்றின் செயற்பாடுகள் தொடர்பில் கரிசனை ஏற்பட்டுள்ளது.

மோதலினால் மோசமாக பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான உறவினர்கள் மற்றும் தப்பிப்பிழைத்தவர்கள், அவர்கள் நீண்டகாலமாக போராடிய உண்மை நீதி மற்றும் இழப்பீடுகளை வழங்குவதற்கு இந்த இரண்டு அலுவலகங்களும் பொறிமுறைகளாக இருந்தன.

எனவே நாட்டின் வரலாற்றில் இந்த இருண்ட காலத்தின் அத்தியாயத்தை மூடுவதற்கு இரு நிறுவனங்களும் திறம்பட செயற்பட அனுமதிக்கப்பட வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு பயனுள்ள தீர்வை வழங்குவதற்காக அந்த இரண்டு அலுவலகங்களுக்கும் போதுமான நிதியை வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக சிறிலஙகா  அரசாங்கம் ஒதுக்கவேண்டும்.

எனவே, குறித்த இரண்டு அலுவலகங்களுக்கும் போதுமான வளங்களை அளித்து அவற்றை முழுமையாக இயக்கச்செய்யவேண்டும்” என்று அந்த அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.